சனி, 13 மே, 2017

ஒரு காபிக்கு அக்கப்போரா

ஒரு காபிக்கு அக்கப்போரா 


என்றைக்கும் இல்லாத திருநாளாக அன்று 5 மணிக்கே முழிப்பு வந்துவிட்டது . அந்த விபரீத ஆசையும் தோன்றியது . காபி குடிக்கும் ஆசை ..!
பிரிட்ஜிலேயே முதல் சோதனை தொடங்கியது . 3 கிண்ணங்களில் வெள்ளை திரவம் இருந்தது . முகர்ந்து பார்த்ததில் ஒன்று மோர் என கண்டுபிடித்து நிராகரித்துவிட்டேன் . மீதமுள்ள இரண்டு பாலில் ஒன்று பசும்பால் , ஒன்று பாக்கெட் பால் . பசும்பாலை காபிக்கும் , பாக்கெட் பாலை தயிருக்கு பயன்படுத்துவது வழக்கம்.

பாலின பாகுபாடுகளை எதிர்க்கும் எண்ணம் உள்ளவன் என்பதால் , எந்த பாலாக இருந்தாலும் சரி என ஒரு பாலை எடுத்து அடுப்பில் வைத்தேன் . பால் கொதிப்பதற்குள் முன்னேற்பாடுகளை செய்வது அவசியம் என்பதால் ஒரு கிண்ணம் , டம்ளர் , நாட்டு சர்க்கரை டப்பா எல்லாம் அருகில் எடுத்துவைத்து .. ஆபரேஷனுக்கு தயாரானேன்.

சிறிய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பில்டரில் முதல் நாளே காபித்தூள் போட்டு , டிகாஷன் ரெடியாக இருக்கும். அதை எடுத்து டம்ளரில் ஊற்ற முயற்சித்த போது பில்டரை திறக்க முடியவில்லை . சில வித்தைகளை காட்டி முயற்சி செய்த போது , பில்டரின் கீழ் பாகம் கீழே விழுந்து டிகாஷன் கோவிந்தா .. இந்த களேபரத்தில் பாலும் சிறிது பொங்கி வழிந்து ...

ஒரு வழியாக எல்லாவற்றையும் துடைத்து , துடைத்த துணியையும் அலசி காயவைத்து ( பல்ப் வாங்கிய ஆதாரங்கள் இருக்க கூடாது! ) பில்டரில் இருந்த காபித்தூளிலேயே சுடுதண்ணி ஊற்றி மீண்டும் டிகாஷன் எடுத்து காபி போட்டு குடித்து பார்த்தால் .. ஸ்ட்ராங்கே இல்லை, 2வது டிகாஷன் என்பதால் தண்ணி மாதிரி இருந்தது . ம்ம்ஹ்ம் ... விடக்கூடாது , ஒரு நல்ல காபி குடித்தே ஆகவேண்டும் .

பில்டரில் இருந்த காபித்தூளை ரகசியமாக கொட்டிவிட்டு ( ஆதாரம் அழிப்பு முக்கியம் ) , பிரெஷ்ஷாக காபி தூளை போட்டு , சுடுதண்ணீர் ஊற்றினால் டிகாஷன் இறங்கவே இல்லை .! காபி தூளை அழுத்திவிட ஒரு அமுக்குவான் இருக்கும் . அதை கண்டுபிடிப்பதெல்லாம் நடக்காத காரியம் என்பதால் , கிடைத்த ஸ்பூனை வைத்து ஒருவழியாக டிகாஷன் எடுத்து , காபி போட்டு .... இந்த முறை காபி அருமையாக இருந்தது .

கிண்ணம் டம்ளர் என பாத்திரங்களை கழுவி , எல்லாவற்றையும் அதன் இடங்களில் செட்டில் செய்து .. டிவியை ஆன் செய்து அமர்வதற்கும் , மனைவி எழுந்து வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது. கடிகாரத்தை பார்த்தபோது 6.30 என்றது.

ரகசிய குறிப்பு :


கடைக்கு கிளம்பும்போது காபி வேணுமா என மனைவி கேட்டாள் . சரிம்மா என கூறிவிட்டு சட்டையை எடுத்து போட்டுகொண்டு , தலையை சீவி முடிப்பதற்குள் காபி டம்ளரை நீட்டினாள் .

- மோகன், சேலம்