வியாழன், 23 ஆகஸ்ட், 2012

அணு விஞ்ஞானி நாராயணசாமி !

அணு விஞ்ஞானி நாராயணசாமி !

முயற்சி செய்தால் முடியாதது இல்லை என்பதற்கு உதாரணம் இவர்..


புதுச்சேரியில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார்.

படித்தது ஆறாம்வகுப்பு..

சரியான வேலை இல்லாததால் புதுவை காங்கிரஸ் கோஷ்டி ஒன்றில் இணைந்தார் ..

படிப்படியாக வளர்ந்து எம்பி ஆனார்...

வேறு ஆள் கிடைக்காததால் மந்திரி ஆனார்...

முக்கால்வாசி அரசியல்வாதிகளின் கதை இதுதானே என்று கேட்காதீர்கள் ...  

இதற்கு பிறகுதான் இருக்கிறது வரலாறு..



கூடங்குளத்தில் தேவையில்லாமல் ஒரு அணு உலையை கட்டிவிட்டு,

''கவன்பிளவில் கால் நுழைத்து ஆப்பசைத்துக் கொண்ட குரங்குதனைப்போல'' மாட்டிக்கொண்ட மத்திய அரசு ,அதை சமாளிக்க சரியான ஆளை தேடியது. அப்பத்தான் கண்ணில் பட்டார் நம்ம நாராயணசாமி...


அணு உலையை ஆறு ரவுண்ட் வந்தார்...

ஆறே மாதத்தில் அணு விசயங்களை கரைத்து குடித்தார்..

இந்தியாவிற்கு புதிய அணு விஞ்ஞானி கிடைத்தார்..

கூடங்குளம் போராட்ட குழுவின் கேள்விகளுக்கு அப்துல்கலாம் முதல் ரஷ்ய விஞ்ஞானிகள் வரை பதில் சொல்ல தடுமாறுகையில் , அசால்ட்டாக சமாளிக்கிறார் அ.வி(அணு விஞ்ஞானி).நாராயணசாமி...


அதுவும் நம்மைப் போன்ற பாமர மக்களுக்கும் புரியும் வகையில், ''இன்னைக்கு உலையில் யுரேனியம் போட்டாச்சு,15 நாள்ல கரண்ட் வந்திரும்னு எதோ அரிசிய உலைல போட்டாச்சு 15 நிமிசத்தில பொங்கிரும்''; ங்கிற மாதிரி எளிமையா சொல்றார் அ.வி.நாராயணசாமி...  

வெறும் ஆறாவது மட்டும் படித்து , சொந்த முயற்ச்சியால் அணு விஞ்ஞானியாக மாறிய நாராயணசாமியை,  விரைவில் இந்திய அணுசக்தி துறை தலைவராக வருவதற்கு வாழ்த்துங்கள்.. 

எனவே நாராயணசாமியை விட்டு பதில் சொல்வது , போராட்டக் குழுவினரை அவமானப்படுத்துவதற்காக என யாரும் நினைக்கவேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

சனி, 18 ஆகஸ்ட், 2012

ரா.கி.ரங்கராஜன் மறைவு

ரா.கி.ரங்கராஜன் மறைவு

பிரபல எழுத்தாளரும், குமுதம் இதழின் ஆரம்ப கால தூண்களில் ஒருவருமான ரா.கி.ரங்கராஜன் சென்னையில் நேற்று [18.8.2012] காலமானார். தமிழ் எழுத்து உலகிற்கும், என்னை போன்ற வாசகர்களுக்கும் பேரிழப்பாகும்.


என் புத்தக ஆர்வத்தை துவக்கி வைத்தவர் ..

என்னுடைய புத்தக ஆர்வத்திற்கும், இன்று  வீட்டில்  சுமார் 500 நூல்களுடன் ஒரு மினி நூலகம் அளவிற்கு நூல்கள் வைத்திருப்பதற்கும் ரா.கி.ரங்கராஜன் ஐயா ஒரு முக்கிய காரணம் . 15 ஆண்டுகளுக்கு முன்பு என் அப்பா சேலம் கன்னங்குறிச்சி அரசு பள்ளியில் பணிபுரிந்த போது , நூலகத்தில் இருந்து ஒரு புத்தகம் கொண்டுவந்தார். அதன் பெயர் பட்டாம்பூச்சி.


 ஹென்றி ஷாரியர் என்பவர் எழுதிய நூலை தமிழில் மொழிபெயர்த்திருந்தார் ரா.கி.ர .
எதேச்சையாக அதை படிக்க துவங்கிய என்னால் ,முழுமையாக படிக்காமல் கீழே வைக்க முடியவில்லை. படிக்கும் ஒவ்வொருவரையும் உலுக்கி எடுக்கும் அந்த நூல் பல நாட்கள் மனதை ஆக்கிரமித்திருந்தது. அதன் பாதிப்பிலேயே புத்தகங்களை தேடி தேடி வாங்க ஆரம்பித்தேன் .


பொன்னியின் செல்வன் போல தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த நூல்களில் ஒன்று பட்டாம்பூச்சி. படிக்கவும்,பாதுகாக்கவும்,பரிசளிக்கவும் ஒரு பட்டாம்பூச்சியை இன்றே வாங்குங்கள். அதுதான் அந்த மனிதருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி.

பட்டாம்பூச்சி
மயிர் கூச்செறிய வைக்கும் மானிட சாசனம் -ஹென்றி ஷாரியர்

தமிழில் ரா.கி.ரங்கராஜன்
விலை . 250.00

நர்மதா பதிப்பகம்
No 10 1st Floor, Pondy Bazaar Adjacent To T Nagar Head Post Office, Nana Street, T Nagar, Chennai - 600017

ஆன்லைனில் வாங்க ...
http://discoverybookpalace.com/products.php?product=PattamPoochi%252dRa.Ki.Rangarajan%252dbuy-tamil-books

எண்ணமும் எழுத்தும்

மோகன்

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

ஹெல்மெட்டும் எம்பெருமான் முருகனும்.. !

வாரியார் சுவாமிகள் ஸ்டைலில் படிக்கவும்..



HEL என்றால் நரகம்...

MET என்றால் சந்திப்பது....

HELMET போடாமல் வண்டி ஓட்டினால் நரகத்துக்குத் தான் போவாய் என்று அர்த்தம் ...


HELMET போட்டுக்கொண்டு வண்டி ஒட்டுங்கள்..

உனக்கான நேரம் வரும்போது எம்பெருமான் முருகன் உங்களை சொர்க்கத்திற்க்கே அழைத்துக்கொள்வான்.