புதன், 30 டிசம்பர், 2015

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

 

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


 

20ம் 16ம் இளமையின் அடையாளம்

2016 இல் வளமையான எதிர்காலம் ..

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

- மோகன் சேலம்

திங்கள், 21 டிசம்பர், 2015

மோகன் சினிமா விருதுகள் 2015

மோகன் சினிமா விருதுகள் 2015


ஒவ்வொரு ஆண்டும் என் ரசனையின் அடிப்படையில் சினிமா விருதுகளை அறிவிக்கிறேன். அதன்படி இதோ வெற்றிகரமாக ஆறாம் ஆண்டாக மோகன் சினிமா விருதுகள்....



சிறந்த படம் காக்காமுட்டை ( மணிகண்டன் )

பாகுபலி ( SS . ராஜமௌலி )

குற்றம்கடிதல் ( பிரம்மா )



இயக்குனர் மணிகண்டன் ( காக்காமுட்டை ) ,
கதை – SP ஜனநாதன் ( புறம்போக்கு ) , 49'O ( ஆரோக்யதாஸ் )

திரைக்கதை மோகன்  ராஜா ( தனி ஒருவன் ) ,R . ரவிக்குமார் ( இன்று நேற்று நாளை)

வசனம் ஜெயமோகன் (பாபநாசம் ) , மதன்கார்க்கி ( பாகுபலி )

வசனம் சிறப்பு விருது - சிம்புதேவன் ( புலி, ஆங்கிலம் கலக்காத வசனங்களுக்காக  )


ஒளிப்பதிவு –  மணிகண்டன் (காக்காமுட்டை ) ,சத்யன் சூர்யன் ( மாயா )

படத்தொகுப்பு புவன் ஸ்ரீனிவாசன் (டிமாண்டி காலனி ) , லியோ ஜான் பால் ( இன்று நேற்று நாளை )

பின்னணி இசை - AR ரஹ்மான் ( ஐ ), சந்தோஷ் நாராயணன் ( 36 வயதினிலே ) , ரோன் ஈதன் யோகன் (மாயா )


பாடலாசிரியர் பூக்களே சற்று ஓய்வெடுங்கள் ( ஐ , மதன் கார்க்கி )

மலர்கள் கேட்டேன் ( வைரமுத்து , ஓ காதல் கண்மணி )

உனக்கென்ன வேணும் சொல்லு ( தாமரை , என்னை அறிந்தால் )

 பாடகர் கருப்பு நெறத்தழகி ( வேல்முருகன் , கொம்பன் )
 பாடகி –  ஐல ஐல ஐ  ( நடாலியே டி லுக்கியோ , ஐ ) , நமிதாபாபு ( அலுங்குறேன் , சண்டிவீரன்) 
ஹிட் பாடல் : ஆலுமா டோலுமா ( வேதாளம் )



நடனம் பிரேம் ரக்ஷித் (மனோகரி , பாகுபலி )

கலை சாபு சிரில் ( பாகுபலி )

 ஒப்பனை கிறிஸ்டியன் டின்ஸ்லே , டொமினி டில்  ( ஐ )
 சண்டை பயிற்சி அனல் அரசு& பீட்டர் ஹெய்ன்  (ஐ  ) , கணேஷ்குமார் ( உறுமீன் )


நடிகர் விஜய் சேதுபதி (புறம்போக்கு ) , பிரபாஸ் ( பாகுபலி ) அதர்வா ( ஈட்டி )

நடிகை ஜோதிகா ( 36 வயதினிலே ) , நயன்தாரா ( மாயா,நானும் ரௌடிதான் ) , அனுஷ்கா ( இஞ்சி இடுப்பழகி )

துணை நடிகர் சத்யராஜ் (பாகுபாலி )
துணை நடிகை சாந்திமணி (காக்காமுட்டை ), ஆஷா சரத் (பாபநாசம் ) 


நகைச்சுவை சூரி ( கத்துக்குட்டி )

கோவை சரளா (காஞ்சனா - 2 )

வில்லன் அரவிந்த் சாமி ( தனி ஒருவன் )

குழந்தை நட்சத்திரம் விக்னேஷ் , ரமேஷ் ( காக்காமுட்டை ) அஜய் ( குற்றம்கடிதல் )


சிறந்த தயாரிப்பு – R .ராம்குமார் ( கத்துக்குட்டி )

சிறந்த பொழுதுபோக்கு படம் - தனி ஒருவன் ( மோகன் ராஜா )

சுறா விருதுகள்


அதிகம் எதிர்பார்க்க வைத்து அட்டர் பிளாப் ஆன படத்திற்கு சமீப கால உதாரணம் ''சுறா '' . எனவே ஒவ்வொரு ஆண்டும் சிறந்த மொக்கை படத்திற்கு சுறா பெயரில் விருது வழங்கப் படும் .



இந்த ஆண்டின் சிறந்த மொக்கைக்கான  ''சுறா விருது '' 


   படம்   - மாஸ் ( வெங்கட் பிரபு )

                சகலகலாவல்லவன்  ( சுராஜ் )

  நடிகர் ​- GV பிரகாஷ்குமார் ( திரிஷா இல்லனா நயன்தாரா )

  நடிகை - ஹன்சிகா  (ஆம்பள )


மொக்கை தொகுப்பாளர் : பிரியங்கா ( சூப்பர் சிங்கர் பைனல் , விஜய் டிவி )

மொக்கை டிவி  நிகழ்ச்சி - சூப்பர் குடும்பம் ( சன் டிவி )

சனி, 31 அக்டோபர், 2015

சேலம் தினம்

சேலம்_தினம்‬


1866 ஆம் ஆண்டு சேலம் நகராட்சி உருவாக்கப்பட்டது. இன்று ( 1.11.2015 ) சேலம் நகராட்சி உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் ஆகிறது . அதை ஒட்டி இன்று சேலம் தினம் கடைபிடிக்கபடுகிறது .

சேர மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்த சேலம் பின் மைசூர் சாம்ராஜ்யத்தின் கீழ் வந்தது. போரில் தோற்ற திப்புசுல்தானிடம் செய்துகொண்ட ஒப்பந்தப்படி சேலம் மாவட்டம் கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் வந்தது. அதன் பின்னரான சேலத்தின் வளர்ச்சியில் ஆங்கிலேயர்களுக்கு முக்கிய பங்கு உண்டு ..

இன்றளவும் ஆங்கிலேயர்களின் பெயரிலேயே உள்ள சேலம் பகுதிகளின் வரலாறு இதோ...

1. 1853 முதல் 1862 வரை சேலம் கலெக்டராக இருந்த ஹேரி அகஸ்டஸ் பிரட்ஸ் [Harry Augustus Bretts] நினைவாக கலெக்டர் ஆபீஸ் முதல் முள்ளுவாடி கேட் வரையிலான சாலைக்கு பிரட்ஸ் ரோடு என பெயரிடப் பட்டது.

2.1870 முதல் 1881 வரை கலெக்டராக இருந்த C .T .லாங்லி (C.T.LONGLY) நினைவாக செவ்வாய்பேட்டை மார்க்கெட் பகுதி சாலைக்கு லாங்லி ரோடு என பெயரிடப் பட்டது.

3. சேலத்தின் மொத்த வியாபார பகுதி இட நெருக்கடியான இடத்தில் செயல் பட்டு வந்தது.1914 முதல் 1919 வரை கலெக்டராக இருந்த லீ ( Leigh) , தனியாக ஒரு மார்கெட் பகுதியை உருவாக்கினார் . அதற்க்கு அவர் பெயரே லீ பஜார் என சூட்டப்பட்டது.

4.1857 முதல் 1866 வரை சேலம் மாவட்ட நீதிபதியாக இருந்தவர் ஜே.டபுள்யூ.செரி (J.W.Cherry) . நீதி துறைக்கென சேலம் மாவட்டம் முழுவதும் கட்டிடங்கள் கட்டினார் . சிறப்பாக பணியாற்றிய அவரின் நினைவாக சேலம் அஸ்தம்பட்டி முதல் வள்ளுவர் சிலை வரை உள்ள சாலைக்கு செரி ரோடு (Cherry Road) என பெயரிடப்பட்டது.

5. காய்கறி , பால் வியாபாரம் செய்யும் மக்களுக்காக அப்போது கலெக்டராக இருந்த பால் (PAUL ) ஒரு மார்கெட் பகுதியை உருவாக்கினார் . அவரின் பெயரிலேயே இன்றும் பால் மார்கெட் என்றே அழைக்கப் படுகிறது.

6. இன்றைய கருவாட்டுப் பாலம் பகுதியில் வசித்துவந்த கீழ்தட்டு மக்களின் குடிசைகள் வெள்ளம் வரும் போதெல்லாம் அடித்து செல்லப்பட்டன. அப்போது காவல்துறை அதிகாரியாக இருந்த ஜான்சன் (JOHNSON) என்பவர் அந்த மக்களுக்காக ஒரு பேட்டையை (குடியிருப்பு ) உருவாக்கினார் . அது இன்றும் அவர் பெயரால் ஜான்சன்பேட்டை என்று அழைக்கப்படுகிறது.

7.தமிழகத்தின் பழமையான சோடா கம்பெனி சேலத்தில் ஆங்கிலேய வியாபாரி வின்சென்ட் (VINCENT) என்பவர் உருவாக்கிய வின்சென்ட் சோடா கம்பெனி . பின் இந்தியர் வசம் வந்தது. இன்றும் அந்த கம்பெனி இருந்த பகுதி வின்சென்ட் என்றே அழைக்கிறோம்.

இவை மற்றும் அன்றி இன்று உள்ள லைன் ரோடு , பென்சன் லைன் , மிலிட்டரி ரோடு , ஜட்ஜ் ரோடு , பேர்லேண்ட்ஸ் போன்ற பெயர்கள் ஆங்கிலேயர்கள் வைத்தவை .

ஆங்கிலேயருக்கு பிறகு , ராஜாஜி , சுதந்திரபோராட்ட வீரர் விஜயகோபாலாசாரி போன்ற தலைவர்கள் , எம்ஜியார், கருணாநிதி , கண்ணதாசன் போன்றோரை உருவாக்கிய மாடர்ன் தியேட்டர் சுந்தரம் ... போன்ற பல தலைவர்கள் சேலத்திற்கு பெருமை சேர்த்தனர்.

நம்ம சேலம் - நம்ம பெருமை

தொகுப்பு : மோகன்,சேலம்

திங்கள், 12 அக்டோபர், 2015

சயாம் மரண ரயில்

சயாம் மரண ரயில் 


1942 . இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்த சமயம். இந்தோனேசியா , மலேசியா , சிங்கப்பூர் , தாய்லாந்து போன்ற நாடுகளை புயல் வேகத்தில் கைப்பற்றியது ஜப்பான். அடுத்து பர்மா வழியாக பிரிட்டிஷ் இந்தியாவை கைப்பற்ற திட்டமிட்டது. ஆனால் ஆறுகளும் , அடர்ந்த காடுகளும் உள்ள பர்மா வழியே ஆயுதங்களும் யுத்த தளவாடங்களும் கொண்டுசெல்ல முடியவில்லை . எனவே தாய்லாந்தின் காஞ்சனாபுரியில் இருந்து பர்மாவின் தான்பியூசாயாட் என்ற இடம் வரை 415 கிமி தூரத்திற்கு ரயில் பாதை அமைக்க திட்டமிட்டனர். அதுவும் ஒரே ஆண்டில் முடிக்கவேண்டும்.

இதற்காக மலேசியா , சிங்கப்பூரில் இருந்த தோட்டத் தொழிலாளர்கள் ( தமிழர்கள் ) , பர்மியர்கள், சயாமியர்கள் ,ஆங்கிலேய யுத்த கைதிகள் வலுக்கட்டாயமாக பணி அமர்த்தப் பட்டனர் . சுமார் 1.2 லட்சம் தமிழர்கள் , 30000 ஆங்கிலேயர்கள் உட்பட 3 லட்சம் பேர் . 1942 ஜூன் முதல் 1943 அக்டோபர் வரை நடந்த இந்த பணியில் ஜப்பானியர்களின் கொடூர தண்டனை , கடுமையான வேலை , தோற்று நோய்கள் போன்றவற்றால் சுமார் 2 லட்சம் பேர் மரணம் அடைந்தனர். 1.2 லட்சம் தமிழர்களில் 1 லட்சம் பேர் இறந்தனர். 

இதைவிட மிகவும் குறைவான இழப்புகளை சந்தித்த இங்கிலாந்து , ஆஸ்திரேலியா , அமெரிக்கா போன்றவை யுத்ததிற்கு பிறகு ஜப்பான் மீது உரிய நடவடிக்கை எடுத்தது. 1957 இல் 'Bridge on the River Kwai' என்ற பெயரில் படமாகவும் வந்து. இன்றளவும் அங்குள்ள கல்லறைகளை பராமரிக்கிறார்கள்.

ஆனால் தமிழர்கள்... இந்திய அரசிடம் இன்றும் முறையான ஆவணம் இல்லை. மலேசிய அரசும் இறந்தவர்கள் தோட்டத் தொழிலார்கள் என்பதால் அதிகம் கண்டுகொள்ளவில்லை. ஒரே ஆண்டில் 1 லட்சம் தமிழர்கள் கொல்லப் பட்டது குறித்து எந்த அரசியல்வாதியும் பேசியது இல்லை. மனித வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட தேவையில்லாத கொடூர திட்டமாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.



இந்த ரத்தமும் மரணமும் நிறைந்த வரலாற்றை அழுத்தமான ஒரு காதலுடன் அட்டகாசமான நாவலாக எழுதி உள்ளார் சண்முகம் . இதை படிப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை ...

சயாம் மரண ரயில்
ஆசிரியர் : சண்முகம்
தமிழோசை பதிப்பகம்,
கோயமுத்தூர்-641 012.
தொலை பேசி - 9486586388

ஆன்லைனில் வாங்க....

 http://discoverybookpalace.com/products.php?product=சயாம்-மரண-ரயில்

புதன், 9 செப்டம்பர், 2015

ராஜாவின் இசையில் இவர்களின் கடைசி படங்கள் ..


1. வைரமுத்து - காதல் பரிசு ( 1987 )
2. K . பாலச்சந்தர் - புதுப் புது அர்த்தங்கள் ( 1989 )
3. பாரதிராஜா - நாடோடித் தென்றல் ( 1992 )
4. மணிரத்னம் - தளபதி ( 1991 )
5. P .வாசு - காக்கை சிறகினிலே ( 2000 )


6. ரஜினிகாந்த் - வீரா ( 1994 )
7. கமல்ஹாசன் - மும்பை எக்ஸ்பிரஸ் ( 2005 )
8. விக்ரம் - பிதாமகன் ( 2003 )
9. விஜய் - கண்ணுக்குள் நிலவு ( 2000 )
10. அஜித் - தொடரும் ( 1999 )

புதன், 2 செப்டம்பர், 2015

துணி துவைக்க எவ்வளவு நேரம் ஊறவைக்கிறீர்கள்...

துணி துவைக்க எவ்வளவு நேரம் ஊறவைக்கிறீர்கள்...

 

என் மனைவி காலையில் எழுந்தவுடன் துணியெல்லாம் எடுத்து சோப்புத்தூள் போட்டு ஊறவைத்து விடுவார். பிறகு நேரம் கிடைக்கும் போது மாலையோ அல்லது அடுத்த நாளோ எடுத்து வாஷிங் மெஷினில் போடுவார். " இவ்வளவு நேரம் எதற்கு ஊறவைக்கிறாய் . துணி வீணாக போய்விடாதா " என நான் கேட்பேன். "உங்களுக்கு என்ன தெரியும் , பேசாம போங்க" என்பார்.

இது குறித்து P&G நிறுவன சோப் பிரிவு (ARIEL) அதிகாரி ஒருவரிடம் கேட்டேன். " இப்போது தயாரிக்கப்படும் சலவை சோப் , சோப்பு தூள் எல்லாமே தற்போதைய அவசர உலகிற்கு தக்கவாறு தயாரிக்கப் படுகின்றன. எனவே 30 நிமிடங்கள் ஊறவைத்தால் போதுமானது. அதிகபட்சம் 2 மணி நேரம் இருக்கலாம். அதற்கு மேல் ஊறவைத்தால் துணிகள் வீணாகும் . அதுவும் காட்டன் சர்ட் , பேன்ட்கள் FADE ஆகும் வாய்ப்பு உண்டு " என்றார்.
அவர் சொன்னது எனக்குப் புரிந்தது . இதோ இதை படிக்கும் உங்களுக்கும் புரியக்கூடும். ஆனால் மனைவியிடம் இதைப் பற்றி சொன்னால் .. மீண்டும் அதே டயலாக் தான்..

"உங்களுக்கு என்ன தெரியும் , பேசாம போங்க" !

‪#‎பொண்டாட்டி‬ சொன்னா கேட்டுக்கணும்...!

கமல் படங்களும் - இசையும்

கமல் படங்களும் - இசையும் 


இளையராஜாவின் தீவிர ரசிகரான கமலின் கடைசி படங்களில் இளையராஜா இசை இல்லை. இத்தனைக்கும் ஹேராம் படத்தில் L .சுப்ரமணியம் இசையில் பாடல்கள் எல்லாம் படமாக்கப் பட்ட பிறகு கருத்துவேறுபாட்டால் அவர் விலகினார். கடைசியில் ராஜாவிடம் சரணடைந்தார். அவர் ஏற்கனவே படமாக்கப்பட்ட வாய் அசைவுக்கு ஏற்ப வேறு ட்யூன் போட்டு கொடுத்தார். இது உலக அளவில் யாரும் செய்யாத சாதனை .!

2000 க்கு பிறகு வந்த கமல் படங்களும் ( தமிழ் மட்டும் ) இசையும் ..



1. ஹேராம் - இளையராஜா
2. தெனாலி - AR ரஹ்மான்
3.ஆளவந்தான் -ஷங்கர் இஷான் லாய்
4. பார்த்தாலே பரவசம் - AR ரஹ்மான்
5. பம்மல் K சம்பந்தம் - தேவா
6. பஞ்ச தந்திரம் - தேவா
7. அன்பே சிவம் - வித்யாசாகர்
8. விருமாண்டி - இளையராஜா
9. வசூல்ராஜா MBBS - பரத்வாஜ்
10. மும்பை எக்ஸ்பிரஸ் - இளையராஜா

 
11. வேட்டையாடு விளையாடு - ஹாரீஸ் ஜெயராஜ்
12. தசாவதாரம் - ஹிமேஷ் ரேஷ்மியா
( பின்னணி இசை - தேவி ஸ்ரீ பிரசாத் )
13. உன்னைப்போல் ஒருவன் - ஸ்ருதிஹாசன்
14. மன்மதன் அம்பு - தேவி ஸ்ரீ பிரசாத்
15. விஸ்வரூபம் - ஷங்கர் இஷான் லாய்
16. உத்தமவில்லன் - ஜிப்ரான்
17. பாபநாசம் - ஜிப்ரான்
18. தூங்காவனம் - ஜிப்ரான்
19. விஸ்வரூபம் 2 - ஜிப்ரான் 


19 படங்களில் 11 இசைஅமைப்பாளர்கள். ராஜாவுக்கு பிறகு 4 படங்களில் தொடர்ந்து இசை அமைக்கிறார் ஜிப்ரான்.....!

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

முகமது ஹாரிஸ்

இன்று - ஆகஸ்ட் 22


*சென்னை நகரம் உருவான நாள் ( 22.8.1639 )
*BBC தொலைக்காட்சி தொடங்கப் பட்ட நாள்
*ஜெயா தொலைக்காட்சி  தொடங்கப் பட்ட நாள்
*பழம்பெரும் நடிகர் TS பாலையா பிறந்தநாள்
*நடிகர் சிரஞ்சீவி பிறந்த நாள்


இந்த சிறப்பு வாய்ந்த நாளில் பிறந்த நாள் காணும் தொழிலதிபர், காந்தியவாதி , சிந்தனையாளர், எங்கள் அட்மின் நண்பர் முகமது ஹாரிஸ்  அவர்களை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.



குறிப்பு 1 : கடும் வேலைப் பணி காரணமாக அண்ணார் பேஸ்புக்கில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளதால் அவரை வாட்ஸ் அப்பில் வாழ்த்துமாறு கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்த விரும்புபவர்களுக்கு நெம்பர் இன்பாக்ஸில் வழங்கப்படும்.

குறிப்பு 2 : அவர் கடந்த ஆண்டும் இதே நாளில் பிறந்த நாள் கொண்டாடினார் என்பது குறிப்பிடத் தக்கது.!!!

புதன், 12 ஆகஸ்ட், 2015

மிளிர் கல்

மிளிர் கல்‬



கண்ணகியின் சிலம்பில் இருந்த மாணிக்க கல் தான் கோவலன் கொலைக்கும் , கண்ணகி மதுரையை எரித்ததற்கும், சிலப்பதிகாரம் என்ற காப்பியத்திற்கும் காரணம். 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் நடந்த ரத்தின கற்கள் வியாபாரம் , கண்ணகி சென்ற வழித்தடங்கள் வழியே பயணிக்கிறது கதை .
அதே நேரத்தில் இன்றைய ரத்தின வியாபாரத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் , தமிழகத்தில் கற்கள் கிடைக்கும் இடங்கள் போன்றவற்றை ஒரு பேராசிரியரின் பார்வையில் பதிவு செய்கிறார் ஆசிரியர் இரா. முருகவேள். 

சிலப்பதிகாரத்தின் பல்வேறு சம்பவங்களை எப்படி நடந்திருக்கும் என இரண்டு பேர் விவாதம் செய்வது போல கொண்டு போகிறார் முருகவேள் . கண்ணகி , கோவலன் பெயர் எப்படி வந்திருக்கும் , கண்ணகி ஏன் அந்த பாதை வழியே சென்றாள் , இன்றும் கொங்கு மண்டலத்தில் ரத்தினத்தை தேடி அலையும் மனிதர்கள்,பராசுர நிறுவனங்கள் .. என சிலப்பதிகார காலத்தையும் இன்றைய காலத்தையும் சுவாரஸ்யமாக இணைக்கிறார் ஆசிரியர். ஆர்வம் உள்ளவர்கள் படித்துப் பாருங்கள்.

மிளிர் கல்

இரா. முருகவேள்
பொன்னுலகம் பதிப்பகம்
திருப்பூர்
விலை: ரூ. 200

இணையத்தில் வாங்க....
http://www.panuval.com/milir-kal

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

ஒரு ‪சோலாபூரி‬ 80 ரூபாய்

ஒரு சோலாபூரி‬ 80 ரூபாய் 


சேலத்தில் உள்ள பிரபல சைவ ஓட்டலில் சோலாபூரி சாப்பிட்டேன்.சோலாபூரி என்பது 3 பூரிகள் சேர்ந்த அளவிற்கு சற்று பெரிய பூரி . சிறிய கப்பில் சென்னா மசாலாவும் சிறிது சட்னியும் குடுத்தார்கள். பிறகு ஒரு வெஜ் தோசை , ஒரு காபி . 190 ரூபாய் பில் , 10 ரூபாய் டிப்ஸ்.



சோலாபூரி 80 ரூபாய் போட்டிருந்தார்கள். + டேக்ஸ் தனி . இந்த ஓட்டலுக்கு ஒரு பூரிக்கு என்ன செலவாகும் என தெரிந்து கொள்ள விரும்பினேன். சமையல் நிபுணர்களிடம் விசாரித்தபோது ஒரு கிலோ மாவில் 15 சோலாபூரிகள் தயாரிக்கலாம். 15 சோலாபூரிக்கு சுமார் 750 கிராம் சுண்டல் , 400 மிலி எண்ணெய் மற்றும் தேவையான மசாலா பொருட்கள் மற்றும் எரிபொருள் சேர்ந்து 200 ரூபாய் செலவாகிறது. 

அதே நேரத்தில் பெரிய ஓட்டல் என்பதால் சம்பளம் , வாடகை மற்றும் நிர்வாக செலவுகள் 15 பூரிகளுக்கு அதே 200 ரூபாய் செலவாகும் . மொத்தம் 400 ரூபாய் அசல் ஆகிறது . விற்பனை செய்வது 80*15 = 1200ரூபாய்க்கு . அதாவது அசலைவிட 2 மடங்கு லாபம் . சராசரியாக 100 ரூபாய் பில்லில் 33 ரூபாய் அசல் , 67 ரூபாய் லாபம்.

சேலத்தில் என்று இல்லை . இன்று எல்லா பிரபல சைவ ஓட்டல்களும் நிறைய கிளைகளை நகரங்களிலும் நெடுஞ்சாலைகளிலும் திறந்து கொண்டே இருக்கிறார்கள் . ஒவ்வொரு கிளைக்கும் 50 லட்சம் முதல் ஒரு கோடி செலவாகிறது . எனவே எல்லா பெரிய ஓட்டல்களுமே இந்த 33%+67% பார்முலாவை கடைபிடிக்கின்றன.

சனி, 1 ஆகஸ்ட், 2015

சந்துருவுக்கு என்னாச்சு

சந்துருவுக்கு என்னாச்சு

 - யெஸ்.பாலபாரதி


சிறுவயதில் ஊனமுற்றவர்களை நொண்டி என்றே அழைத்தோம். அவர்கள் ஏதாவது தவறு செய்தால் "மொண்டிக்கு முன்னூறு குசும்பு " என எங்கள் ஊரில் சொல்வார்கள். சற்று வளர்ந்தபின்பு அவர்களை ஊனமுற்றவர்கள் என குறிப்பிட பழகினேன். இன்று "மாற்றுத் திறனாளி" என்ற சொல் சரியானதாக தோன்றுகிறது .

அதுபோலவே 10 ஆம் வகுப்பு படிக்கும் அவர்கள் அறிமுகம் ஆனார்கள். ஏன் அப்படி இருக்கிறார்கள் என நண்பனிடம் கேட்டேன் . அது " ஒம்போது " அப்படித்தான் இருக்கும் என்றான் . அலி என்றும் சொல்வார்கள். விவரம் தெரிந்த பின் திருப்பூரில் சமையல் தொழில் செய்யும் சிலரை சந்தித்தபோது " அரவாணிகள் " என சொல்ல பழகினேன் . தோழி
Living Smile Vidya அவர்களின் " நான் வித்யா " நூலை படித்த போது அவர்கள் மீதான மதிப்பு ஏற்பட்டது , இன்று திருநங்கைகள் என சொல்லும் அளவுக்கு.

அது போலவே சிறுவயதில் மன பாதிப்புக்கு உள்ளானவர்களை லூசு என்றும் , மெண்டல் என்றும் நினைத்தேன். வளர்ந்த பின் அவர் "சற்று மனநலம் பாதித்தவர்" என சொல்ல பழகினேன். ஆனால் இன்று பல்வேறு மரபணு கோளாறுகளால் மனநல பாதிப்பில் குழந்தைகள் பிறப்பது அதிகமாகிவிட்டது. இன்று அவர்களை "சிறப்பு குழந்தைகள் (special children)" என அழைக்கிறோம்(றேன்) . ஒவ்வொன்றிலும் அனுபவம் பெற்ற பிறகே எனக்கு சரியான புரிதல் ஏற்பட்டது .

அதை எல்லோருக்கும் புரிய வைக்கும் ஒரு சிறிய முயற்சி தான் நண்பர் பாலபாரதியின் " சந்துருவுக்கு என்னாச்சு " என்ற இந்த சிறிய நூல். பள்ளிகூட புத்தகத்தில் உள்ள ஒரு பாடத்தின் அளவுதான் இந்த நூல் . ஆனால் கண்டிப்பாக பாட திட்டத்தில் வைக்க வேண்டிய பதிவு . 6 ஆம் வகுப்பு பாட நூலில் வைக்கலாம்.

"சந்துருவுக்கு என்னாச்சு"
- யெஸ்.பாலபாரதி
பாரதி புத்தகாலயம் வெளியீடு
போன் :044-24332924

வியாழன், 16 ஜூலை, 2015

ஆடி பிறப்பு

 ஆடி பிறப்பு


"ஆடியிலே கட்டிக்கிட்டா
சித்திரைக்கு புள்ள வரும்
ஆகாது ஆகாது மச்சானே ....
இது தோதான தை மாசம் வச்சானே "


அதாகப்பட்டது புது மாப்பிள்ளை , புது பொண்ணுங்களே... சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை நம்ம ஊரில் கோடை காலங்களில் குறிப்பாக சித்திரை மாதத்தில் காலரா போன்ற கொள்ளை நோய்கள் தாக்கின. குறிப்பாக பிறக்கும் பச்சிளங் குழந்தைகளை பலி வாங்கியது. எனவே சித்திரையில் குழந்தை பிறப்பை தடுக்க ஆடி மாதத்தில் தம்பதிகளை பிரித்து வைத்தனர்.

ஆனால் இன்றைய நவீன மருத்துவத்தில் கொள்ளை நோய்கள் எல்லாம் ஒழிக்கப்பட்டு விட்டன. எனவே நியூ மாப்பிள்ளைகளே , 4 , 5 வருஷம் ஆனாலும் விடாம ஆடி அழைப்புக்கு போகும் மாப்பிள்ளைகளே... போனாமா .. 2 நாள் தங்கி விழாவை சிறப்பிச்சுட்டு மனைவியை கையோட கூட்டிட்டு வந்துருங்க..!

"ஆடி மாசம் காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே ...."


ஹேப்பி தலையாடி ...!

குரு பக்தியும் நட்பின் உச்சமும்



கோவை ஜூபிடர் ஸ்டுடியோவில் SM சுப்பையா நாயுடு அவர்கள் இசை அமைப்பாளராக இருந்த பொது அவரிடம் உதவியாளராக சேர்ந்தார் MSV அவர்கள். அப்போது MSV போட்ட சில ட்யூன்களை கேட்டு அசந்து போனார் . அவற்றை தன படங்களில் பயன்படுத்திக் கொண்டார். சில ஆண்டுகளில் ஜூபிடர் ஸ்டூடீயோ சென்னைக்கு மாற்றப்பட்ட போது ,அதன் உரிமையாளரிடம் சுப்பையா நாயுடு அவர்கள் " இந்த பையனையும் ( MSV ) உங்களுடன் கூட்டிசெல்லுங்கள் . இவன் பொக்கிஷம் . நான் கடைசியாக இசை அமைத்த பாடல்கள் எல்லாம் இவன் தான் இசை அமைத்தான் " என்றார். அன்று முதல் MSV வாழ்வில் திருப்பு முனை . 



தன்னை ஏற்றிவிட்ட குருவை MSV என்றும் மறந்ததில்லை . SM சுப்பையா நாயுடுவின் இறுதி காலத்தில் தன் பராமரிப்பிலேயே வைத்துக் கொண்டார். அவர் மறைந்த போது மகன் ஸ்தானத்தில் இருந்து இறுதி சடங்குகளை செய்தார்.

அதே போல் நகைச்சுவை மன்னன் சந்திர பாபு , MSV யின் நட்பும் . நகைச்சுவை நடிகராக , பாடகராக , நடன கலைஞராக தமிழ் திரையில் தனி முத்திரை பதித்த சந்திர பாபு , திரை உலகில் உயிர் நண்பராக நினைத்தது MSV ஐ மட்டுமே. இறுதி காலத்தில் அவர் பல்வேறு சிரமங்களில் இருந்த போது ஆறுதலாக இருந்தார் MSV . ''நான் இறந்தால் நீதாண்டா எனக்கு கொள்ளி வைக்கணும் '' என MSV இடம் சொல்லிக்கொண்டே இருப்பார் சந்திர பாபு . அதே போலவே சந்திர பாபு இறந்தவுடன் அவர் உடல் MSV வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது . MSV தன் நண்பனுக்கு இறுதி சடங்குகள் செய்து கொள்ளி வைத்தார் .

தன் ரத்த உறவு இல்லாத குருவுக்கும் , நண்பனுக்கும் MSV செய்த இறுதி மரியாதை போல வேறு உதாரணமே கிடையாது. இசையை தாண்டி மனிதம் என்றால் என்ன என்பதற்கு உதாரண புருஷர் . !

திங்கள், 13 ஜூலை, 2015

MS.விஸ்வநாதன்

MS.விஸ்வநாதன்‬

 


தமிழிசையின் அடையாளமாய்
ராமமூர்த்தியின் நண்பனாய்
கண்ணதாசன் வாலிக்கு முகவரியாய் 


சவுந்தரராஜன் சுசீலாவுக்கு குரலாய்
எம்ஜியார் சிவாஜிக்கு உயிராய்
ராஜா ரஹ்மானுக்கு ஆசானாய் 


ரசிக பெருமக்களுக்கு
இன்பத்தின் ஊற்றாக
துன்பத்தின் வடிகாலாக 


காதலின் தீபமாக
அன்பாக அறிவுரையாக
தாயாக தத்துவமாக 


உயிராக
உணர்வாக
தமிழாக - வாழும்
உன் இசைக்கு
என்றும் மரணமில்லை ...


போய் வா தமிழிசையே.....


J .மோகன்

வியாழன், 9 ஜூலை, 2015

மதுபானக்‬ கடை

மதுபானக்‬ கடை

சாராய வருமானத்தை நம்பியே அரசு நடப்பதால் மதுவை ஒழிக்க வழியில்லை . ஆனால் முறைபடுத்த முடியும் .

1.வியாபார நேரம் மதியம் 2 முதல் இரவு 10 மணி வரை மட்டும் இருக்கவேண்டும். காலை கட்டட வேலை , கூலி வேலைக்கு செல்பவர்கள் எல்லாம் காலை வேலைக்கு போகும் போதே குடித்துவிட்டு செல்கிறார்கள்.

2. சாதாரணமாக எந்த மதுவை தயாரித்தாலும் இயற்கையாக புளிக்கவைத்து ஆல்கஹால் உருவாக்கப்படுகிறது. ஆனால் தமிழக அரசு மிகக் குறைந்த விலை தருவதால் , தமிழகத்திற்கு தரும் மதுவிற்கு மட்டும் செயற்கை ஆல்கஹால் சேர்க்கப்படுகிறது. பிற மாநில மதுவகைகளை விட தமிழக மது மிக அதிக உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் . எனவே இதை அரசு தவிர்க்க வேண்டும்.

3.அரசு பார்களை மூட வேண்டும். அதே நேரத்தில் கடைக்கு வெளியே குடிக்க அனுமதிக்க கூடாது.

4. கேரளாவில் 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பதில்லை. சிறிய சந்தேகம் இருந்தாலும் அடையாள அட்டையை பார்த்து உறுதி செய்த பின்பே தருகிறார்கள். நம் ஊரில் சின்ன குழந்தை கேட்டால் கூட தருகிறார்கள். நம் ஊரிலும் இதை கட்டாயமாக்க வேண்டும்.

4. டாஸ்மாக்கில் ஆண்டுக்கு 35000 கோடி வியாபாரம் நடக்கிறது. 20000 கோடி லாபம் . உலகிலேயே இவ்வளவு பெரிய வியாபாரத்திற்கு துண்டு சீட்டு கூட தராமல் , பில் போடாமல் விற்பது தமிழகத்தில் மட்டும் தான். கட்டாயம் பில தரவேண்டும்.

5. ஆன்லைன் பில்லிங் முறை கொண்டுவரவேண்டும். அவ்வாறு செய்தால் போலி மது அறவே ஒழிக்கப்படும் . வருமானம் முறையாக அரசுக்கு போய் சேரும்.

6. ஒவ்வொரு கடையிலும் கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும்.

7.காலுக்கு போடும் செருப்பை விற்கும் கடைகள் ஏசி வசதியுடன் சுத்தமாக இருக்கிறது. ஆனால் டாஸ்மாக் கடைகள் மிகக் கேவலமாக உள்ளது .
நகர்பகுதிகளில் அருகருகே உள்ள இரண்டு கடைகளை ஒன்றாக மாற்றி நல்ல கட்டிடங்களுக்கு மாற்றலாம் .குறைந்தது 20 சதவீத கடைகளை குறைக்கலாம்.

8. அதிக ஆல்கஹால் உள்ள மது பானங்களை தடை செய்ய வேண்டும்.

9. குடி போதையில் வாகனம் ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10. கள்ளுக் கடைகளை அனுமதிக்கலாம். விஸ்கி , பிராந்திகளை விட கள்ளு மிகக் குறைந்த தீங்கு தான் .செய்யும் .

11. கூடுதல் விலைக்கு விற்பதன் மூலம் ஊழியர்களும் , மட்ட சரக்கை அனுமதிப்பதன் மூலம் அதிகாரிகளும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். ஆன்லைன் பில்லிங் மூலம் கட்டாயமாக பில் போட்டு விற்கும் போதுதான் இவை தடுக்கப்படும்.

12. கிரானைட் வழக்க்குகள் முடிந்த பின் திரு சகாயம் அவர்களை தமிழக டாஸ்மாக் தலைவராக நியமிக்க வேண்டும்.

13.மேற்கூறிய நேரம் குறைப்பு , கடைகள் குறைப்பு , அரசு பார் மூடல் , பில்லிங் , கேமரா , போலி மது ஒழிப்பு , கள்ளு , மற்றும் சகாயம் சார் ... இவைகளால் சுமார் 50 சதவீத வியாபாரம் குறையலாம் . ஆனால் முறைப் படுத்தப்பட்ட வியாபாரத்தால் 20 சதவீத கூடுதல் வருமானம் கிடைக்கும் .

14.மதுவை முற்றிலும் தடை செய்ய தேவையில்லை .கிட்டத்தட்ட உலகமெங்கும் மது உள்ளது. இந்தியாவில் குஜராத் தவிர எல்லா மாநிலத்திலும் மது உள்ளது. ஆனால் குடியினால் அதிக உயிரிழப்பு , உடல் நல பாதிப்பு , குடும்ப சீர்கேடுகள் தமிழகத்தில் மட்டும் தான் மிக அதிகம் . அதனால் தான் இந்த பதிவு .

15 .அம்மா செய்வீர்களா...!

வியாழன், 28 மே, 2015

நகைக் கடை மோசடி..

நகைக் கடை மோசடி.. 


1.ரேட் கார்டு பார்த்து நகை வாங்குங்கள் .இல்லை என்றால் உங்களை ஏமாற்றி விடுவார்கள் - பிரபு , கல்யாண் ஜுவெல்லர்ஸ்

2.கல் நகைகளுக்கு சேதாரம் 12 சதவீதம் போடுகிறார்கள் . ஆனால் கல்லுக்கு 10 சதவீதம் கழித்து கொள்கிறார்கள். உங்களுக்கு சேதாரம் 2 % மட்டுமே – நடிகை சரண்யா , ஸ்ரீ குமரன் ஜுவல்லரி

3.செய்கூலி , சேதாரம் , கல்லுக்கு தள்ளுபடி எல்லாமே கதை. கல் எடை நீக்கி தங்கத்துக்கு மட்டுமே விலை – கஜானா ஜுவல்லரி 

4.சேட்டு நகை கடைங்க கிப்ட் காட்டி மயக்குவாங்க . கேரளா கடைக்காரங்க சவ்கரியமா வந்து போக பெரிய கடை ன்னு சொல்லுவாங்க . ஆனா பாரம்பரியம் , கைராசி , நம்பிக்கை இதெல்லாம் தான் வேணும். – சுகாசினி மணிரத்னம் , சேலம் AVRஜுவெல்லரி 

5.செய்கூலி , சேதாரம் இல்லை. குறைந்த பட்ச மேக்கிங் சார்ஜ் மட்டுமே. மற்ற கடைகளில் நகை வாங்கி ஏமாறாமல் இருக்க ‘’ தங்கம் வாங்குவது எப்படி “ என்ற புத்தகம் எங்கள் கடையில் இலவசமாக கிடைக்கும் – லலிதா ஜுவல்லரி 

6.இது எல்லாமே பொய் . நேரடியாக தங்கத்தின் விலையிலேயே நகைகளை விற்கிறோம். – சுப் ஜுவல்லரி ( ராஜேஷ் கோல்ட் எக்ஸ்போர்ட்ஸ் )

இவர்கள் சொல்வதை வைத்து பார்த்தால் எல்லோருமே பிராடு எனத் தெரிகிறது. எனவே அந்த காலம் போல பாரம்பரிய நகை ஆசாரிகளிடம் ஆர்டர் கொடுத்து நகை வாங்க வேண்டியது தான்....!

சங்கம்‬ வளர்த்த தமிழ்

சங்கம்‬ வளர்த்த தமிழ் 


தமிழில் தொடங்கி காதலும் காமமும் விளையாடி மீண்டும் தமிழிலேயே முடியும் இந்த பாடல் கவியரசர் கண்ணதாசன் அவர்களை தவிர யாராலும் எழுத முடியாது . இலைமறைக் காயாக அனுபவியுங்கள்...

படம்: துலாபாரம்
பாடல் : கண்ணதாசன்
பாடியவர்கள்:T.M.S, P.சுசீலா

--------------------------------------------------
ஆண் :
சங்கம் வளர்த்த தமிழ்
தாய்ப்புலவர் காத்த தமிழ்
கங்கை கொண்ட எங்கள் தமிழ்
வெல்லும் வெல்லும்
ஒரு காலம் வரும் நல்ல பதில்
சொல்லும் சொல்லும்!

பெண்:
தென்றலுக்குச் சீதனமாய் தேவன் தந்த தமிழ்க்
கன்று குரல் கொண்ட தமிழ் வெல்லும் வெல்லும்
ஒரு காலம் வரும் நல்ல பதில்
சொல்லும் சொல்லும்!

ஆண் :சங்கம் வளர்த்த தமிழ்

பெண்:
செவ்வரி யோடிய கண்களி ரண்டினில்
சேலொடு வேலாட

ஆண்:
இரு கொவ்வை இதழ்களும்
கொத்து மலர்களும்
கொஞ்சி மகிழ்ந்தாட

பெண்:
தெய்வ ரதத்தினைச் சேலை மறைத்திட
சிற்றிடை தள்ளாட
நடை சிந்து படித்தவள்
பந்து பிடித்தனள் முந்தி எழுந்தாட

ஆண்:
சந்தம் நிறைந்த தமிழ்
சங்கீதம் பாடும் தமிழ்
சிந்து பல கொண்ட தமிழ்
வெல்லும் வெல்லும்

பெண்:
தோட்டத்திலே தென்னை இரண்டு
முற்றித் திரண்டு பக்கம் உருண்டு
கண்ணில் தூக்கி நிறுத்திய விருந்து

ஆண்:
அதைத் தொட வோடிய
விழியோ டொரு விழிமோதிய கணமே

பெண்:
எனைத் தாக்கித் தகர்த்தவை இரண்டு
பக்கம் உருண்டு முற்றித் திரண்டு
என்னைத் தாங்க அழைத்திட்ட விருந்து!

பெண்:
காலமெனும் ஆற்றினிலே
கையெடுத்து நீந்திவந்து
கோடிமலர் தேடி வந்து வெல்லும் வெல்லும்

ஆண்:
உயர் கோபுரத்தில் ஏறி நின்று
சொல்லும் சொல்லும்

இருவரும்:
சந்தம் நிறைந்த தமிழ்
சங்கீதம் பாடும் தமிழ்......

 முத்துராமனும் காஞ்சனாவின் கொஞ்சும் விழிகளும்.. வீடியோவை பாருங்கள்..  
https://www.youtube.com/watch?v=DR4s7Psb-EM

சனி, 2 மே, 2015

உமர் முக்தார்

உமர் முக்தார் - நாவலர் ஏ.எம்.யூசுப்

[விலை ரூ.150 ]

கடந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த போராளிகளில் ஒருவர். இத்தாலி அடிமைப் படுத்தி வைத்திருந்த லிபியாவை மீட்க ஆயுதம் ஏந்திய போது இவருக்கு வயது 72. குழந்தைகளுக்கு குர்ஆன் கற்பிக்கும் எளிய ஆசிரியரான உமர் முக்தார் முசோலினியின் அட்டூழியத்திற்கு எதிராக வெகுண்டு எழுந்தது வீர வரலாறு . 



              [உமர் முக்தார் கைது செய்யப்பட்ட போது எடுத்த படம் ]
 
1985 இல் இந்த நூல் வெளிவந்த போது ஒரு இரவு முழுவதும் தூங்காமல் படித்ததாக கலைஞர் கருணாநிதி கூறியுள்ளார்.நான் படித்த போதும் அப்படித்தான் . அந்த அளவுக்கு எளிமையான விறுவிறுப்பான எழுத்துநடை நாவலர் ஏ.எம்.யூசுப் அவர்களுடையது. தற்போது சாஜிதா புக் சென்டர் மறுபதிப்பாக வெளியிட்டுள்ள இந்த நூல் அவசியம் படிக்கப் பட வேண்டியது . உமர் முக்தாரின் வரலாறு சினிமாவாக வந்திருந்தாலும் படிக்கும் போது கிடைக்கும் அனுபவம் தனி....


நூலை வாங்க ...

சாஜிதா புக் சென்டர்
248, தம்பு செட்டி தெரு,
மண்ணடி,
சென்னை - 600001.
போன் : 044-25224821.
email : shajithabookcentre@yahoo.com

இலக்கிய சோலை பதிப்பகமும் இந்த நூலை ( பாலைவன சிங்கம் உமர் முக்தார் என்ற பெயரில் ) பதிப்பித்துள்ளது. இதை ஆன்லைனில் வாங்க ,

 https://www.nhm.in/shop/100-00-0001-491-1.html

செவ்வாய், 31 மார்ச், 2015

சில்ட்ரன் ஆப் ஹெவன்

சில்ட்ரன் ஆப் ஹெவன்


விஜய் டிவியில் போடும் டப்பிங் படங்கள் தான் உலக சினிமா என்ற அளவிற்குதான் ஞானம் இருந்தது . ரா.கி.ரங்கராஜனின் மொழி பெயர்ப்பில் பட்டாம்பூச்சி படித்த பிறகு அதை சினிமாவாக பார்க்கும் ஆசை வந்தது. பாப்பிலோன் (Papillon) என்ற அந்த படத்தை தேடிபிடித்து பார்த்த போது புத்தகத்தில் படித்த அளவுக்கு ஈர்க்கவில்லை .

பிறகு நபர் ஒருவரின் பரிந்துரையில் கொரிய இயக்குனர் கிம் கி டுக் அவர்களின் ''ஸ்ப்ரிங் சம்மர் பால் வின்டர்'' பார்த்த பிறகு தான் உலக சினிமா என்றால் என்ன என்பது புரிந்தது. ஈரானிய இயக்குனர் மஜீத் மஜிடி அவர்களின் ''சில்ட்ரன் ஆப் ஹெவன்'' பற்றி பல முறை கேள்வி பட்டிருந்தும் இப்போது தான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. 


கூலி தொழிலாளி அப்பா, உடல்நலம் சரியில்லாத அம்மா, 8 வயது பையன் , 6 வயது பெண். தன் சகோதரியின் ஷூ வை தைத்து கொண்டு வரும் போது தொலைத்து விடுகிறான். அப்பாவுக்கு தெரிந்தால் திட்டுவார் மேலும் புது ஷூ வாங்க வசதி இல்லை . எனவே ஒரே ஷூவை மாற்றி மாற்றி இருவரும் போட்டுக் கொண்டு ( ஈரானில் பெண்கள் பள்ளி காலையும், ஆண்கள் பள்ளி மதியமும் இயங்கும் ) பள்ளிக்கு செல்கிறார்கள். ஒரு ஓட்ட பந்தயத்தில் 3 ஆம் இடம் வந்தால் ஷூ பரிசு என அறிவிக்கிறார்கள். தங்கைக்கு ஷூ வாங்கி தர போட்டியில் கலந்து கொள்கிறான். என்ன ஆகிறது என்பது மீதி கதை.

அன்பு , பாசம் , வறுமை , இயலாமை , பொறுப்பு , நேர்மை .. இதையெல்லாம் இந்த சின்னஞ்சிறு சிறுவர்களின் வழியாக பார்க்கும் போது மனம் நிறைகிறது. படத்தின் இயக்கம் , ஒளிப்பதிவு பற்றியெல்லாம் கூறும் அளவிற்கு இன்னும் ஞானம் வரவில்லை. இன்னும் சில முறை பார்க்கவேண்டும். நீங்களும் ஒருமுறை பாருங்கள்...

சனி, 14 மார்ச், 2015

அங்க பிரதக்ஷணம்



சோழ நாடு. மாலை நேரம் .. 


அரண்மனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த அம்மன் கோவிலை வலம் வந்து கொண்டிருந்தார் மன்னர் . அரண்மனை தலைமை வைத்தியர் மன்னரை காண வந்தார்.

“ வாருங்கள் வைத்தியரே  

“ வணக்கம் மன்னா.. தங்கள் உடல்நிலை தற்போது எப்படி இருக்கிறது..?

“அருமையாக உள்ளது . எல்லாம் உங்களால் தான் . எப்படி குணப்படுத்தினீர்கள். எனக்கு குணமானதும் சொல்வதாக சொன்னீர்கள். இப்போது சொல்லுங்கள் “

“ கூறுகிறேன் மன்னா... நீங்கள் சில மாதங்களுக்கு முன் படுத்த படுக்கை ஆகிவிட்டீர்கள் . நான் எவ்வளவோ முயற்சித்தும் குணம் ஆகவில்லை. உங்களுக்காக நிறைய வைத்திய சாஸ்திர நூல்களை ஆராய்ந்தேன். அதில் தான் இந்த முறையை கண்டுபிடித்தேன். நம் உடலின் சில பகுதிகளில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் நம் நரம்பு மண்டலத்தை தூண்ட முடியும். சீன தேசத்தில் சிறிய ஊசிகளை உடலெங்கும் குத்தி சிகிச்சை செய்கிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் மிகவும் எளிய முறையை வடிவமைத்து உள்ளனர். 

சீரான புள்ளிகள் அமைக்கப்பட்ட குறிப்பிட்ட ரக கருங்கல்லில் அதிகாலையில் சில முறை உருள வேண்டும். அது போல சில நாட்கள் செய்தால் நரம்புகள் தூண்டப் பட்டு நோய்கள் குணமாகும். அதே நேரத்தில் வெறுமனே தங்களை கல்லில் உருள சொன்னால் யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

நம் ஊர் அம்மன் மீது தங்களுக்கு மிகவும் பக்தி உள்ளது என அறிவேன். எனவே நம் ஸ்தபதி அவர்களிடம் கூறி அதே மாதிரி சக்தியான அம்மன் கோவில் ஒன்றை அரண்மனை வளாகத்தில் நிறுவ சொன்னேன். அதன் பின்னர் கல் தச்சரிடம் கூறி மருத்துவ குணம் வாய்ந்த கருங்கல் பலகைகளை கருவறையை சுற்றி அமைக்க சொன்னேன். நான் குடுத்த சில மூலிகைகளை தடவிக் கொண்டு நீங்கள் அங்க பிரதக்ஷணம் செய்தீர்கள். அம்மன் மீது நீங்கள் கொண்டிருந்த பக்தியும் , கருங்கல்லின் சக்தியும் சேர்ந்து தங்களை குணப்படுத்தியது.’’

“ ஆஹா அற்புதம்.. அற்புதம் ... இன்னும் இதில் வேறு விசேஷம் உண்டா வைத்தியரே...

“ உண்டு மன்னா... அம்மை நோய் கண்டவர்கள் , குணமாகும் தருணத்தில் உடலில் வேப்பிலை சுற்றி ஈர உடையுடன் இடமிருந்து வலமாக அங்க பிரதக்ஷணம் செய்தால் அம்மை முற்றிலும் குணமாகும். தினமும் வெறும் காலில் சில சுற்றுகள் வலம் வந்தால் கால் நரம்புகள் தூண்டப்படும். சிறிது நேரம் பத்மாசன முறையில் அமர்திருந்தால் கூட பலன் கிடைக்கும்.
“அருமை ... ஆனால் இதை வைத்திய சாலையிலேயே செய்யலாமே ... கோவில் எதற்கு.. “

“ என்னதான் மருந்து கொடுத்தாலும் நம்பிக்கை முக்கியம். இறைவனிடம் நம்பிக்கை வைத்து செய்யும் போது மனம் ஒருநிலைப் படுத்தப்படும்

“ மிக்க நன்று வைத்தியரே... நம் சோழ தேசத்தில் உள்ள எல்லா ஆலயங்களிலும் இதை உடனே நடைமுறை படுத்துங்கள். அதே நேரத்தில் இவ்வளவு விவரங்களை கூறவேண்டாம் . பாமர மக்களுக்கு புரியாது. இறைவன் மீது நம்பிக்கை வைத்து செய்தால் உடல் நலன் பெறும் என மட்டும் கூறுங்கள் “

“ அப்படியே ஆகட்டும் மன்னா “

[கால இயந்திரத்தில் சென்று இந்த உரையாடலை கேட்டது – மோகன்,சேலம்.]

இன்று நாம் கோவிலில் அங்க பிரதக்ஷணம் செய்வதும், வலம் வருவதும் , சாமி கும்பிட்டபின் சிறிது நேரம் அமர்ந்திருப்பதும் மேற்சொன்ன காரணத்தால்தான். ஆனால் கருங்கல்லை மறந்துவிட்டு, டைல்ஸ் இல் வலம் வருகிறோம் என்பதை நான் மன்னரிடம் சொல்லவில்லை .