புதன், 1 நவம்பர், 2017

சேலம் மாவட்டம் - வரலாறு

சேலம் மாவட்டம் - வரலாறு


1.கிமு 3 ஆம் நூற்றாண்டு : பழனி முருகன் கோவிலை உருவாக்கிய போகர் எனும் சித்தர் சேலம் கஞ்சமலை பகுதியில் வாழ்ந்ததாக சித்தர் பாடல்கள் கூறுகின்றன. அதே காலகட்டத்தில் சேலம் பகுதியில் புத்தம், ஜைன மதங்கள் பரவ தொடங்கின.

2.கிபி 1ஆம் நூற்றாண்டு : 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ரோமானியர்களுடன் சேலம் வணிகத்தில் ஈடுபட்டு இருந்தது. ரோம பேரரசர் டைபிரீஸ் உருவம் பொறித்த நாணயங்கள் சேலம் கோனேரிபட்டி அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

3.2ஆம் நூற்றாண்டு : பாண்டியர்களின் ஆளுகைக்கு சேலம் உட்பட்டது. நெடுஞ்செழியன் கணைக்கால் இரும்பொறையின் வரலாற்று குறிப்புகள் கொல்லிமலையில் கிடைத்துள்ளன. இந்த காலத்தில் பறம்பு மலையை ஆண்ட வள்ளல் பாரியை எதிர்த்து மூவேந்தர்களும் சேலம் பகுதியில் நீண்ட காலம் தங்கி இருந்தனர். போரில் இறந்த பாரியின் மகளை சேலம் உத்தமசோழபுரத்தில் உள்ள கோவிலில் வைத்து அவ்வையார் மணம் செய்து கொடுத்தார். அந்த கோவிலில் இன்றும் அவ்வையார் சிலை உள்ளது.

4.4ஆம் நூற்றாண்டு முதல் 7 ஆம் நூற்றாண்டு வரை சுமார் 300 ஆண்டுகள் பல்லவர்களின் ஆட்சி நடந்தது .8 ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களின் ஆட்சியையும் , அடுத்த 200 ஆண்டுகள் மீண்டும் பல்லவர்கள் ஆட்சியிலும் சேலம் இருந்தது. 10,11ஆம் நூறு ஆண்டுகளில் சோழர்களின் ஆட்சிக்குள் வந்தது.

5.12ஆம் நூற்றாண்டில் ஹோய்சால மன்னர்கள் சேலத்தை ஆண்டார்கள். டெல்லி சுல்தானின் தளபதி மாலிக்காபூர் 1310 ஆம் ஆண்டு சேலம் பகுதியில் படையெடுத்து அப்போது இருந்த பாண்டிய மன்னனை வென்றான். 1368 ஆம் ஆண்டு விஜய நகர பேரரசின் கீழ் சேலம் வந்தது.நடுவே சாளுக்கிய அரசின் கீழ் வந்தாலும் 16 ஆம் நூற்றாண்டில் மீண்டும் கிருஷ்ண தேவராயரின் ஆட்சிக்கு உட்பட்டு மதுரை நாயக்கர்களின் கீழ் சேலம் வந்தது.

6. 1768 இல் நடந்த மதுரை-மைசூர் போரில் சேலம் ஹைதர் அலி கட்டுப்பாட்டுக்கு சென்றது . சேலத்தில் ஹைதர் அலியின் காலத்தில் திருமணிமுத்தாற்றின் கரையில் கோட்டை கட்டப்பட்டது. ஆங்கிலேயரை விரட்டி அடித்த ஹைதர் அலியின் தளபதி இஸ்மாயில் கான் , தன் வீரர்களை கொண்டு சேலம் அழகாபுரம் பகுதியில் ஏரி ஒன்றை வெட்டிக்கொடுத்தார் . அவர் பெயரிலேயே அழைக்கப்பட்ட அந்த ஏரி தற்போது முழுமையாக அக்கிரமிக்கப் பட்டுவிட்டது.

7.1772இல் சேலம் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு,ஆட்சியர் நியமிக்கப்பட்டார். 1799 ஆம் ஆண்டு மைசூர் போரில் திப்பு சுல்தான் இறந்ததை அடுத்து சேலம் முழுமையாக ஆங்கிலேயர்களின் கையில் சென்றது. ஹைதர் அலியிடம் இருந்து கோட்டையை கைப்பற்ற கோட்டை வாசலுக்கு எதிரே நிறுத்தப்பட்ட பீரங்கி , பிறகு நேரத்தை அறிவிக்கும் வகையில் அங்கேயே இருந்தது. சுதந்திரத்திற்கு பிறகு பீரங்கி பிறகு இடம் மாற்றப்பட்டது. இன்றும் அந்த தெருவுக்கு "குண்டு போடும் தெரு" என்று தான் பெயர்.

8. 1862 இல் சேலம் மத்திய சிறை கட்டப்பட்டது .1866 இல் சேலம் நகராட்சி உருவாக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு பின் சேலம் மாவட்டத்தில் இருந்து தருமபுரி ,கிருஷ்ணகிரி , நாமக்கல் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன.

9. 1792ஆம் ஆண்டு கிண்டர்ஸ்லாய் என்ற ஆங்கிலேயர் சேலம் மாவட்டத்தின் முதல் கலெக்டராக பதவி ஏற்றார். தற்போது கலெக்டராக உள்ள திருமதி ரோகிணி, சேலத்தின் 171 வது ஆட்சியர். இந்திய அளவில் 225 ஆண்டுகளாக 170 கலெக்டர்கள் பதவியில் இருந்தது சேலத்தில் மட்டுமே.

10. சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பதவி ஏற்ற ராஜாஜி , சேலம் நகரசபை தலைவராக பதவி வகித்தவர். ராஜாஜி முதல் இன்றைக்கு முதல்வர் பதவியில் இருக்கும் பழனிசாமி, சபாநாயகராக இருக்கும் தனபால் என சேலத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் ஏராளம்.

தொகுப்பு : மோகன் ,சேலம் .