சனி, 31 அக்டோபர், 2015

சேலம் தினம்

சேலம்_தினம்‬


1866 ஆம் ஆண்டு சேலம் நகராட்சி உருவாக்கப்பட்டது. இன்று ( 1.11.2015 ) சேலம் நகராட்சி உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் ஆகிறது . அதை ஒட்டி இன்று சேலம் தினம் கடைபிடிக்கபடுகிறது .

சேர மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்த சேலம் பின் மைசூர் சாம்ராஜ்யத்தின் கீழ் வந்தது. போரில் தோற்ற திப்புசுல்தானிடம் செய்துகொண்ட ஒப்பந்தப்படி சேலம் மாவட்டம் கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் வந்தது. அதன் பின்னரான சேலத்தின் வளர்ச்சியில் ஆங்கிலேயர்களுக்கு முக்கிய பங்கு உண்டு ..

இன்றளவும் ஆங்கிலேயர்களின் பெயரிலேயே உள்ள சேலம் பகுதிகளின் வரலாறு இதோ...

1. 1853 முதல் 1862 வரை சேலம் கலெக்டராக இருந்த ஹேரி அகஸ்டஸ் பிரட்ஸ் [Harry Augustus Bretts] நினைவாக கலெக்டர் ஆபீஸ் முதல் முள்ளுவாடி கேட் வரையிலான சாலைக்கு பிரட்ஸ் ரோடு என பெயரிடப் பட்டது.

2.1870 முதல் 1881 வரை கலெக்டராக இருந்த C .T .லாங்லி (C.T.LONGLY) நினைவாக செவ்வாய்பேட்டை மார்க்கெட் பகுதி சாலைக்கு லாங்லி ரோடு என பெயரிடப் பட்டது.

3. சேலத்தின் மொத்த வியாபார பகுதி இட நெருக்கடியான இடத்தில் செயல் பட்டு வந்தது.1914 முதல் 1919 வரை கலெக்டராக இருந்த லீ ( Leigh) , தனியாக ஒரு மார்கெட் பகுதியை உருவாக்கினார் . அதற்க்கு அவர் பெயரே லீ பஜார் என சூட்டப்பட்டது.

4.1857 முதல் 1866 வரை சேலம் மாவட்ட நீதிபதியாக இருந்தவர் ஜே.டபுள்யூ.செரி (J.W.Cherry) . நீதி துறைக்கென சேலம் மாவட்டம் முழுவதும் கட்டிடங்கள் கட்டினார் . சிறப்பாக பணியாற்றிய அவரின் நினைவாக சேலம் அஸ்தம்பட்டி முதல் வள்ளுவர் சிலை வரை உள்ள சாலைக்கு செரி ரோடு (Cherry Road) என பெயரிடப்பட்டது.

5. காய்கறி , பால் வியாபாரம் செய்யும் மக்களுக்காக அப்போது கலெக்டராக இருந்த பால் (PAUL ) ஒரு மார்கெட் பகுதியை உருவாக்கினார் . அவரின் பெயரிலேயே இன்றும் பால் மார்கெட் என்றே அழைக்கப் படுகிறது.

6. இன்றைய கருவாட்டுப் பாலம் பகுதியில் வசித்துவந்த கீழ்தட்டு மக்களின் குடிசைகள் வெள்ளம் வரும் போதெல்லாம் அடித்து செல்லப்பட்டன. அப்போது காவல்துறை அதிகாரியாக இருந்த ஜான்சன் (JOHNSON) என்பவர் அந்த மக்களுக்காக ஒரு பேட்டையை (குடியிருப்பு ) உருவாக்கினார் . அது இன்றும் அவர் பெயரால் ஜான்சன்பேட்டை என்று அழைக்கப்படுகிறது.

7.தமிழகத்தின் பழமையான சோடா கம்பெனி சேலத்தில் ஆங்கிலேய வியாபாரி வின்சென்ட் (VINCENT) என்பவர் உருவாக்கிய வின்சென்ட் சோடா கம்பெனி . பின் இந்தியர் வசம் வந்தது. இன்றும் அந்த கம்பெனி இருந்த பகுதி வின்சென்ட் என்றே அழைக்கிறோம்.

இவை மற்றும் அன்றி இன்று உள்ள லைன் ரோடு , பென்சன் லைன் , மிலிட்டரி ரோடு , ஜட்ஜ் ரோடு , பேர்லேண்ட்ஸ் போன்ற பெயர்கள் ஆங்கிலேயர்கள் வைத்தவை .

ஆங்கிலேயருக்கு பிறகு , ராஜாஜி , சுதந்திரபோராட்ட வீரர் விஜயகோபாலாசாரி போன்ற தலைவர்கள் , எம்ஜியார், கருணாநிதி , கண்ணதாசன் போன்றோரை உருவாக்கிய மாடர்ன் தியேட்டர் சுந்தரம் ... போன்ற பல தலைவர்கள் சேலத்திற்கு பெருமை சேர்த்தனர்.

நம்ம சேலம் - நம்ம பெருமை

தொகுப்பு : மோகன்,சேலம்

திங்கள், 12 அக்டோபர், 2015

சயாம் மரண ரயில்

சயாம் மரண ரயில் 


1942 . இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்த சமயம். இந்தோனேசியா , மலேசியா , சிங்கப்பூர் , தாய்லாந்து போன்ற நாடுகளை புயல் வேகத்தில் கைப்பற்றியது ஜப்பான். அடுத்து பர்மா வழியாக பிரிட்டிஷ் இந்தியாவை கைப்பற்ற திட்டமிட்டது. ஆனால் ஆறுகளும் , அடர்ந்த காடுகளும் உள்ள பர்மா வழியே ஆயுதங்களும் யுத்த தளவாடங்களும் கொண்டுசெல்ல முடியவில்லை . எனவே தாய்லாந்தின் காஞ்சனாபுரியில் இருந்து பர்மாவின் தான்பியூசாயாட் என்ற இடம் வரை 415 கிமி தூரத்திற்கு ரயில் பாதை அமைக்க திட்டமிட்டனர். அதுவும் ஒரே ஆண்டில் முடிக்கவேண்டும்.

இதற்காக மலேசியா , சிங்கப்பூரில் இருந்த தோட்டத் தொழிலாளர்கள் ( தமிழர்கள் ) , பர்மியர்கள், சயாமியர்கள் ,ஆங்கிலேய யுத்த கைதிகள் வலுக்கட்டாயமாக பணி அமர்த்தப் பட்டனர் . சுமார் 1.2 லட்சம் தமிழர்கள் , 30000 ஆங்கிலேயர்கள் உட்பட 3 லட்சம் பேர் . 1942 ஜூன் முதல் 1943 அக்டோபர் வரை நடந்த இந்த பணியில் ஜப்பானியர்களின் கொடூர தண்டனை , கடுமையான வேலை , தோற்று நோய்கள் போன்றவற்றால் சுமார் 2 லட்சம் பேர் மரணம் அடைந்தனர். 1.2 லட்சம் தமிழர்களில் 1 லட்சம் பேர் இறந்தனர். 

இதைவிட மிகவும் குறைவான இழப்புகளை சந்தித்த இங்கிலாந்து , ஆஸ்திரேலியா , அமெரிக்கா போன்றவை யுத்ததிற்கு பிறகு ஜப்பான் மீது உரிய நடவடிக்கை எடுத்தது. 1957 இல் 'Bridge on the River Kwai' என்ற பெயரில் படமாகவும் வந்து. இன்றளவும் அங்குள்ள கல்லறைகளை பராமரிக்கிறார்கள்.

ஆனால் தமிழர்கள்... இந்திய அரசிடம் இன்றும் முறையான ஆவணம் இல்லை. மலேசிய அரசும் இறந்தவர்கள் தோட்டத் தொழிலார்கள் என்பதால் அதிகம் கண்டுகொள்ளவில்லை. ஒரே ஆண்டில் 1 லட்சம் தமிழர்கள் கொல்லப் பட்டது குறித்து எந்த அரசியல்வாதியும் பேசியது இல்லை. மனித வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட தேவையில்லாத கொடூர திட்டமாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.



இந்த ரத்தமும் மரணமும் நிறைந்த வரலாற்றை அழுத்தமான ஒரு காதலுடன் அட்டகாசமான நாவலாக எழுதி உள்ளார் சண்முகம் . இதை படிப்பது ஒவ்வொரு தமிழனின் கடமை ...

சயாம் மரண ரயில்
ஆசிரியர் : சண்முகம்
தமிழோசை பதிப்பகம்,
கோயமுத்தூர்-641 012.
தொலை பேசி - 9486586388

ஆன்லைனில் வாங்க....

 http://discoverybookpalace.com/products.php?product=சயாம்-மரண-ரயில்