வெள்ளி, 22 டிசம்பர், 2017

மோகன் விருதுகள் 2017

மோகன் விருதுகள் 2017


ஒவ்வொரு ஆண்டும் எனக்கு பிடித்த சினிமாக்களை மோகன் சினிமா விருதுகள் என்ற பெயரில் குறிப்பிட்டு வருகிறேன். அந்த வரிசையில் இதோ வெற்றிகரமாக 8ஆம் ஆண்டு சினிமா விருதுகள் ....

1.சிறந்த படம் :
குற்றம் 23, மாநகரம், பாகுபாலி 2, லென்ஸ்,குரங்கு பொம்மை, அறம், அருவி 



2.இயக்குனர்,கதை,திரைக்கதை,வசனம்/தயாரிப்பு
கோபி நயினார், நயன்தாரா(அறம்), அருண்பிரபு புருஷோத்தமன் (அருவி) 


3.நடிகர்/நடிகை
பிரபாஸ்,அனுஷ்கா(பாகுபலி2), கிஷோர்(களத்தூர் கிராமம்), நயன்தாரா,ராமச்சந்திரன்(அறம்), ரம்யாநம்பீசன்(சத்யா), அபிமன்யு சிங்(வில்லன், தீரன்), SJசூர்யா(ஸ்பைடர்) யோகிபாபு (நகைச்சுவை,என் ஆளோட செருப்பை காணோம்) பாரதிராஜா (குரங்கு பொம்மை) ஆனந்தராஜ் (மரகதநாணயம்), MSபாஸ்கர்( 8 தோட்டாக்கள்), அதிதி பாலன்(அருவி)

4.இசை/பாடல்
ஜிப்ரான்(அறம் ,தீரன் அதிகாரம் ஒன்று) ,வைரமுத்து(வான் வருவான், காற்று வெளியிடை) நா.முத்துக்குமார்(பாவங்களை சேர்த்துக் கொண்டு, தரமணி)

4.பாடகர்/பாடகி :
ஸ்ரேயாகோஷல் (நீதானே ,மெர்சல்), பிரியங்கா (அபிமானியே, என் ஆளோட செருப்பை காணோம்),ஷாஷா திருப்பதி(வான் வருவான், காற்று வெளியிடை), செந்தூரா(லட்சுமி,போகன்) , கருத்தவனெல்லாம்(அனிருத்,வேலைக்காரன்), அனிருத்(யாஞ்சி,விக்ரம் வேதா), ஷான் ரோல்டன்(வெண்பனிமலரே,ப.பாண்டி) ஆளப்போறான் தமிழன்(ஹிட் பாடல்,மெர்சல்)

5. தொழில்நுட்பம் :
ஒளிப்பதிவு (சத்யன்,தீரன்) , படத்தொகுப்பு(லாரன்ஸ் கிஷோர்,அவள், ரேமண்ட்,அருவி) , சண்டைப்பயிற்சி(அனல் அரசு, மெர்சல் ) நடனம்(ஷோபி, மெர்சல்) சாபுசிரில் (கலை,பாகுபாலி2)

புதன், 1 நவம்பர், 2017

சேலம் மாவட்டம் - வரலாறு

சேலம் மாவட்டம் - வரலாறு


1.கிமு 3 ஆம் நூற்றாண்டு : பழனி முருகன் கோவிலை உருவாக்கிய போகர் எனும் சித்தர் சேலம் கஞ்சமலை பகுதியில் வாழ்ந்ததாக சித்தர் பாடல்கள் கூறுகின்றன. அதே காலகட்டத்தில் சேலம் பகுதியில் புத்தம், ஜைன மதங்கள் பரவ தொடங்கின.

2.கிபி 1ஆம் நூற்றாண்டு : 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ரோமானியர்களுடன் சேலம் வணிகத்தில் ஈடுபட்டு இருந்தது. ரோம பேரரசர் டைபிரீஸ் உருவம் பொறித்த நாணயங்கள் சேலம் கோனேரிபட்டி அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

3.2ஆம் நூற்றாண்டு : பாண்டியர்களின் ஆளுகைக்கு சேலம் உட்பட்டது. நெடுஞ்செழியன் கணைக்கால் இரும்பொறையின் வரலாற்று குறிப்புகள் கொல்லிமலையில் கிடைத்துள்ளன. இந்த காலத்தில் பறம்பு மலையை ஆண்ட வள்ளல் பாரியை எதிர்த்து மூவேந்தர்களும் சேலம் பகுதியில் நீண்ட காலம் தங்கி இருந்தனர். போரில் இறந்த பாரியின் மகளை சேலம் உத்தமசோழபுரத்தில் உள்ள கோவிலில் வைத்து அவ்வையார் மணம் செய்து கொடுத்தார். அந்த கோவிலில் இன்றும் அவ்வையார் சிலை உள்ளது.

4.4ஆம் நூற்றாண்டு முதல் 7 ஆம் நூற்றாண்டு வரை சுமார் 300 ஆண்டுகள் பல்லவர்களின் ஆட்சி நடந்தது .8 ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களின் ஆட்சியையும் , அடுத்த 200 ஆண்டுகள் மீண்டும் பல்லவர்கள் ஆட்சியிலும் சேலம் இருந்தது. 10,11ஆம் நூறு ஆண்டுகளில் சோழர்களின் ஆட்சிக்குள் வந்தது.

5.12ஆம் நூற்றாண்டில் ஹோய்சால மன்னர்கள் சேலத்தை ஆண்டார்கள். டெல்லி சுல்தானின் தளபதி மாலிக்காபூர் 1310 ஆம் ஆண்டு சேலம் பகுதியில் படையெடுத்து அப்போது இருந்த பாண்டிய மன்னனை வென்றான். 1368 ஆம் ஆண்டு விஜய நகர பேரரசின் கீழ் சேலம் வந்தது.நடுவே சாளுக்கிய அரசின் கீழ் வந்தாலும் 16 ஆம் நூற்றாண்டில் மீண்டும் கிருஷ்ண தேவராயரின் ஆட்சிக்கு உட்பட்டு மதுரை நாயக்கர்களின் கீழ் சேலம் வந்தது.

6. 1768 இல் நடந்த மதுரை-மைசூர் போரில் சேலம் ஹைதர் அலி கட்டுப்பாட்டுக்கு சென்றது . சேலத்தில் ஹைதர் அலியின் காலத்தில் திருமணிமுத்தாற்றின் கரையில் கோட்டை கட்டப்பட்டது. ஆங்கிலேயரை விரட்டி அடித்த ஹைதர் அலியின் தளபதி இஸ்மாயில் கான் , தன் வீரர்களை கொண்டு சேலம் அழகாபுரம் பகுதியில் ஏரி ஒன்றை வெட்டிக்கொடுத்தார் . அவர் பெயரிலேயே அழைக்கப்பட்ட அந்த ஏரி தற்போது முழுமையாக அக்கிரமிக்கப் பட்டுவிட்டது.

7.1772இல் சேலம் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு,ஆட்சியர் நியமிக்கப்பட்டார். 1799 ஆம் ஆண்டு மைசூர் போரில் திப்பு சுல்தான் இறந்ததை அடுத்து சேலம் முழுமையாக ஆங்கிலேயர்களின் கையில் சென்றது. ஹைதர் அலியிடம் இருந்து கோட்டையை கைப்பற்ற கோட்டை வாசலுக்கு எதிரே நிறுத்தப்பட்ட பீரங்கி , பிறகு நேரத்தை அறிவிக்கும் வகையில் அங்கேயே இருந்தது. சுதந்திரத்திற்கு பிறகு பீரங்கி பிறகு இடம் மாற்றப்பட்டது. இன்றும் அந்த தெருவுக்கு "குண்டு போடும் தெரு" என்று தான் பெயர்.

8. 1862 இல் சேலம் மத்திய சிறை கட்டப்பட்டது .1866 இல் சேலம் நகராட்சி உருவாக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு பின் சேலம் மாவட்டத்தில் இருந்து தருமபுரி ,கிருஷ்ணகிரி , நாமக்கல் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன.

9. 1792ஆம் ஆண்டு கிண்டர்ஸ்லாய் என்ற ஆங்கிலேயர் சேலம் மாவட்டத்தின் முதல் கலெக்டராக பதவி ஏற்றார். தற்போது கலெக்டராக உள்ள திருமதி ரோகிணி, சேலத்தின் 171 வது ஆட்சியர். இந்திய அளவில் 225 ஆண்டுகளாக 170 கலெக்டர்கள் பதவியில் இருந்தது சேலத்தில் மட்டுமே.

10. சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பதவி ஏற்ற ராஜாஜி , சேலம் நகரசபை தலைவராக பதவி வகித்தவர். ராஜாஜி முதல் இன்றைக்கு முதல்வர் பதவியில் இருக்கும் பழனிசாமி, சபாநாயகராக இருக்கும் தனபால் என சேலத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் ஏராளம்.

தொகுப்பு : மோகன் ,சேலம் .

சனி, 13 மே, 2017

ஒரு காபிக்கு அக்கப்போரா

ஒரு காபிக்கு அக்கப்போரா 


என்றைக்கும் இல்லாத திருநாளாக அன்று 5 மணிக்கே முழிப்பு வந்துவிட்டது . அந்த விபரீத ஆசையும் தோன்றியது . காபி குடிக்கும் ஆசை ..!
பிரிட்ஜிலேயே முதல் சோதனை தொடங்கியது . 3 கிண்ணங்களில் வெள்ளை திரவம் இருந்தது . முகர்ந்து பார்த்ததில் ஒன்று மோர் என கண்டுபிடித்து நிராகரித்துவிட்டேன் . மீதமுள்ள இரண்டு பாலில் ஒன்று பசும்பால் , ஒன்று பாக்கெட் பால் . பசும்பாலை காபிக்கும் , பாக்கெட் பாலை தயிருக்கு பயன்படுத்துவது வழக்கம்.

பாலின பாகுபாடுகளை எதிர்க்கும் எண்ணம் உள்ளவன் என்பதால் , எந்த பாலாக இருந்தாலும் சரி என ஒரு பாலை எடுத்து அடுப்பில் வைத்தேன் . பால் கொதிப்பதற்குள் முன்னேற்பாடுகளை செய்வது அவசியம் என்பதால் ஒரு கிண்ணம் , டம்ளர் , நாட்டு சர்க்கரை டப்பா எல்லாம் அருகில் எடுத்துவைத்து .. ஆபரேஷனுக்கு தயாரானேன்.

சிறிய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பில்டரில் முதல் நாளே காபித்தூள் போட்டு , டிகாஷன் ரெடியாக இருக்கும். அதை எடுத்து டம்ளரில் ஊற்ற முயற்சித்த போது பில்டரை திறக்க முடியவில்லை . சில வித்தைகளை காட்டி முயற்சி செய்த போது , பில்டரின் கீழ் பாகம் கீழே விழுந்து டிகாஷன் கோவிந்தா .. இந்த களேபரத்தில் பாலும் சிறிது பொங்கி வழிந்து ...

ஒரு வழியாக எல்லாவற்றையும் துடைத்து , துடைத்த துணியையும் அலசி காயவைத்து ( பல்ப் வாங்கிய ஆதாரங்கள் இருக்க கூடாது! ) பில்டரில் இருந்த காபித்தூளிலேயே சுடுதண்ணி ஊற்றி மீண்டும் டிகாஷன் எடுத்து காபி போட்டு குடித்து பார்த்தால் .. ஸ்ட்ராங்கே இல்லை, 2வது டிகாஷன் என்பதால் தண்ணி மாதிரி இருந்தது . ம்ம்ஹ்ம் ... விடக்கூடாது , ஒரு நல்ல காபி குடித்தே ஆகவேண்டும் .

பில்டரில் இருந்த காபித்தூளை ரகசியமாக கொட்டிவிட்டு ( ஆதாரம் அழிப்பு முக்கியம் ) , பிரெஷ்ஷாக காபி தூளை போட்டு , சுடுதண்ணீர் ஊற்றினால் டிகாஷன் இறங்கவே இல்லை .! காபி தூளை அழுத்திவிட ஒரு அமுக்குவான் இருக்கும் . அதை கண்டுபிடிப்பதெல்லாம் நடக்காத காரியம் என்பதால் , கிடைத்த ஸ்பூனை வைத்து ஒருவழியாக டிகாஷன் எடுத்து , காபி போட்டு .... இந்த முறை காபி அருமையாக இருந்தது .

கிண்ணம் டம்ளர் என பாத்திரங்களை கழுவி , எல்லாவற்றையும் அதன் இடங்களில் செட்டில் செய்து .. டிவியை ஆன் செய்து அமர்வதற்கும் , மனைவி எழுந்து வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது. கடிகாரத்தை பார்த்தபோது 6.30 என்றது.

ரகசிய குறிப்பு :


கடைக்கு கிளம்பும்போது காபி வேணுமா என மனைவி கேட்டாள் . சரிம்மா என கூறிவிட்டு சட்டையை எடுத்து போட்டுகொண்டு , தலையை சீவி முடிப்பதற்குள் காபி டம்ளரை நீட்டினாள் .

- மோகன், சேலம்

புதன், 29 மார்ச், 2017

மெடிமிக்ஸ்




உள்ளூர் பொருட்களை ஆதரிப்போம் - 16


மெடிமிக்ஸ்


AV அனூப் என்பவரால் 1969 ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கியது மெடிமிக்ஸ் சோப் உற்பத்தி . இன்று உலகெங்கும் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை ஆகும் மெடிமிக்ஸ் சோப் , உலகிலேயே அதிகம் விற்பனை ஆகும் ஆயுர்வேதிக் சோப் ஆகும் . 2013 ஆண்டு மக்களின் நம்பிக்கையை பெற்ற டாப் 100 பொருட்களில் ஒன்றாக தேர்வானது. தற்போது ரெகுலர் , கிளிசரின் , சந்தனம் என பல ரகங்களில் வருகிறது .

மெடிமிக்ஸ் சுற்றுசூழலுக்கு பாதிப்பில்லாத handmade சோப் ஆகும் . மேலும் மட்கும் காகித அட்டைகளில் தான் பேக்கிங் செய்யப்படுகிறது .

மெடிமிக்ஸ் இன் AVACARE நிறுவன ஆலைகள் தமிழகம், கர்நாடகா , பாண்டிச்சேரியில் உள்ளது . சமீபத்தில் கேரளாவின் புகழ்பெற்ற மசாலா நிறுவனமான மேளம் நிறுவனத்தை கையகப் படுத்தி உள்ளது.

தயாரிப்புகள் :
மெடிமிக்ஸ் சோப் , டிவைன் சோப் , ஹேண்ட் வாஷ் , சஞ்சீவனம் பொடி வகைகள், மேளம் மசாலா , கைத்ரா சாம்பு ....

தலைமை அலுவலகம் :
AVA கேர் ,
No.1583, J-Block, 15th Main Road,
Annanagar, Chennai - 600 040
Toll Free No: 1800 103 1282

செவ்வாய், 14 மார்ச், 2017

சேலம் அசைவ உணவகங்கள்

சேலம் அசைவ உணவகங்கள் 


சேலத்திற்கு , ஏற்காட்டிற்கு வரும் மக்களுக்கு மட்டுமல்ல ... உள்ளூர் மக்களுக்கும் தேவைப்படலாம் இந்த தகவல்கள் ...

SALEM TASTE HOTELS


1. மங்களம் மிலிட்டரி ஹோட்டல் , சாந்தி தியேட்டர் எதிரில் , AA ரோடு ,
2. மங்களம் , அத்வைத ஆஷ்ரம் ரோடு , 9750391391,0427-2444424
3. மங்களம் , சீலநாய்க்கன்பட்டி பைபாஸ் ,
4. மங்களம் , ஜோய் ஆலுக்காஸ் பின்புறம்
5. ஸ்ரீ பராசக்தி ஹோட்டல் , வேங்கடப்ப ரோடு, செவ்வாய்பேட்டை , 8883112345, 9362776298

6. ராஜகணபதி ஹோட்டல் , அர்த்தநாரி தெரு , மத்திய பேருந்து நிலையம் எதிரில் , 8148791062
7. செல்வி மெஸ் , டவுன் ரயில்வே ஸ்டேஷன் எதிரில் , 8148791062
8. செல்வி மெஸ் , செரிரோடு , அஸ்தம்பட்டி , 0427-2310455
9. செல்வி மெஸ் , ஜோய் ஆலுக்காஸ் பின்புறம் , 0427-2331798
10. செல்வி மெஸ் , சீலநாய்க்கன்பட்டி பைபாஸ் , 0427 2281577

11. அபிராமி மெஸ் , லா காலேஜ் பஸ் ஸ்டாப் , ஏற்காடு மெயின் ரோடு , 0427-2405805
12. குமார் மிலிட்டரி ஹோட்டல் ,சங்ககிரி ரோடு , கொண்டலாம்பட்டி , 7806934322
13. NNK பிரியாணி ஹோட்டல் , அம்மாபேட்டை ,98944 85632
14. நியூ விவேகானந்தா , ஜோய் ஆலுக்காஸ் பின்புறம் , 0427 244 6497
15. கந்தவிலாஸ் மிலிட்டரி ஹோட்டல் , லைன் ரோடு , குகை , 9443703213

16. VMK ஹோட்டல் , சீலநாய்க்கன்பட்டி பைபாஸ் , 8300000559, 8300000299
17. ஷெரிப் பிரியாணி , 3 ரோடு , 9994449491
18. ராமலிங்கம் ஹோட்டல் , மெய்யனூர் ரோடு , 9843069999
19. ராமலிங்கம் ஹோட்டல், ராம் நகர் , வின்சென்ட் , 9843169999
20. ரங்க விலாஸ் , ஜெயா தியேட்டர் பின்புறம்

21. ரங்கா விலாஸ் , கோட்டை மெயின் ரோடு
22. சண்முகவிலாஸ் , சாந்தி தியேட்டர் எதிரில்
23. NNR ஹோட்டல், அம்மாபேட்டை மெயின்ரோடு,99442 69353
24. வெங்கடேஸ்வரா , குகை பாலம் அருகில், செல்வம் ஸ்டோர் எதிரில்
25. சரவணா பரோட்டாஸ், ஆர்ட்ஸ் காலேஜ் எதிரில் , 4027-6545398
26. சரவணா பரோட்டாஸ் , அண்ணா பூங்கா பின்புறம் , 0427 6535398
27. ஸ்ரீவாரி பிரியாணி ஹோட்டல் , கோகிலா மண்டபம் அருகில் , குகை

NON-VEG RESTAURANTS 


1. பார் பி குயின் , ரிலையன்ஸ் மால் அருகில் , 5 ரோடு , 2442180,2443789
2. பார் பி குயின் , ஈஸ்வரன் கோவில் அருகில் , செரிரோடு , 0427 - 2450470
3. பார் பி குயின் , புதிய பேருந்து நிலையம் எதிரில் , 99521 22991, 98941 49786
4. கேவிஸ் ரெஸ்ட்டாரெண்ட் , நகர பேருந்து நிலையம் அருகில் , 96600 15001
5. ரசிகாஸ் ரெஸ்ட்டாரெண்ட் , அண்ணா பூங்கா அருகில் , 0427 - 2412084 / 2412085
6. ரசிகாஸ் ரெஸ்ட்டாரெண்ட், தெய்வீகம் மண்டபம் அருகில் , 0427 - 2430789

7. கோல்டன் டிராகன் சைனீஸ் , சாந்தம் காப்ளக்ஸ் , 0427 244 8877
8. புளூ மூன் ஹைக்யூ - சென்னை சில்க்ஸ் எதிரில் , 0427 244 3112
9. கிரீன் பார்க் ரெஸ்ட்டாரெண்ட் , சாரதா காலேஜ் ரோடு , 0427-2447293
10. தந்தூரி வாலா , சுப்ரமணிய நகர், ஜங்சன் ரோடு , 914274040121
11.டெல்லி தர்பார் , ரிலையன்ஸ் மால் எதிரில் , ஜங்சன் ரோடு ,9487163786

 

CHAIN HOTELS 


1. அஞ்சப்பர் , பிருந்தாவன் ரோடு , 0427 233 3601
2. ஜுனியர் குப்பண்ணா , கிரீன்வேஸ் ரோடு , பேர்லண்ட்ஸ் , 094897 82555
3. திண்டுக்கல் பொன்ராம் பிரியாணி , 4 ரோடு , 0427 325 0333
4. திண்டுக்கல் வேலு பிரியாணி , SKS மருத்துவமனை ரோடு , 0427 233 0244
5. ஆம்பூர் ஸ்டார் பிரியாணி , கருப்பூர் டோல்கேட் அருகில் , 0427 234 6477

6. பார்பிக்யூ நேசன் , சாரதா காலேஜ் ரோடு , 0427 234 6477
7. THE CASCADE , சென்னை சில்க்ஸ் எதிரில் , 0427-2442505
8.சென்னை பொன்னுசாமி ஹோட்டல் , ARRS மல்டிபிளக்ஸ் எதிரில் , 0427-4031111
9. KFC சிக்கன் ,TVS பங்க் எதிரில், 4 ரோடு , 0427 402 0273

இவை தவிர சேலத்தின் அனைத்து பகுதிகளிலும் பரோட்டா கடைகள் , பிரியாணி கடைகள் உண்டு. நட்சத்திர ஹோட்டலில் உள்ள ரெஸ்ட்டாரெண்ட்கள் தனி . அசைவ உணவுகளை சேலத்தில் கொண்டாடுங்கள் .

தொகுப்பு , மோகன்,சேலம் .

சனி, 11 மார்ச், 2017

கோபால் பல்பொடி

உள்ளூர் பொருட்களை ஆதரிப்போம் - 15


கோபால் பல்பொடி 


1947 ஆம் ஆண்டு SPS ஜெயம் & கம்பெனி என்ற நிறுவனத்தால் மதுரையில் அறிமுகமானது கோபால் பல்பொடி . 40 ஆண்டுகளுக்கு முன்பே இலங்கை , மலேசியா , சிங்கப்பூர் என கடல் கடந்து விற்பனை ஆன பெருமை கோபால் பல்பொடிக்கு உண்டு.

முழுக்க முழுக்க மூலிகைகளால் தயாரிக்கப்படும் கோபால் பல்பொடி பற்களின் வலிமைக்கும் , ஈறு ஆரோக்கியம் , கறை நீக்குதல் என சிறந்த மருந்தாக விளங்கியது. கெமிக்கல் நிறைந்த பேஸ்ட்டுகளும் , ஹார்டு பிரசும் (Hard T.brush) கொண்டு பல்துலக்கி பல்லின் ஆரோக்யத்தை கெடுத்துக் கொண்டோம்.

ஆனால் இன்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் கோபால் பல்பொடியை உபயோகித்து வருகிறார்கள்.தற்போது ஐரோப்பா , அமெரிக்க நாடுகளிலும் விற்பனை ஆகிறது .

தயாரிப்புகள் ; கோபால் பல்பொடி , கோபால் பேஸ்ட் , அஞ்சால் அலுப்பு மருந்து .

தலைமை அலுவலகம்
வேல் கெமிக்கல் ஒர்க்ஸ்
25, கிழக்கு நபாளையம் தெரு ,
BSNL அலுவலகம் அருகில்
மதுரை - 1
0452-2324333, 2321433

யூனிலீவர் - பாகம்-3

உள்ளூர் பொருட்களை ஆதரிப்போம் - 14


யூனிலீவர் - பாகம்-3

( இது உள்ளூர் பொருள் அல்ல )

உலகிலேயே அதிக நிறுவனங்களை விலைக்கு வாங்கியது பெப்ஸியோ , கோக்கோ அல்ல. யூனிலீவர் தான். கடந்த 50 ஆண்டுகளில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை வாங்கி உள்ளது . வாங்கிய நிறுவனங்களில் , தன் பழைய தயாரிப்புகளுக்கு போட்டியாக உள்ள பொருட்கள் நிறுத்தப்படும் .

டாடாவிடம் 501 சலவை சோப்பை வாங்கியது . ரின் சோப்புக்கு போட்டியாக உள்ளதால் , 501 நிறுத்தப்பட்டது . டவ் சோப்புக்கு போட்டியாக உள்ள இந்துலேகா சோப்பை வாங்கி , நிறுத்திவிட்டது.

யூனிலீவர் வாங்கிய சில பிராண்டுகளை பார்ப்போம்.

1. லிப்டன் டீ(Lipton) - 1971
2. புரூக் பாண்ட்(BrookeBond) - 1845 இல் லண்டனில் தொடங்கப்பட்ட புரூக்பாண்ட் , 1905 இல் இந்தியாவில் ரெட் லேபிள் டீயை அறிமுகப் படுத்தியது . 1984 இல் யூனிலீவர் வாங்கி விட்டது .
3. பாண்ட்ஸ்(Ponds) - 1986 il தொடங்கப்பட்ட பாண்ட்ஸ் பிராண்டை 1987 இல் யூனிலீவர் வாங்கியது .

4. ஹமாம் , 501 சோப்புகள் - டாடா வின் பிராண்டுகளான இந்த சோப்களை 1993 இல் யூனிலீவர் வாங்கியது .
5. கிசான் , அன்னபூர்ணா(Kissan) - 1934 இல் தொடங்கப்பட்ட இந்திய நிறுவனமான கிசான் 1993 ஆம் ஆண்டு யூனிலீவர் வசம்
6. க்வாலிட்டி வால்ஸ்(KwalityWalls) - இந்திய ஐஸ்கிரீம் நிறுவனமான குவாலிட்டி வால்ஸ் ஐ 1995 ஆம் ஆண்டு யூனிலீவர் வாங்கியது .

7. கார்னேட்டோ(cornetto) - இத்தாலியின் கார்னேட்டோ ஐஸ்கிரீம் இப்போது யூனிலீவர் வசம் .
8. மாடர்ன் பிரட் - இந்தியாவின் மாடர்ன் பிரட் 2000 ஆம் ஆண்டு யூனிலீவர் வசம்
9. இந்துலேகா(Induleka) - கேரள ஆயுர்வேதிக் நிறுவனமான இந்துலேகா 2015 முதல் யூனிலீவர்.

10. மேக்னம்(Magnum) - இத்தாலியின் மேக்னம் ஐஸ்கிரீமின் இந்திய பிரிவு 2014 இல் யூனிலீவர் வசம் .
11. நார் சூப்(Knorr) - ஜெர்மனியின் நார் சூப் , நூடுல்ஸ் கம்பெனி 1971 முதல் லீவர் வசம்
12. லாக்மி(Lakmi) - 1957 இல் ஆரம்பித்த டாடாவின் அழகு சாதன நிறுவனமான லாக்மி 1996 ஆம் ஆண்டு லீவர் வாங்கியது.
13. பிரில்கிரீம்(Brilcream) - 1928 இல் பிரிட்டனில் தொடங்கிய பிரில்கிரீம் 2012 முதல் லீவர் வசம் .

கடைசியாக..

பல நாடுகளில் அனுமதி மறுக்கப்பட்ட பாதரச ஆலையை கொடைக்கானலில் யூனிலீவர் தொடங்கி , எதிர்ப்பு காரணமாக 2001 இல் மூடியது. அதில் உள்ள அபாயகரமான நசுக்கி கழிவுகள் இன்னும் அங்கேயே உள்ளது.

புதன், 8 மார்ச், 2017

யூனிலீவர் 2

உள்ளூர் பொருட்களை ஆதரிப்போம் - 13


யூனிலீவர் 

( இது உள்ளூர் பொருள் அல்ல )
சென்ற பதிவின் தொடர்ச்சி ..

1930 ஆம் ஆண்டு லீவர் பிரதர்ஸ் என்ற சகோதரர்களால் லண்டனில் துவங்கப்பட்ட யூனிலீவர் இன்று உலகில் 190 நாடுகளில் கிளை பரப்பி , உலகின் நெ.1 நிறுவனமாக உள்ளது . 2016 ஆம் ஆண்டு அதன் வருவாய் சுமார் 68 ஆயிரம் கோடி .

யூனிலீவரின் ஆராய்ச்சி மையங்கள் இங்கிலாந்து , அமெரிக்கா , இந்தியா , சீனா நாடுகளில் உள்ளது. முதல் தயாரிப்பு லைபாய் சோப் . சுமார் 450 பிராண்டுகளில் 5000 க்கும் மேற்பட்ட அளவுகளில் பொருட்களை தயாரிக்கும் யூனிலீவர் நிறுவனத்திற்கு வருவாய் அடிப்படையில் இந்தியா தான் முதலிடம் வகிக்கிறது .

இந்தியாவில் இவ்வளவு வெற்றிக்கு முக்கிய காரணம் , மக்களின் தேவைக்கேற்ப தயாரிப்பதே . நம் ஊருக்காக 50 பைசாவுக்கு கிளினிக் பிளஸ் ஷாம்பூ . 1 ரூபாய்க்கு bru , 3 roses , 2 ரூபாய்க்கு கிஸான் சாஸ் , 5 ரூபாய்க்கு லைபாய் சோப் என தொடங்கி எல்லா விலைக்கும் யூனிலீவரின் பொருள் கிடைக்கும்.

பெப்சி , கோக்கை விட அதிக நிறுவனங்களை கையாகப் படுத்தியதில் யூனிலீவர் முதல் இடம் . யூனிலீவர் வாங்கிய சில பிராண்டுகளை பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

யூனிலீவர் 1

உள்ளூர் பொருட்களை ஆதரிப்போம் - 12


காலை எழுந்ததும்
PEPSODENT பிரஷில்
CLOSEUP பேஸ்டால் பல்விளக்கி
PEARS பேஸ்வாஷில் முகம்கழுவி
BRU காபி ஒரு கப் ..


AXE ஷேவிங் கிரீம்
AXE ஷேவிங் லோஷனுடன் ஷேவிங் ...
SANSILK சாம்பு
DOVE கண்டிஷினர்
HAMAM சோப்புடன் குளியல் ..
KNORR சூப்பி நூடுல்ஸ்
KISSAN சாஸ் உடன் டிபன் ..

FAIR&LOVLY கிரீம்
PONDS பவுடர்
VASLINE லிப்கேர்
LAKMI சன்ஸ்கிரீன் லோஷன்
DENIM பாடி ஸ்ப்ரே
என சின்ன மேக்கப்புடன் ஆபீஸ்

LIPTON கிரீன்டீ 11 மணிக்கு ..
KNORR சாம்பார் பொடியில்
செய்த சாம்பார்
ANNAPURNA உப்பு , தயிருடன்
மதிய உணவு ..

KWALITY WALLS கடையில்
REDVELVET கோன் 3 மணிக்கு ..
மாலை வீடு திரும்பி
AYUSH பேஸ்வாஷில் முகம்கழுவி
3ROSES டீ ஒரு கப் ..

ANNAPURNA ஆட்டா சப்பாத்தி
KISSAN ஜாமுடன் இரவு உணவு ..

படுக்க போகும்முன்
LIFEBOUY ஹேண்ட்வாஷில் கைகழுவி
PONDS மென்ஸ்கிரீமில் முகம்கழுவி
AGE MIRACKLE நைட் கிரீம் முகத்துக்கு
போட்டுக் கொண்டு தூக்கம்..
மீண்டும் அடுத்த நாள் ...

மேலே சொன்ன பொருட்கள் அனைத்தும் ஒரே கம்பெனியுடையது என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா ... யூனிலீவர் என்ற பன்னாட்டு நிறுவனத்தின் பொருட்கள் தான் மேலே சொன்ன எல்லாம் . இதில் நிறைய பொருட்களை (AYUSH, KISSAN ,ANNAPURNA,TAJMAHAL TEA) உள்ளூர் பிராண்டு என நினைப்பவர்கள் நிறைய .. 

 யூனிலீவர்


ஒவ்வொரு இந்தியனும் தினமும் காலை எழுந்தது முதல் , இரவு தூங்கும் வரை யூனிலீவரின் பொருளை உபயோகிக்காமல் இருக்க முடியாது என அந்த நிறுவனம் ஒருமுறை சொன்னது .
எனவே இந்த பரகாசுர கம்பெனி பற்றி அடுத்த பதிவில் விரிவாக...

வியாழன், 2 மார்ச், 2017

இந்தியர்களின் பன்னாட்டு பிராண்டுகள்

உள்ளூர் பொருட்கள் ஆதரிப்போம் - 11


இந்தியர்களின் பன்னாட்டு பிராண்டுகள்


கோக் , பெப்சி இங்கே வைத்து இந்திய நிறுவனங்களை விலைக்கு வாங்கியதைப் போல பன்னாட்டு நிறுவனங்களை இந்திய கம்பெனிகள் வாங்க தொடங்கி உள்ளன . ஜாகுவார் , லேண்ட் ரோவர் கார் நிறுவனங்களை டாடா கையகப் படுத்தியது போல ...

1. யார்ட்லி 


1770 ஆம் ஆண்டு பிரிட்டனில் தொடங்கப்பட்ட யார்ட்லி நிறுவனம் , உலகின் பழமையான நிறுவனங்களில் ஒன்று . யார்ட்லியின் சோப் , பவுடர் , பாடி ஸ்ப்ரே உபயோகிப்பது சமூகத்தில் அந்தஸ்தான ஒன்றாக கருதப்பட்டது . இந்தியாவின் விப்ரோ நிறுவனம் 2009 ஆம் ஆண்டு யார்ட்லியின் ஆசியா , மத்திய கிழக்கு நாடுகள் ,ஆப்ரிக்க , ஆஸ்திரேலிய பிரிவுகளையும் , 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய பிரிவுகளையும் வாங்கியது . இப்போது ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா பிரிவு தவிர உலகம் முழுதும் உள்ள தொழிற்சாலைகள் விப்ரோ வசம்.

2. ஹெங்கெல் இந்தியா 


ஜெர்மனியை சேர்ந்த ஹெங்கெல் நிறுவனம் உலகில் பெரிய டிடெர்ஜென்ட் நிறுவனம் ஆகும் . உலகமெங்கும் வணிகம் செய்யும் ஹெங்கெலின் இந்திய பிரிவை மும்பையை சேர்ந்த ஜோதி லெபாரட்டரீஸ் ( உஜாலா சொட்டுநீல கம்பெனி ) வாங்கி உள்ளது .

புதன், 1 மார்ச், 2017

சலவை சோப்புகள்

உள்ளூர் பொருட்களை ஆதரிப்போம் - 10


சலவை சோப்புகள் 


தமிழ்நாட்டில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழையமுடியாத ஒரே FMCG பொருள் சலவை சோப்புகள். யூனிலீவரின் ரின் சோப் , சர்ப் எக்ஸல் சோப் தவிர 80 சதவீத விற்பனை உள்ளூர் பொருட்களே ... இந்த பெருமைக்கு காரணம் ஒரு தனிப்பட்ட நிறுவனம் அல்ல . ஓவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பிராண்ட் மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளன .

தமிழக மக்களின் நம்பிக்கையை பெற்ற சோப்புகள் ..

1. காந்தி பார் - காந்தி ஆசிரமம் , திருச்செங்கோடு
2. படையப்பா , மெட்ரோ - படையப்பா சோப் கம்பெனி , சேலம்
3. ஊர்வசி சோப் - ராஜம் இண்டஸ்ட்ரீஸ் , சென்னை
4. அரசன் சோப் - பிரபு சோப் ஒர்க்ஸ் , கோவை
5. பொன்வண்டு சோப் - ஸ்ரீ புஷ்பம் இண்டஸ்ட்ரீஸ் , பாண்டிச்சேரி 


6. பிரைட் சோப் , செல்லம் சோப் - VS செல்லம் இண்டஸ்ட்ரீஸ் , மதுரை
7. பைவ் ஸ்டார் சோப் - 5 ஸ்டார் கெமிக்கல்ஸ் , ஈரோடு
8. EC வாஷ் சோப் - JAY KAY SOAPS , கோவை
9. VIP சோப் - ADN சோப் ஒர்க்ஸ் , திருநெல்வேலி
10. சேலஞ்ச் சோப் - வாணி சோப் ஒர்க்ஸ் லிமிடெட் , காரைக்கால்

புதன், 22 பிப்ரவரி, 2017

குயிலை புடிச்சு கூண்டில் அடச்சு .

..


இது அரசியல் குயில் அல்ல . கானக் குயில் ....


சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் குயிலோசை கேட்காத இடமே கிடையாது. மரத்தை வெட்டியும், ரசாயன பூச்சி மருந்துகளை பயன்படுத்தியும் இன்று 90% குயில்கள் அழிந்து விட்ட நிலையில் , குயில்கள் இன்று இளையராஜா பாடல்களில் மட்டுமே வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. குயில் மேல் உள்ள காதலில் ராஜா போட்ட பாடல்களில் சில..

1. குயிலைப் புடிச்சு கூண்டில் அடச்சு ..
2. குயிலே குயிலே பூங்குயிலே
3. மாங்குயிலே பூங்குயிலே
4. குயில் பாட்டு ஓ.. வந்ததென்ன இளமானே
5. குயிலுக்கு கூக்கூகூ ... சொல்லித்தந்தது யாரு
6. மணிக்குயில் இசைக்குதடி மனமதில் மயங்குதடி
7. கான கருங்குயிலே கச்சேரி வைக்கப் போறேன்
8. கானக் கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியா
9. புன்னைவனத்துக் குயிலே நீ
10. மயில் போல பொண்ணு ஒன்னு
குயில் போல பாட்டு ஒன்னு கேட்டு நின்னு
11. குயிலே குயிலே குயிலக்கா
12. குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும்
13. சின்னக் குயில் பாடும் பாடல் கேக்குதா
14. கூவுற குயிலு சேவலைப் பார்த்து படிக்குது பாட்டு
15. கூ கூ என்று குயில் கூவதோ
16. நீதானா அந்தக் குயில்
17. சின்ன சின்ன வண்ண குயில் கொஞ்சி கொஞ்சி
18. குயிலே கவிக்குயிலே யாரை இங்கு
19. வனக்குயிலே குயில் தரும் இசையே
20. நீலக்குயிலே நீலக்குயிலே நெஞ்சுக்குள் என்ன குறை
21.  நீலக்குயிலே சோலைக்குயிலே
22.  நீலக்குயிலே உன்னோடு நான் பண்பாடுவேன்
23.  கண்ணா உனைத் தேடுகிறேன் வா...
கண்ணீர்க் குயில் பாடுகிறேன் வா...

24.  காலை நேர பூங்குயில் கவிதை பாடி
25.  சின்னக்குயில் ஒரு பாட்டுப் பாடுது ...
26.  சின்ன மணிக் குயிலே
27.  ஆனந்த குயிலின் பாட்டு
28.  குயிலே எந்தன் கீதங்கள் கேட்டாயோ

வைகை பாடல்கள்

 வைகை பாடல்கள்


நிலத்தில் சில சமயம் ஓடாமல் போகலாம் .ஆனால் பாடல்களில் ஓடிக்கொண்டே இருக்கும் வைகை நதி ...


1. வைகை கரை காற்றே நில்லு ... (உயிருள்ளவரை உஷா)
2. தென்மதுரை வைகை நதி தினம் பாடும் .. (தர்மத்தின் தலைவன்)
3. வைகை நதி ஓரம் பொன்மாலை நேரம் (ரிக்ஷா மாமா)
4. வைகறையில் வைகை கரையில் (பயணங்கள் முடிவதில்லை)
5. நீரோடும் வைகையில நீரானவ
  நிமிந்து நடந்து வந்தா தேரானவ (கும்பக்கரை தங்கய்யா)

6. நீரோடும் வைகையிலே நின்றாடும் மானே (பார் மகளே பார்)
7. வைகையில குளிச்ச பொண்ணு
வைகறையில் எழுந்திடுவ ( சிறுவாணி பாடல் , எங்கஊரு காவல்காரன் )

8. கங்கை வரும் யமுனை வரும்
வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே.... (ரிதம்)

9. உன் மடியினில் பாய்ந்தது வைகை மெதுவா... (மயிலிறகே, அன்பே ஆருயிரே)
10. கங்கை யமுனை காவிரி வைகை ஒடுவதெற்காக .. (சந்திரோதயம்)
11. வண்ண நிலவே வைகை நதியே .. (பாடாத தேனீக்கள்)
12. அழகரைத் தொட்டதால் வைகை நதி
அலை கடல் சேரா மதுரையடி (ஆடுகளம்)


ஸ்டார்ட் மியூசிக் ... மீதி உள்ள வைகைகளை ஓடவிடுங்கள் )

நாகா - மைதா , ரவை , ஆட்டா



உள்ளூர் பொருட்களை ஆதரிப்போம் - 9


நாகா - மைதா , ரவை , ஆட்டா


50 ஆண்டுகளுக்கு முன் சீனிவாசன் என்பவரால் துவங்கப்பட்டது நாகா மாவு மில் . இன்று நான்கு மாவு மில்கள் , சோப் கம்பெனி , லாஜிஸ்டிக்ஸ் , ஸ்பின்னிங் மில் என தமிழகத்தின் முக்கிய நிறுவனங்களுள் ஒன்றாக வளர்ந்துள்ளது.

நாகா நிறுவன கோதுமை சேமிப்புக்கு கிடங்கு இந்தியா அளவில் பெரியது ஆகும். 64 ஆயிரம் டன் கோதுமையை இங்கு இருப்பு வைக்க முடியும் .நாகா மாவு மில் ஆண்டுக்கு 2.5 லட்சம் டன் அரவைத்திறனுடன் தென்னிந்தியாவில் பெரிய ஆலை ஆகும் .

வறுத்த ரவையை நாகா தான் அறிமுகப் படுத்தியது . நாகா மைதா , கோதுமை மாவு போன்றவை சில்லறை வணிகத்தில் நாகா என்ற பிராண்டிலும் , ஹோட்டல், பேக்கரிகளுக்கு மைதா ஜூபிடர்,பெருமாள்,அம்மன், கோவில் என பல்வேறு ரகங்களில் வருகிறது . அரசின் நியாய விலை கடைகளுக்கும் நாகா பொருட்கள் தரப்படுகின்றன . பிஸ்கட் நிறுவனங்களுக்கு தேவையான மைதாவும் நாகாவில் இருந்து செல்கிறது.

பன்னாட்டு நிறுவனமான யூனிலீவருக்கு ரின் சோப் , பவுடர் ,விம் சோப் ஆகியவற்றை நாகா தயாரித்து தருகிறது. திண்டுக்கல்லில் மல்டிப்ளெக்ஸ் திரையரங்கம் உள்ளது. நாகா நிறுவனத்திற்கு தேவையான மின்சாரத்தை காற்றாலை மூலம் தயாரித்து கொள்கிறது .

தயாரிப்புகள் : நாகா பப்ளி மைதா , ரவை , சம்பாரவை , கோதுமைமாவு .

தலைமை அலுவலகம் :
நாகா லிமிடெட்,
1, திருச்சி ரோடு ,
திண்டுக்கல்-624005
0451 - 2410121


avoid mnc brands : Pillsbury , Annaporna atta

சனி, 4 பிப்ரவரி, 2017

KP நம்பூதிரி பேஸ்ட்



உள்ளூர் பொருட்களை ஆதரிப்போம் - 8


KP நம்பூதிரி பேஸ்ட்


சுமார் 80 ஆண்டுகளுக்கு முன் பாரம்பரிய கேரள குடும்பத்தால் திருச்சூரை தலைமை இடமாக கொண்டு துவங்கப்பட்ட KP நம்பூதிரி ஆயுர்வேதிக்ஸ் நிறுவனம் 2007 ஆம் ஆண்டுவரை "தண்டதாவனசூரணம்" என்ற ஒரே பொருளை மட்டுமே தயாரித்து வந்தது ஆச்சர்யம் தான் .

2007 ஆம் ஆண்டு முதன்முறையாக நம்பூதிரி ஆயுர்வேதிக் டூத் பேஸ்ட்டை அறிமுகம் செய்தது. மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நம்பூதிரி பேஸ்ட் இன்று உலகம் முழுதும் விற்பனை ஆகிறது . நம்பூதிரி நிறுவனம் இன்று பல்வேறு ஆயுர்வேத பொருட்களை தயாரித்து , முன்னணி நிறுவனமாக வளர்ந்து வருகிறது .

நம்பூதிரி நிறுவனம் 2011 ஆம் ஆண்டு ,குருவாயூர் கோவிலுக்கு அருகே தேவராகம் என்ற நட்சத்திர ஹோட்டலை துவங்கியது.

நம்பூதிரி பொருட்கள் :
Kp Namboodiri Ayurvedic paste , gel paste , tooth powder , shampoo , bath soap , herbal viboothi , Dahamukthi ...


CORPORATE OFFICE
K.P. Namboodiri's Ayurvedics
15, KPN's Shopping Complex,
Shornur Road, Thiruvambady P.O
Thrissur - 680 022. Kerala, India
Ph. 0487 2320758

http://www.kpnamboodiris.com/

வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

டாம்ப்கால்

உள்ளூர் பொருட்களை ஆதரிப்போம் - 7 


டாம்ப்கால் 


Tamil Nadu Medical Plant Farms & Herbal Medicine Corporation Limited ( தமிழ்நாடு மருத்துவ தாவர பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துகள் கழகம் ) என்ற TAMPCOL நிறுவனம் 1983 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது . இது ஒரு தமிழ்நாடு அரசு நிறுவனம். காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூரில் தொழிற்சாலை உள்ளது. 

டாம்ப்கால் முதலில் அறிமுகப் படுத்திய ஹேர் ஆயில் இன்றுவரை தரமான எண்ணையாக மக்கள் விரும்புகிறார்கள். ஆனால் 100 ரூபாய்க்கு கிடைக்கும் தரமான டாம்ப்கால் ஹேர் ஆயிலைவிட 1500 ரூபாய்க்கு விற்கும் எர்வாமேட்டினை விளம்பரமோகத்தில் வாங்குவது .... என்ன சொல்வது ...

டாம்ப்கால் 2009 ஆம் ஆண்டு அறிமுகப் படுத்திய லபூப் சகீர் என்ற ஆண்மைக்குறைவுக்கான லேகியம் பெரிய வெற்றி பெற்றது . அரை கிலோ 300 ரூபாய்க்கு விற்ற இந்த லேகியம் , 3000 முதல் 5000 ரூபாய் வரை விற்ற போலி மருத்துவர்களுக்கு கிலி ஏற்படுத்தியது . இன்றும் டாம்ப்கால் தயாரிப்புகளை வாங்கி டப்பா மாற்றி பல மடங்கு சேர்த்து விற்கிறார்கள் டிவி புகழ் மருத்துவர்களும் , ஹோட்டல் விஜயம் செய்யும் மருத்துவர்களும்.

கடந்த ஆண்டு தமிழகமெங்கும் சிக்கன் குனியா , டெங்கு வேகமாக பரவியபோது அதை கட்டுப்படுத்தியதில் டாம்ப்கால் தயாரிப்பான நிலவேம்புக் குடிநீர் முக்கிய பங்கு வகித்தது . அனைத்து அரசு மருத்துவமனை , ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக வழங்கப் பட்டது .

டாம்ப்கால் இப்போது ஹேர் ஆயில் ,தைலம் , சூரணம் , பஸ்மம் , லேகியம் , ஆயில்மெண்ட் , குடிநீர் சூரணம் என பலவகைகளில் 50க்கும் மேற்பட்ட சித்தா , யுனானி மருந்துகளை தயாரிக்கிறது. மொத்தம் 275 வகை மூலிகைகளைக் கொண்டு டாம்ப்கால் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

Registered Office:
Tampcol Buildings,
Anna Hospital Campus,
Arumbakkam,
Chennai-600106.
Telephone : 044 - 26202640

www.tampcol.in

திங்கள், 30 ஜனவரி, 2017

கவின்கேர்

உள்ளூர் பொருட்களை ஆதரிப்போம் - 6


கவின்கேர் 


பணக்காரர்கள் மட்டும் உபயோகித்து வந்த ஷாம்பூவை சிறிய பாக்கெட்டில் அடைத்து வைக்கலாம் என்ற ஒரு ஐடியா , இன்று 1000 கோடி ரூபாய் கம்பெனியாக உயர்ந்து நிற்கிறது . இந்தியாவில் முதல் முறையாக சாஷே பாக்கெட்டில் 50 பைசாவுக்கு "வெல்வெட் ஷாம்பு"வை அறிமுகம் செய்தது சிகே.ரங்கராஜன் குடும்பம் . இன்று காபி, டி தூள் முதல் எல்லா பொருளும் சிறிய சாஷேவில் கிடைப்பதற்கு இது தான் முதல் பொருள் .

அதன்பிறகு தனியாக 15000 ஆயிரம் முதலீட்டில் சிக் ஷாம்புவுடன் சிகே.ரங்கராஜனால் தொடங்கப்பட்ட நிறுவனம் இன்று 1000 கோடி வர்த்தகம் செய்யும் கவின்கேர் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது . யூனிலீவர் , பி&ஜி போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டியிட்டு ஷாம்பு விற்பனையில் தனி இடம் பிடித்துள்ளது. ஷாம்பு மட்டுமல்ல ஊறுகாய் தவிர கவின்கேரின் எல்லா தயாரிப்புமே MNC பொருட்களை எதிர்த்துதான் ...

கடலூரில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்று சென்னை , பாண்டிச்சேரி , இமாச்சல்பிரதேஷ் உட்பட பல இடங்களில் தொழிற்சாலைகளை கொண்டுள்ளது . 100 க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரிக்கிறது .வியாபாரம் தாண்டி ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் அளவிற்கு சமூக பணிகளில் செலவிடுகிறது . தொழில் முனைவோர் கூட்டமைப்பின் தலைவராக இருந்த ரங்கராஜன் , தொழில் தொடர்பான கருத்தரங்குகளில் ஆலோசனை வழங்கி வருகிறார். சில நூல்களும் எழுதியுள்ளார்.

PRODUCTS : Chik Shampoo , Meera shampoo , Karthika shampoo , Nyle Shampoo, FAIREVER CREAM , SPINZ POWDER , SPINZ BODY SPRAY , INDICA HAIRDYE , Raaga Beauty products , Ruchi pickle , Chinnis pickle , Chinnis Kadalai mittai , Garden snacks , Garden soanpapdi , Cruncho chips , Cavins milk , panner , curd , ghee , Maa mango juice , apple juice ……


HEAD OFFICE :
CavinKare Pvt. Ltd.,
Cavinville, No. 12, Cenotaph Road,
Chennai - 600 018.
Phone : 044 - 66317560
www.cavincare.com/

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

பிஸ்லரி

உள்ளூர் பொருட்களை ஆதரிப்போம் - 5


பிஸ்லரி

 
1965 ஆம் ஆண்டு இத்தாலியை சேர்ந்த சிக்னர் பெலிஸ் பிஸ்லரி என்பவரால் மும்பையில் துவங்கப்பட்ட பிஸ்லரி வாட்டர் நிறுவனத்தை , 1969 இல் பார்லே நிறுவனர் ஜெயந்திலால் சவுகான் கையகப்படுத்தினார் . அன்று முதல் இந்தியாவில் அசைக்க முடியாத குடிநீர் நிறுவனமாக பிஸ்லரி விளங்குகிறது .
1993 இல் கோக் இந்திய சந்தையில் நுழைந்த பிறகு , நாடு முழுவதும் பிஸ்லரியை அறிமுகப்படுத்தினார் ஜெயந்திலாலின் மகன் ரமேஷ் சவுகான் . இன்றுவரை பார்லே இந்தியாவின் துணை நிறுவனமாக ,இந்திய பாட்டில் குடிநீரில் 50 சதவீதத்திற்கு மேல் விற்பனையை கொண்டுள்ளது பிஸ்லரி .
தற்போது இந்தியா முழுவதும் 40 க்கும் மேற்பட்ட இடங்களில் பிளான்டுகளை கொண்டுள்ள பிஸ்லரியின் விற்பனையை கோக் , பெப்சியால் ஒன்றும் செய்யமுடியவில்லை .

அக்குவாஃபீனா , கின்லி குடிநீரில் பூச்சிக்கொல்லி மருந்து அதிகம் இருப்பதாக புகார் வந்த நேரத்திலும் பிஸ்லரி மீது புகார் இல்லை. குடிநீர் தரத்தை போலவே பாட்டிலின் தரத்தையும் உயர்த்தியது . கிரேட் 1 பாட்டில்களை உபயோகப்படுத்தும் பிஸ்லரி , அந்த பாட்டில்கள் 100 சதவீதம் மறுசுழற்சிக்கு உகந்தவை என அறிவித்துள்ளது .

பிஸ்லரியும் நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது தான் . ஆனால் கோக் , பெப்சி மீது வந்தது போல புகார் வரவில்லை . எதிர்காலத்தில் கடல்நீரை குடிநீராக சுத்திகரிக்கும் ஆலையை பிஸ்லரி அமைத்தால் , 100 சதவீத ஆதரவு உண்டு .

PRODUCTS : DRINKING WATER , SODA , URZZA , BISLERI POP ( cool drinks ) ....

Head office : Bisleri International Pvt. Ltd. Western Express Highway, Andheri (East), Mumbai - 400 099
Phone : +91 7045050505

web : http://www.bisleri.com/

வெள்ளி, 27 ஜனவரி, 2017

கேம்ப்கோ சாக்லேட்




உள்ளூர் பொருட்களை ஆதரிப்போம் - 4


கேம்ப்கோ சாக்லேட்


இந்திய பார் சாக்லேட் விற்பனையில் 90 சதவீதம் கேட்பரீஸ் , நெஸ்லே , பெராரி , கான்டூர் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களே உள்ளன . இவர்களை மீறி உள்ள இரண்டு இந்திய நிறுவனங்கள் ஒன்று அமுல் , மற்றொன்று கேம்ப்கோ . இரண்டுமே அரசு சார்ந்த கூட்டுறவு நிறுவனங்கள் என்பதுதான் ஆச்சரியம்.

கேம்ப்கோ 1973 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கர்நாடகா கேரளா மாநிலங்களின் கூட்டுறவு நிறுவனம் ஆகும் . ( Central Arecanut and Cocoa Marketing and Processing Co-operative Limited or CAMPCO ) . இந்தியாவில் கொக்கோ விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்டது . இப்போது கோவா , அஸ்ஸாம் மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப் பட்டுள்ளது .தமிழகத்திலும் தாராபுரத்தில் கேம்ப்கோவின் கூட்டுறவு மையம் உள்ளது .

கேம்ப்கோவின் சாக்லேட் தொழிற்சாலை 1986 ஆம் ஆண்டு தக்ஷின கர்நாடகாவில் உள்ள புத்தூரில் தொடங்கப்பட்டது . இந்த தொழிற்சாலை இப்போது தெற்கு ஆசியாவில் பெரிய கோகோ ஆலை ஆகும். கேம்ப்கோவில் தயாரிக்கப்படும் கோகோ பட்டர் மற்றும் கோகோ பவுடர் உலக அளவிலான பெரிய சாக்லேட் கம்பெனிகளுக்கு அனுப்ப படுகின்றன .

இப்போது 20 க்கும் மேற்பட்ட ரகங்களில் சாக்லேட்டுகள் தயாரிக்கப் படுகின்றன . தரத்திலும் சுவையிலும் அருமையாக உள்ள கேம்ப்கோ சாக்லேட்டுகள் சரியான மார்க்கெட்டிங் இல்லாததால் , எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. மக்கள் விரும்பி கேட்க ஆரம்பித்தால் எல்லா இடங்களிலும் கிடைக்கும். லாபம் மக்களுக்கு போய் சேரும் .

Products : 20 verity choclates from 2 rs to 100 rs, coco powder ..


HEAD OFFICE

The CAMPCO Ltd.,
Head Office,P.B.No.223,
“Varanashi Towers”, Mission Street,Mangalore,
Dakshina Kannada,KARNATAKA -575001.
PHONE : 0824-2888200

Web : www.campco.org

வியாழன், 26 ஜனவரி, 2017

காளிமார்க்_பொவண்டோ

உள்ளூர் பொருட்களை ஆதரிப்போம் - 3


காளிமார்க்_பொவண்டோ

 
1916 ஆம் ஆண்டு பழனியப்ப நாடார் என்பவரால் விருதுநகரில் தொடங்கப்பட்டகாளிமார்க் நிறுவனம் நூற்றாண்டை கடந்து நிற்கும் ஒரே இந்திய குளிர்பான நிறுவனம் .

90 களில் கோக் , பெப்சி இந்தியாவில் நுழைந்த போது இந்தியாவெங்கும் உள்ள குளிர்பான நிறுவனங்களை வாங்கிவிட்டது . ஆனால் காளிமார்க்கை வாங்கவில்லை . காரணம் மதுரை, திருச்சி, கும்பகோணம், சென்னை, சேலம் என்று தமிழகம் முழுவதும் எட்டு இடங்களில் தனித்தனியாக இயங்கிவந்தது. தமிழகம் தாண்டி விற்பனையும் இல்லை . எனவே கண்டுகொள்ளவில்லை.
ஆனால் அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக விற்பனையை பிடித்த காளிமார்க்கை கண்டு கோக் அதிர்ச்சி அடைந்தது . இப்போது விலைக்கு கேட்டபோது காளிமார்க் மறுத்து விட்டது .

இப்போது கோக் ஒரு வேலை செய்தது . பொவொண்டோ விற்பனையில் 75 சதவீதம் 200மிலி , 250மிலி கண்ணாடி பாட்டில்கள் தான் இருந்தது . ஒரு காலி பொவொண்டோ பாட்டில் கொடுத்தால் ஒரு முழு பாட்டில் கோக் இலவசம் என கடைக்காரர்களிடம் கூறி லட்சக்கணக்கான பாட்டில்களை வாங்கி அழித்தது . அதன்பின் பெட் பாட்டில்களில் பொவொண்டோ விற்பனை மேலும் அதிகரித்தது .

அதன்பிறகு மேலும் ஆத்திரம் அடைந்த கோக் உலகிலேயே தமிழ் நாட்டிற்கு மட்டும் போர்டேல்லோ என்ற பெயரில் பொவொண்டோ போலவே பேன்டாவாவை 2014 இல் அறிமுகம் செய்தது  .இருப்பினும் வேலைக்கு ஆகவில்லை. இப்போது தமிழகம் தாண்டி சிங்கப்பூர் , மலேசியாவிலும் விற்பனை ஆகிறது.

காளிமார்க் தயாரிப்புகள் :பொவொண்டோ ,கிளப் சோடா , விப்ரோ பன்னீர் சோடா , ஜிஞ்சர் சோடா , லெமன், ட்ரியோ ஆரஞ்சு, மேங்கோ ...

கோக் ,பெப்சியை விட சிறந்ததா...

இதுவும் சர்க்கரை சேர்த்த கார்பனேட் பணம் தான் . ஆனால் கோக் , பெப்சியில் உள்ள காபினைன் என்ற நச்சு இல்லை என காளிமார்க் உறுதி அளிக்கிறது . சுவையானது . சோடா பானங்கள் குடித்தே ஆகவேண்டுமெனில் நிச்சயம் பொவொண்டோ சரியான தேர்வு. 100 ரூபாய்க்கு பொவொண்டோ விற்றால் 100 ரூபாயும் இங்கேயே இருக்கும். ஆனால் அந்நிய பான விற்பனையில் பாதி பணம் வெளிநாட்டிற்கு போய்விடுகிறது.

headoffice : 6/58-1, Alwarkarkulam Road, Manakarai, Thoothukudi, Tamil Nadu 628619 ,
ph.no +91 92448 22589, +91 98433 22589

பவர் சோப்




உள்ளூர் பொருட்களை ஆதரிப்போம் - 2


பவர் சோப்


திண்டுக்கல்லை அடுத்த கொடைரோட்டில் 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது பவர் சோப் கம்பெனி . ஆரம்பத்தில் சலவை சோப் மட்டும் தயாரித்த பவர் நிறுவனம் , பின்னர் சோப்பு தூள் , குளியல் சோப் என நிறைய ரகங்களை தயாரிக்கிறது.


இப்போது சென்னை , பாண்டிச்சேரி , சில்வாசா உட்பட பல இடங்களில் தன் தொழிற்சாலையை விரிவு படுத்தி உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் சலவை சோப் விற்பனையில் குறிப்பிட தக்க அளவிற்கு பவர் விற்பனை ஆவதை அறிந்த யூனிலீவர் நிறுவனம் அதை வாங்க பெரிய அளவில் முயற்சிகள் செய்தது. ஆனால் பவர் சோப் உரிமையாளர் விற்பனை செய்ய மறுத்துவிட்டார்.

குளியல் சோப்பில் பப்பாளி , எலுமிச்சை , ஹெர்பல் , ரோஸ் , லேவண்டர் , சந்தனம் என பல ரகங்களை அறிமுகப் படுத்தியது. ஜியோ பவர் என்ற பெயரில் டிஷ்வாஷ் பார்களை வெளியிட்டுள்ளது .

தென்னிந்தியாவெங்கும் விற்பனை ஆகும் பவர் தயாரிப்புகள் , இப்போது வளைகுடா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப் படுகிறது.

POWER PRODUCTS : NATURE POWER BATH SOAP , POWER DETERGENT SOAP , WASHING POWDER , GIO POWER DISHWASH BAR .....


HEAD OFFICE : Abirami Soap Works
R.S.No.94/1, Embalam Main Road
Sembiapalayam Village,
Korkadu Post
Puducherry 605 110
Contact0413 2665226,0413 2266111

AVIOD : MNC BRANDS , UNILEAVER , P&G , YARDLY SOAPS

புதன், 25 ஜனவரி, 2017

ரோசாப்பூ ரவிக்கைக்காரி

ரோசாப்பூ ரவிக்கைக்காரி 


தேவராஜ் மோகன் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்தது இந்த படம். முழு படமும் ஏற்காடு அருகே உள்ள வாழவந்தி போன்ற மலை கிராமங்களில் எடுக்கப்பட்டது.

"வெத்தல வெத்தல வெத்தலையோ..."
"உச்சி வகுந்தெடுத்து ..."
"என்னுள்ளில் எங்கோ கேட்கும் கீதம் ...."

இளையராஜாவின் இந்த பாடல்களுக்காக மட்டுமே இந்த படம் இன்னும் நினைவில் நிற்கிறது.

கதை ,திரைக்கதை தேவராஜ் மோகன் . ஆனால் இந்த படம் அதே ஆண்டு வெளியான God must be crazy என்ற ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்டது . அந்த படத்தில் எளிமையாக , ஒற்றுமையாக வாழும் ஒரு பழங்குடி மக்களிடையே ஒரு கோக் பாட்டில் கிடைக்க , அதன் மூலம் அவர்களின் வாழ்வில் நடக்கும் பிரச்சனைகளை சொல்லி இருப்பார்கள்.


அதே கதைதான். ஒற்றுமையாக , எளிமையாக வாழும் மலைவாழ் மக்கள் குடும்பத்தில் வாக்கப்பட்டு செல்கிறாள் நாகரிக பெண் ஒருத்தி. ரவிக்கை அணியாத மக்களிடையே நாகரிக மோகத்தை புகுத்துகிறாள் . ஆனால் ரவிக்கை அணியாத காலத்தில் விகல்பம் இல்லாமல் கண்ணியமாக வாழ்ந்த மக்கள் , நாகரீகம் வந்த பிறகு கெட தொடங்குகிறார்கள். செயற்கையான நாகரிகமே வாழ்வை அழித்துவிடும் என்ற கருத்தோடு முடிகிறது படம். சிவகுமாரும் தீபாவும் வாழ்த்து காட்டி இருக்கிறார்கள்.

God must be crazy போல இந்த படமும் மிகவும் மெதுவாக தான் நகர்கிறது . நிறைய பேருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் எளிமையை , ஒற்றுமையை , கூட்டு குடும்ப வாழ்க்கையை , இயற்கையை , கலாச்சாரத்தை அருமையாக உணர்த்தும் படம் . நான் இப்போது தான் பார்த்தேன்.நீங்களும் முடிந்தால் பாருங்கள் .

Mohan ,Salem.

செவ்வாய், 24 ஜனவரி, 2017

நரசுஸ்

உள்ளூர் பொருட்களை ஆதரிப்போம் - 1


நரசுஸ்



உள்ளூர் பொருட்களில் முதலாவதாக எங்கள் சேலத்தை சேர்ந்த நரசுஸ் நிறுவனத்தை அறிமுகப் படுத்துவதில் பெருமை அடைகிறேன் .
இந்தியாவின் பாரம்பரிய காபி நிறுவங்களில் சேலம் நரசுஸ் காபியும் ( Since 1926 ) ஒன்று. ஆரம்பத்தில் நரசுஸ் PB , நரசுஸ் REB என்ற இரண்டு ரகங்களில் பில்ட்டர் காபி ரகங்கள் வந்தது. 15 ஆண்டுகளுக்கு முன் சிக்கரி கலந்த காபி உதயம் என்ற பெயரில் வெளிவந்தது.

MNC நிறுவனங்களுக்கு இணையாக இன்ஸ்டன்ட் காபி தயாரிக்கும் தொழிற்சாலையை சேலம் வீராணம் பகுதியில் 400 கோடி முதலீட்டில் 2009 ஆண்டு தொடங்கப் பட்டது . ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப் பட்டது.

சுவை மிகுந்த நரசுஸ் தயாரிப்புகள் ...

Narasus PB , REB, Udhayam , Instant coffee pure , Instant strong , hotel blend filter coffee , instant 200g hotel pack , Chicory , Akshara tea ....

Head office :
16 ,COURT ROAD, JOHNSONPET, SALEM - 636 007
TEL :0427-2418877 / 2417560 / 2416192
www.http://narasuscoffee.in

Avoid MNC Brands : BRU , SUNRISE

உள்ளூர் பொருட்களை ஆதரிப்போம் - 1

செவ்வாய், 10 ஜனவரி, 2017

தமிழுக்கு அமுதென்று பேர் 1

தமிழுக்கு அமுதென்று பேர் 



ஆற்று வெள்ளம் நாளை வரத்
தோற்றுதே குறி - மலை
யாளமின்னல் ஈழமின்னல்
சூழ மின்னுதே
நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக்
காற்று அடிக்குதே - கேணி
நீர்ப்படு சொறித் தவளை
கூப்பிடுகுதே
சேற்று நண்டு சேற்றில் வளை
ஏற்று அடைக்குதே - மழை
தேடி ஒருகோடி வானம்
பாடி யாடுதே
போற்றுதிரு மால்அழகர்க்கு
ஏற்றமாம் பண்ணைச் - சேரிப்
புள்ளிப் பள்ளர் ஆடிப்பாடித்
துள்ளிக் கொள்வோமே


[முக்கூடற் பள்ளு]


நாளைய தினம் ஆற்றிலே வெள்ளம் வர இருப்பதற்குரிய அறிகுறிகள் தென்படுகின்றன. தென்மேற்குத் திசையிலே மலையாள மின்னல் மின்னிக் கொண்டுள்ளது. தென் கிழக்குத் திசையிலே ஈழத்து மின்னல் மின்னிக் கொண்டுள்ளது. நேற்றும் இன்றும் மரக்கொம்புகளைச் சுற்றியவாறு காற்று அடிக்கிறது. கிணற்றிலே உள்ள சொறித்தவளைகள் கூப்பாடு போடுகின்றன. நண்டுகள் தம் வளைகளுள் மழை நீர் புகுந்து விடாதபடி வாயில்களைச் சேற்றினால் அடைக்கின்றன. மழை நீரைத் தேடிக் கோடி வானம்பாடிகள் அங்கும் இங்கும் பறக்கின்றன. இதோ நாம் சந்தோசமாக ஆடிப்பாடி உழவுத் தொழிலை ஆரம்பிக்கலாம் .

தமிழுக்கு அமுதென்று பேர் - 1