செவ்வாய், 26 ஏப்ரல், 2016

கஜினி முகமது

வரலாறு முக்கியம் அமைச்சரே - 1

கஜினி முகமது


விடாமுயற்சிக்கு உதாரணமாக சொல்வது கஜினி முகமதுவை. அவன் 17 முறை தோற்றாலும் விடாமல் முயற்சி செய்து வெற்றி பெற்றான் என வரலாறு பாடத்தில் சொல்லி கொடுக்கப்பட்டது. ஆனால் அது உண்மை அல்ல ...

இன்றைய ஆப்கானின் சாமர்கன்ட் பகுதியை சேர்ந்தவன் கஜினி முகமது . பாரசிக பேரரசுக்கு உட்பட்ட அரசில் அமீர் என்ற பொறுப்பில் இருந்த கஜினி , தனக்கென ஒரு படையை உருவாக்கி காந்தகார் உட்பட சில பகுதிகளை பிடித்து தன்னை மன்னனாக அறிவித்து கொண்டான் . பெஷாவர் அருகே நடைபெற்ற போரில் வட இந்திய மன்னன் ஜெயபாலனை வென்று அப்பகுதியை கைப்பற்றினான். இருந்தாலும் அவன் ஆசை எல்லாம் அன்று செல்வ செழிப்போடு இருந்த இந்தியா மீதே இருந்தது. காரணம் அன்று வடஇந்திய அரண்மனைகளிலும் கோவில்களிலும் தங்கம், வைரம் என கொட்டிக்கிடந்தது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஊரை குறிவைத்து தாக்கினான். அங்குள்ள அரண்மனை, கோவில்களை அழித்து , மக்களை கொன்று சொத்துக்களை கைப்பற்றி கொண்டு ஊர் திரும்புவான். குவாலியர்,உஜ்ஜயினி , மதுரா, துவாரகை , டில்லி , அஜ்மீர் என கிட்டத்தட்ட ஆண்டுக்கு ஒரு ஊரை (கி. பி., 998 முதல் 1030 வரை)அழித்தான்.

கடைசியாக சோமநாதர் ஆலயத்தை தாக்கினான். 50000 பேரை ஒரே நாளில் கொன்றான். 20000 பேரை அடிமையாக பிடித்து சென்றான். சுமார் 1000 யானைகளில் நகைகளை அள்ளிச்சென்றான் .

பள்ளி பாடத்தில் சொல்லி கொடுத்தது போல அவன் 17 முறை தோற்கவில்லை. எல்லா முறையும் வெற்றியே பெற்றான். இரண்டாவது அவன் மாவீரன் அல்ல. கொடூர கொலைகாரன் , கொள்ளையன்.

வரலாறு‬ முக்கியம் அமைச்சரே – 1

வாஸ்கோடகாமா‬

வரலாறு முக்கியம் அமைச்சரே - 2


வாஸ்கோடகாமா‬


இவர்தான் இந்தியாவை கண்டுபிடித்தார். அவர் வந்து இறங்கிய இடம் கள்ளிக்கோட்டை ( கோழிக்கோடு ) . நமக்கு பள்ளியில் சொல்லிக்கொடுத்தது இதுதான். மேலும் அவரை கவுரவப் படுத்தும் வகையில் கோவாவின் ஒரு பகுதிக்கு வாஸ்கோடகாமா என பெயரிட்டுள்ளோம் .

1400-1500 களில் உலகில் மிகவும் செல்வ செழிப்போடு இருந்த நாடு இந்தியா. மிளகு, ஏலக்காய் , தங்கம் , நவரத்தினங்கள் , ஆடைகள் ... என இந்திய பொருட்கள் மீது ஐரோப்பியர்களுக்கு அதிக மோகம். பட்டு பாதை வழியாக சீனர்களும் , மத்திய தரைக்கடல் வழியே கிரேக்கர்களும் இந்திய பொருட்களை அங்கு கொண்டுபோய் விற்பனை செய்தனர். ஆனால் அதிக விலை கொடுக்க வேண்டி இருந்தது . இந்த பாதை வழியாக ஐரோப்பியர்கள் நேரடியாக இந்தியா சென்று வணிகம் செய்ய அனுமதி இல்லை. எனவே கடல் வழியே இந்தியா செல்லும் வழியை கண்டுபிடிக்க போர்சுகல் , ஸ்பெயின் , இங்கிலாந்து மன்னர்கள் முடிவு செய்தனர். மாலுமிகளுக்கு ஏராளமான பணம் கொடுத்து தேட சொன்னார்கள்.

100 ஆண்டு காலம் ஏராளமானோர் முயன்றனர். கடைசியாக 20.5.1498 அன்று கோழிகோடு வந்து சேர்ந்தார் வாஸ்கோடகாமா . அந்த பகுதியை ஆண்ட மன்னர் அவரை வரவேற்று விலைமதிப்பற்ற பொருட்களை பரிசாக அளித்தார். நாடு திரும்பிய அவன் 3 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பி வந்து கண்ணனூர் அருகே வணிகத்தளம் அமைத்தான். சிறிது சிறிதாக சில பகுதிகளை ஆக்கிரமித்தான் . எதிர்த்தவர்களை கொலை செய்தான். கோபமுற்ற மன்னர் அவனையும் அவன் ஆட்களையும் அடித்து துரத்தினார். சில நூறு போர்ச்சுகீசியர்கள் இறந்தனர். மீண்டும் சில ஆண்டுகள் கழித்து ஒரு பெரும் படையுடன் வந்து போர்த்துகீசிய காலனியை இந்தியாவில் உருவாக்கினான். பின்னாளில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை சுரண்டியதற்கும் இவன்தான் காரணம்.

எனவே இந்தியாவிற்கு கடல் வழியை கண்டுபிடித்தவர் வாஸ்கோடகாமா என ஐரோப்பிய பள்ளிகளில் வேண்டுமானால் பெருமையாக் சொல்லி தரலாம் . நமக்கு பெருமை இல்லை. ஏனெனில் அவன் வருவதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்கம் , அரேபியா, சீனா, சுமத்திரா என கடல் வணிகம் செய்தவர்கள் நாம். !

‪‎வரலாறு‬ முக்கியம் அமைச்சரே – 2

ஔரங்கசீப்‬

.

வரலாறு‬ முக்கியம் அமைச்சரே – 3


ஔரங்கசீப்‬


சரியான உச்சரிப்பு ஔரங்கஜேப் .பாரசீக மொழியில் ஔரங்கஜேப் என்ற சொல்லுக்கு, அழகிய அரசு சிம்மாசனம் என்று பொருள். ஆலம்கீர் ஔரங்கஜேப் பாதுஷா என்ற பெயரில் ஆண்ட இந்த மன்னரை ஒரு கொடுங்கோலராக நமக்கு பள்ளியில் சொல்லி கொடுத்திருக்கிறார்கள் . இது எவ்வளவு உண்மை...?

தந்தையை சிறையில் அடைத்தவர். சகோதரனைக் கொன்று அரசரானவர். இந்துக்கள் மீது ஜெசியா வரியை விதித்தவர். சிவாஜியை கைது செய்தவர் என்பன .

ஆனால் வரலாற்றை பார்த்தால் எந்த மன்னனுமே பதவி ஏற்கும்போது , தனக்கு போட்டியாக வரும் என நினைப்பவர்களை கொன்று இருக்கிறார்கள். ஔரங்கஜேப்பின் தந்தை ஷாஜஹானும் அப்படிதான் மன்னரானார். அதே போல் ஷாஜஹான் மூத்த மகனுடன் சேர்ந்து சதி செய்து இருந்தாலும் , அவரை கொல்லாமல் வீட்டு சிறையில் வைத்தார்.

இந்துக்கள் மீது மட்டும் ஜெசியா வரி விதித்தார் என பள்ளியில் சொல்லி குடுத்தார்கள். ஆனால் அவர் முஸ்லீம்களுக்கும் வேறு பெயரில் வரி விதித்தார். அதே நேரத்தில் ஏழ்மையானவர்கள் , போரில் குடும்பத்தை இழந்தவர்களுக்கு வரி விலக்கும் அளித்தார். எல்லா மன்னர்களும் வரி வாங்கி தான் ஆட்சி நடத்தினார்கள்.

சிவாஜியை பொறுத்தவரை அவர் ஏதாவது ஒரு முகலாய பகுதியை பிடித்துக் கொள்வார். ஔரங்கஜேப் அதை மீட்பார் . சிவாஜி காலம் முடியும் வரை (25 ஆண்டுகள் )இது தொடர்ந்தது. ஆரம்ப காலத்தில் ஒருமுறை சிவாஜியை கைது செய்தார் . சிவாஜி தப்பிவிட்டார்.

சாதனைகள்
-------------------

1. அகண்ட பாரதத்தை ஆண்ட ஒரே மன்னர் இவர் மட்டுமே. இன்றைய ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் , வங்கதேசம் முதல் மதுரை வரை அவர் சாம்ராஜ்யம் விரிந்து இருந்தது.

2. மதுவை தொடாதவர். அரசு கஜானாவை தனது சொந்த செலவிற்கு இவர் பயன்படுத்தியது கிடையாது. தனக்காக ஆடம்பர செலவில் மாளிகைகள் கட்டியது இல்லை

3. 20 ஆண்டுகள் இளவரசராக பல போர்களை வழி நடத்தினார். 50 ஆண்டுகாலம் பேரரசராக ஆட்சி புரிந்தார். இந்த சாதனை இவரை தவிர யாரும் செய்ததில்லை.

4. ''தனது மரணத்திற்கு பின் தனது இறுதிச்சடங்கிற்கு தன் வாழ்நாளில் திருகுரான் எழுதியும், தொப்பி தைத்தும் விற்பனை செய்து சேர்த்து வைத்த சிறு தொகையை மட்டுமே செலவு செய்ய வேண்டும். ஆடம்பர கல்லறை கட்டக் கூடாது'' என உயில் எழுதி வைத்தார். [இதை எழுதிய போது பரத கண்டம் முழுதும் அவர் ஆட்சி செய்து கொண்டிருந்தார்.!]

ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

மோகன் தேர்தல் அறிக்கை 2016

மோகன் தேர்தல் அறிக்கை 2016


1. தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரி , குளங்களும் தூர்வாரப்படும் . ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். ஏரி , குளங்களுக்கு தனி அமைச்சர் நியமிக்கப்படுவார்.
2. குளிர்பான நிறுவனங்கள் , மினரல் வாட்டர் நிறுவனங்கள் , அதிக நீர் உபயோகிக்கும் தொழிற்சாலைகள் போன்றவை கடலோரத்திற்கு மாற்றப்படும். கடல்நீரை சுத்திகரித்துப் பயன்படுத்தினால் வாழ்நாள் முழுவதும் முழு வரிவிலக்கு அளிக்கப்படும்.
3.சிறு வணிக நிறுவனங்கள் ஒரே துறையின் கீழ் கொண்டுவரப்படும். தொழிலாளர் நலன் , எடை முத்திரை ஆய்வு , உணவு பாதுகாப்பு , உள்ளாட்சி வரிகள் , வணிக வரி ...எல்லாம் ஒரே அலுவலகத்தின் கீழ் கொண்டுவரப் படும்.
4. ஆன்லைன் வர்த்தகத்திற்கு 10 சதவீத வரி விதிக்கப்படும் ( 2 கோடி வணிகர்களின் வாழ்வாதாரம் வெறும் 20 நிறுவனங்களால் பாதிக்கப்படுகிறது )
5. டோல்கேட்கள் அரசுடமையாக்கப்படும்.
6. விளைநிலங்கள் பிளாட் போடுவது குற்றமாக அறிவிக்கப்படும். குறைந்தது 10 ஆண்டுகள் விவசாயம் செய்யாமல், அரசு மின்சாரம் , மானியம் போன்றவற்றை பயன்படுத்தாமல் இருந்தால் மட்டுமே பிளாட் போட அனுமதிக்கப்படும்.
7. அடுக்குமாடி குடியிருப்புகள் , வணிக வளாகங்கள் , ஹோட்டல்கள் போன்றவற்றில் கழிவுநீர் சுத்திகரிப்பு , மழைநீர் சேகரிப்புக்கு மும்பையில் உள்ளது போல ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பது கட்டாயம் ஆக்கப்படும்.
8. அனைத்து நகரங்களிலும் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்கப்படும் .
9. அனைத்து காய்கறிகளுக்கும் குறைந்த பட்ச விலை ரூ.10 ஆக நிர்ணயிக்கப்படும். அதற்கு கீழே விலை வரும் போதெல்லாம் அரசு மையங்களில் 10 ரூபாய் விலையில் கொடுத்துவிடாம்.
10. ஆற்று மணல் அள்ள தடை விதிக்கப்படும். அதற்கு பதிலாக கிரஷர் மணல் பயன்படுத்தப்படும் .
11. ஒவ்வொரு துறைக்கும் சகாயம் போன்ற நேர்மையான அதிகாரி தலைவராக நியமிக்கப் படுவார். ஒரு நேர்மையான அதிகாரி இருந்தால் 1000 ஊழல்வாதிகளை கட்டுப்படுத்தமுடியும்.
12. அணு உலைகள் மூடப்படும் .
13. தமிழகத்தில் உள்ள குண்டு பல்ப் , சோடியம் மெர்குரி பல்ப்கள் , டியூப் லைட் போன்றவற்றிற்கு பதிலாக LED பல்புகள் மாற்றினால் 5000 மெகாவாட் மின்சாரம் மீதி ஆகும் . இது கூடங்குளம் அணு உலையில் உற்பத்தி ஆகும் மின்சாரத்தைவிட 5 மடங்கு அதிகம். உடனடியாக நடைமுறைப் படுத்தப்படும் . குறைந்த மின்சாரத்தில் இயங்கும் LED விளக்குகளுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்படும்.
14. +2 தேர்வில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவனுக்கும் 5 லட்ச ரூபாய் , அவன் ஆசிரியர்களுக்கு தலா 1 லட்சம் , அந்த பள்ளியை மேம்படுத்த 1 கோடி வழங்கப்படும்.
15. தன் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் படிக்கவைக்கும் அரசு ஊழியர்களுக்கு மாதம் 5 ஆயிரம் சம்பளம் அதிகமாக தருவோம். ( ஆசையை தூண்டினால் தான் வேலை ஆகும் )
எதிர்காலத்தில் நான் ஆட்சிக்கு வந்தால் இவை அனைத்தும் நிறைவேற்றுவேன் என உறுதி அளிக்கிறேன்.
-மோகன், சேலம் .

ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

தேவை ஒரு சுறுசுறுப்பான முதல்வர்

 தேவை ஒரு சுறுசுறுப்பான முதல்வர்


இது அரசியல் பதிவுதான் . ஆனால் அனைவரும் படிக்க வேண்டிய அவசியமான பதிவு .

சுறுசுறுப்பாக மக்களோடு பழகும் ஒரு முதல்வர் தமிழகத்திற்கு கிடைக்க மாட்டாரா...

வயோதிகத்தில் கலைஞர்
நடக்க முடியாத பிரச்சனையில் ஜெயலலிதா 
தைராய்டு, டான்சில் , கல்லீரல் பிரச்சனைகளில் விஜயகாந்த்
ஏதோ பெரிய பிரச்சனைக்காக லண்டனில் சிகிச்சை பெற்றுவரும் ஸ்டாலின்
இருதய அறுவைசிகிச்சை செய்து ஓய்வில் உள்ள இளங்கோவன் 

இவர்களை தவிர்த்து பார்த்தால் அன்புமணி மட்டுமே ஆரோக்யமான நபராக இருக்கிறார். அவர் முதல்வர் வேட்பாளராக சொன்னாலும் இந்த தேர்தலில் அவர் முதல்வராகும் வாய்ப்பு ஒரு சதவீதம் கூட இல்லை. ஸ்டாலின் நமக்கு நாமே என எல்லா ஊரும் சுற்றி காட்டினாலும் அவை எல்லாமே மிகவும் பக்காவாக திட்டமிடப்பட்டு தினமும் ஒரு மணிநேரம் நடத்தப்பட்ட நிகழ்சிகள் . முதல்வர் ஆனால் அவரால் மக்களோடு இறங்கி பணிபுரிய முடியுமா என்பது கேள்விக்குறி . மேலும் ஸ்டாலினின் ஆரோக்கியம் குறித்து அழகிரி ஒருமுறை சொன்னதும் அதற்கு கலைஞர் வருந்தியதும் தெரிந்த விஷயம்.

வைகோ சுறுசுறுப்பாக மக்களோடு மக்களாக காலத்தில் நிற்ப்பவர்தான். ஆனால் அவரும் முதல்வர் போட்டியில் இல்லை. சகாயம் போன்றவர்கள் எல்லாம் வெறும் கனவு நாயகர்கள் மட்டுமே. அப்படியென்றால் யாருக்குமே வயதாகாது , நோய் வராது என சொல்லவில்லை . 8 கோடி மக்களின் தலைவர் அந்த மக்களுக்காக காலத்தில் நிற்கவேண்டும் என சொல்கிறேன்.

அப்துல் கலாம் அய்யா இறக்கும் நொடி வரை மக்களோடு இருந்தார். 88 வயது பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் இன்னமும் வாரம் ஒரு குக்கிராமத்திற்கு சென்று மக்களை சந்திக்கிறார். 70 வயது உம்மன் சாண்டி ரயிலில் மக்களோடு பயணிக்கிறார். சர்ச் வாசலில் தரையில் அமர்ந்து மக்களோடு பேசுகிறார்.70 வயது ரங்கசாமி பைக்கில் போகிறார். டீக்கடையில் நின்று டீ குடிக்கிறார். 60 வயதை கடந்த சந்திரபாபு நாயுடு பெருமழையின் போது சாலையில் இறங்கி போராடுகிறார். சாக்கடையில் இறங்குகிறார். அரவிந்த் கேஜ்ரிவாலை பற்றி சொல்ல தேவையில்லை .
தமிழகத்தை பொறுத்தவரை காமராஜரின் கால்கள் மட்டுமே தமிழகத்தின் குக்கிராமதிற்கும் சென்றது . அதன் பின் எம்ஜியார் வாகனத்தில் சென்றவாராவது மக்களை சந்தித்தார். அதன் பிறகான இந்த 30 ஆண்டு காலத்தில் தேர்தல் பிரசாரத்தின் போதும் , பொதுக் கூட்டங்களிலும் மட்டுமே முதல்வரை பார்க்க முடியும் என்று ஆனது.

இத்தனை லட்சம் உறுப்பினர்களை கொண்ட திமுகவிலும் , அதிமுகவிலும் ஒரு இளம் தலைவரை உருவாக்குவது முடியாத காரியமில்லை. செய்யவேண்டும். அதே நேரத்தில் இவர்களின் அனுபவம் பெரியது . எனவே பின்னால் இருந்து வழி நடத்தட்டும்.

எங்களுக்கு தேவை மக்களோடு இருக்க கூடிய ஒரு தலைவர் அவ்வளவுதான். கேரளாவைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.