சனி, 14 மார்ச், 2015

அங்க பிரதக்ஷணம்



சோழ நாடு. மாலை நேரம் .. 


அரண்மனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த அம்மன் கோவிலை வலம் வந்து கொண்டிருந்தார் மன்னர் . அரண்மனை தலைமை வைத்தியர் மன்னரை காண வந்தார்.

“ வாருங்கள் வைத்தியரே  

“ வணக்கம் மன்னா.. தங்கள் உடல்நிலை தற்போது எப்படி இருக்கிறது..?

“அருமையாக உள்ளது . எல்லாம் உங்களால் தான் . எப்படி குணப்படுத்தினீர்கள். எனக்கு குணமானதும் சொல்வதாக சொன்னீர்கள். இப்போது சொல்லுங்கள் “

“ கூறுகிறேன் மன்னா... நீங்கள் சில மாதங்களுக்கு முன் படுத்த படுக்கை ஆகிவிட்டீர்கள் . நான் எவ்வளவோ முயற்சித்தும் குணம் ஆகவில்லை. உங்களுக்காக நிறைய வைத்திய சாஸ்திர நூல்களை ஆராய்ந்தேன். அதில் தான் இந்த முறையை கண்டுபிடித்தேன். நம் உடலின் சில பகுதிகளில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் நம் நரம்பு மண்டலத்தை தூண்ட முடியும். சீன தேசத்தில் சிறிய ஊசிகளை உடலெங்கும் குத்தி சிகிச்சை செய்கிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் மிகவும் எளிய முறையை வடிவமைத்து உள்ளனர். 

சீரான புள்ளிகள் அமைக்கப்பட்ட குறிப்பிட்ட ரக கருங்கல்லில் அதிகாலையில் சில முறை உருள வேண்டும். அது போல சில நாட்கள் செய்தால் நரம்புகள் தூண்டப் பட்டு நோய்கள் குணமாகும். அதே நேரத்தில் வெறுமனே தங்களை கல்லில் உருள சொன்னால் யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.

நம் ஊர் அம்மன் மீது தங்களுக்கு மிகவும் பக்தி உள்ளது என அறிவேன். எனவே நம் ஸ்தபதி அவர்களிடம் கூறி அதே மாதிரி சக்தியான அம்மன் கோவில் ஒன்றை அரண்மனை வளாகத்தில் நிறுவ சொன்னேன். அதன் பின்னர் கல் தச்சரிடம் கூறி மருத்துவ குணம் வாய்ந்த கருங்கல் பலகைகளை கருவறையை சுற்றி அமைக்க சொன்னேன். நான் குடுத்த சில மூலிகைகளை தடவிக் கொண்டு நீங்கள் அங்க பிரதக்ஷணம் செய்தீர்கள். அம்மன் மீது நீங்கள் கொண்டிருந்த பக்தியும் , கருங்கல்லின் சக்தியும் சேர்ந்து தங்களை குணப்படுத்தியது.’’

“ ஆஹா அற்புதம்.. அற்புதம் ... இன்னும் இதில் வேறு விசேஷம் உண்டா வைத்தியரே...

“ உண்டு மன்னா... அம்மை நோய் கண்டவர்கள் , குணமாகும் தருணத்தில் உடலில் வேப்பிலை சுற்றி ஈர உடையுடன் இடமிருந்து வலமாக அங்க பிரதக்ஷணம் செய்தால் அம்மை முற்றிலும் குணமாகும். தினமும் வெறும் காலில் சில சுற்றுகள் வலம் வந்தால் கால் நரம்புகள் தூண்டப்படும். சிறிது நேரம் பத்மாசன முறையில் அமர்திருந்தால் கூட பலன் கிடைக்கும்.
“அருமை ... ஆனால் இதை வைத்திய சாலையிலேயே செய்யலாமே ... கோவில் எதற்கு.. “

“ என்னதான் மருந்து கொடுத்தாலும் நம்பிக்கை முக்கியம். இறைவனிடம் நம்பிக்கை வைத்து செய்யும் போது மனம் ஒருநிலைப் படுத்தப்படும்

“ மிக்க நன்று வைத்தியரே... நம் சோழ தேசத்தில் உள்ள எல்லா ஆலயங்களிலும் இதை உடனே நடைமுறை படுத்துங்கள். அதே நேரத்தில் இவ்வளவு விவரங்களை கூறவேண்டாம் . பாமர மக்களுக்கு புரியாது. இறைவன் மீது நம்பிக்கை வைத்து செய்தால் உடல் நலன் பெறும் என மட்டும் கூறுங்கள் “

“ அப்படியே ஆகட்டும் மன்னா “

[கால இயந்திரத்தில் சென்று இந்த உரையாடலை கேட்டது – மோகன்,சேலம்.]

இன்று நாம் கோவிலில் அங்க பிரதக்ஷணம் செய்வதும், வலம் வருவதும் , சாமி கும்பிட்டபின் சிறிது நேரம் அமர்ந்திருப்பதும் மேற்சொன்ன காரணத்தால்தான். ஆனால் கருங்கல்லை மறந்துவிட்டு, டைல்ஸ் இல் வலம் வருகிறோம் என்பதை நான் மன்னரிடம் சொல்லவில்லை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக