வியாழன், 30 ஜூன், 2016

பாகற்காய் இலை‬

30 நாள் 30 மருத்துவம்  - நாள் 5

 

பாகற்காய் இலை‬

 
நான் சிறுவனாக இருக்கும் போது எங்கள் வீட்டில் பாகற்காய் செடி இருக்கும். உண்மையில் அது கொடி . பந்தல் போட்டு படர விட்டிருப்பார் அப்பா. நிறைய காய் காய்க்கும்.

1.பாகற்காய் இலை வயிற்றுப பூச்சிகளை நீக்கும் அற்புதமான மருந்து. வயிற்றில் பூச்சி இருந்தால் கொழுந்து இலைகளாகப் பறித்து , அம்மியில் அரைத்து , கோலிகுண்டு அளவில் சிறு உருண்டைகளாக உருட்டி எங்களுக்கு ( எனக்கும், தங்கைகளுக்கும் ) தருவார் அப்பா . கசக்கும் என்பதால் நாங்கள் சாப்பிட மாட்டோம். அதற்கு ஒரு வழி வைத்திருந்தார்.

ஒரு கையில் கொஞ்சம் சர்க்கரை . இன்னொரு கையில் நாலணா ( 25 பைசா ) காசும் தருவார். பாகற்காய் இலை உருண்டையை வாயில் போட்டு முழுங்கிவிட்டு சர்க்கரையை போட்டுக்கொள்வோம். பிறகு ஒரே ஓட்டம் . பெட்டிக்கடையில் நாலணாவிற்கு கல்கோனா, எலந்தவடை என வாங்கி கொண்டாடுவோம்.

3 மாதத்திற்கு ஒருமுறை இந்த வைத்தியம் தொடரும். இன்றிய நவீன மருந்துகளை விட பல மடங்கு சிறந்தது பாகற்காய் இலை.

2. தாய்ப்பால் குறைவாக சுரக்கும் தாய்மார்கள் , பாகற்காய் இலையை அரைத்து தொடர்ந்து பற்று போட்டுவந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும் .( பால் கொடுக்கும் போது கசப்பு சுவை போக நன்கு கழுவிவிடவும் )

3.நீரில் பாகற்காய் இலையை இட்டு 3 நிமிடம் நன்கு கொதிக்க வைக்கவும். கொதித்ததும் அத்துடன் 1 தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள் கலந்து வடிக்கட்டி சுவைக்கு தேன் சேர்த்து பருகவும். இந்த டீ இரத்த அழுத்தத்தை சீராக்கும். இரத்தத்தில் இருக்கும் அதிக கொழுப்பை குறைக்கும்.

4.பாகற்காயின் இலைகளை அரைத்து உடல் முழுவதும் பத்துப்போட்டால் சிரங்கு ஒழிந்துவிடும்.

5.பாகற்காய் இலை வறுவல்

__________________
தேவையானவை

பாகற்காய் இலை -1கப்
சின்ன வெங்காயம் -10
காய்ந்தமிளகாய் -2
கறிவேப்பிலை -சிறிது
உப்பு -தேவையான அளவு
தேங்காய் துறுவல் -1/4கப்
எண்ணை -1ஸ்பூன்
கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு -1/2ஸ்பூன்

செய்முறை

A.இலையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.
B.வெங்காயம்,மிளகாய் நறுக்கிவைக்கவும்.
C.வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு தாளித்து வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
D.பாகற்காய் இலை போட்டு நன்கு வதக்கி அடுப்பை சிம்மில் வைத்து வேகவிடவும்.
E.வெந்ததும் உப்பு போட்டு தேங்காய்துறுவல் போட்டு வதக்கி இறக்கவும்.
F.சிறிது கசப்புடன் இருக்கும். மாதம் ஒருமுறை சாப்பிட்டால் வயிற்றில் உள்ள பூச்சிகள் போகும்.

வெள்ளி, 24 ஜூன், 2016

சிகப்பு கொய்யா‬

30 நாள் 30 மருத்துவம் - நாள் 4


சிகப்பு கொய்யா‬

 
சமீபத்தில் நடந்த உலகில் சிறந்த பழம் எது என்ற ஆய்வில் நம் தமிழகத்தில் விளையும் சிகப்பு கொய்யா முதல் இடம் பிடித்துள்ளது . உணவியல் நிபுணர்களும் இதை உறுதி செய்துள்ளனர். இன்று ஹைபிரீடு வெள்ளைக் கொய்யா அதிகம் உள்ளது . ஆனால் நாட்டு ரக சிகப்பு கொய்யா மிகச்சிறந்த பழம் ஆகும்.

1.வேறு எந்தப் பழத்திலும் இல்லாத அளவுக்கு வைட்டமின் C கொய்யாவில் உள்ளது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும்.

2. கொய்யாவின் தோலில் தான் அதிக சத்துக்கள் உள்ளன. எனவே தோலோடு சாப்பிட வேண்டும்.

3.சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் மதிய உணவுக்குப் பின் கொய்யா பழம் (அதிகம் பழுக்காத) உண்ணலாம். கொய்யா பழத்திற்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மை உண்டு . சர்க்கரையால் உண்டாகும் கிறுகிறுப்பை மாற்றும். மலச்சிக்கலைப் போக்கும்.
வயிற்றுப்புண்ணை ஆற்றும். அதிக நார்ச்சத்துள்ளதால் செரிமான சக்தியை அதிகரிக்கிறது.

4. தொடர்ந்து கொய்யா சாப்பிட்டு வந்தால் மதுப்பழக்கம் குறையும்.

5. கொய்யாவில் உள்ள ரெட்டினால் பார்வை திறனை அதிகரிக்கும். இதில் உள்ள போலேட் என்ற தாது உப்பு இனப்பெருக்க உறுப்புகளை மேம்படுத்தும்.

6.சிவப்பு கொய்யாவில் லைகோபீன் சத்துக்கள் உள்ளதால், அலர்ஜி, ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மிகவும் நல்லது. மூப்படைவதைத் தாமதப்படுத்தி, சருமச் சுருக்கங்கள் ஏற்படாமல் காக்கும்.

7. சிகப்பு அரிசி அவல் அல்லது சிகப்பரிசி சாதத்துடன் சிகப்பு கொய்யா சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் .

8.கோடையில் வரும் சளி, இருமல், வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற உடல் பிரச்னைகள் தடுக்க சிகப்பு கொய்யா சிறந்தது.

9.ஈறுகளில் ரத்தக்கசிவை தடுக்கும்.

10. 100 கிராம் கொய்யாவில் உள்ள சத்துக்கள்
_______________________________________
ஈரப்பதம் - 77 - 86 கிராம்
நார்ச்சத்து -2.8 - 5.5 கிராம்
புரதம் - 0.9 - 1 கிராம்
கொழுப்பு -0.1 - 0.5 கிராம்
சாம்பல் சத்து 0.43 - 0.7 கிராம்
கார்போஹைட்ரேட் - 10 கிராம்
கால்சியம் - 9.1- 17 மி.கிராம்
பாஸ்பரஸ் - 17.8 - 30 மி.கிராம்
இரும்புசத்து - 0.30 - 0.70 மி.கிராம்
கரோட்டீன் - 200 - 400 ஐ.யு.
தையமின் - 0.046 மி.கிராம்
ரிபோப்ளேவின் - 0.03 - 0.04 மி.கிராம்
நியாசின் - 0.6 - 1.068 மி.கிராம்
விட்டமின் - பி3 40 ஐ.யு
விட்டமின் - பி4 35 ஐ.யு

மேலும் இதில் டெர்பினாய்டுகளும் கேலிக் அமிலமும் உள்ளன.

திங்கள், 20 ஜூன், 2016

ருவாண்டா


ருவாண்டா 


மத்திய ஆப்ரிக்க நாடான ருவாண்டாவிற்கு இன்று நம்ம பையன் ஒருத்தன் பணி நிமித்தமாக செல்கிறான். அந்த நாட்டைப் பத்தி தெரிஞ்சுக்குவோமே என தேடியதில் கிடைத்த தகவல்களை பகிர்கிறேன்.

1. ஆப்பிரிக்க கண்டத்தின் மைய பகுதியில் உகாண்டா , தான்சானியா நாடுகளுக்கு அருகே அமைந்துள்ளது ருவாண்டா. தலைநகர் கிகாலி . கிகாலி நம்ம ஊர் போலவே இருக்கிறது. மொத்த நாடுமே மலைப்பகுதியில் உள்ளது.மொழி கின்யருவாண்டா , மக்கள் தொகை 1.2 கோடி .

2. பெல்ஜியத்திடம் இருந்து 1962 ஆம் ஆடு விடுதலை ஆனது. 1994 இல் நடந்த உள்நாட்டு இனக்கலவரத்தில் சுமார் 8 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். அதன் பிறகாக சீர்திருத்தத்தில் வறுமையில் இருந்து கொஞ்சம் மீண்டாலும் ,இன்னும் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. இந்தியாவில் இருந்து பணிக்கு செல்பவர்கள் பாதுகாவலுருடன் தான் வெளியே செல்ல வேண்டும்.

3. நாடாளுமன்ற அமைப்பைக் கொண்ட மக்களாட்சி அரசு. உலகிலேயே அதிக பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட நாடு . மொத்தம் 80 MP களில் 45 பேர் பெண்கள்.

4. உலகில் உள்ள 221 நாடுகளில் மனிதனின் சராசரி ஆயுள் குறைவாக உள்ளது ருவாண்டாவில் தான். (பெண்களுக்கு 59.52 ,ஆண்களுக்கு 56.57 வருடங்கள்).

4. விவசாயத்தில் 80 சதவீதம் நைல் நதியை சார்ந்துள்ளது. சோளமாவில் தயாரிக்கப்படும் உகாலி (Ugali ) , வேகவைத்த வாழையில் இருந்து தயாரிக்கப்படும் மடோக் ( Matoke ) , மரவள்ளி இலையில் இருந்து இசோம்பே( Isombe , கருவாட்டுடன் சாப்பிடுவர் ) என்பது முக்கிய உணவுகள் .


5. தலைநகர் கிகாலியில் இந்திய , சைனீஸ் , இத்தாலி உணவுகள் கிடைக்கும் . சில பகுதிகளில் முதலைக் கறியும் கிடைக்கும்.!

6. உலகில் மலை கொரில்லாக்கள் பெரும்பான்மையானவை இங்குதான் உள்ளது. நாட்டிற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளில் 70 சதவீதம் அதைக் காணவே வருகிறார்கள்.


7. இந்தியாவில் இருந்து ருவாண்டாவிற்கு நேரடி விமானங்கள் இல்லை. துபாய் ,கத்தார் , கென்யா வழியாக கிகாலி செல்ல வேண்டும்.
8. ருவாண்டாவின் பணம் ருவாண்டன் பிராங் . நம் ஒரு ரூபாய்க்கு 11.62 ரு.பிராங் .

9. ருவாண்டாவில் கல்லூரிகள் அதிகம் இல்லை. நிறைய ருவாண்டா மாணவர்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சேலம் , வேலூர் , சிதம்பரம் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் படிக்கிறார்கள்.

10. இந்தியாவில் ருவாண்டா தூதரகம் புது டெல்லியில் உள்ளது.

புதிய நாடு .. புதிய மனிதர்கள் ... புதிய சூழ்நிலை .. புதிய அனுபவம் .