வியாழன், 30 ஜூன், 2016

பாகற்காய் இலை‬

30 நாள் 30 மருத்துவம்  - நாள் 5

 

பாகற்காய் இலை‬

 
நான் சிறுவனாக இருக்கும் போது எங்கள் வீட்டில் பாகற்காய் செடி இருக்கும். உண்மையில் அது கொடி . பந்தல் போட்டு படர விட்டிருப்பார் அப்பா. நிறைய காய் காய்க்கும்.

1.பாகற்காய் இலை வயிற்றுப பூச்சிகளை நீக்கும் அற்புதமான மருந்து. வயிற்றில் பூச்சி இருந்தால் கொழுந்து இலைகளாகப் பறித்து , அம்மியில் அரைத்து , கோலிகுண்டு அளவில் சிறு உருண்டைகளாக உருட்டி எங்களுக்கு ( எனக்கும், தங்கைகளுக்கும் ) தருவார் அப்பா . கசக்கும் என்பதால் நாங்கள் சாப்பிட மாட்டோம். அதற்கு ஒரு வழி வைத்திருந்தார்.

ஒரு கையில் கொஞ்சம் சர்க்கரை . இன்னொரு கையில் நாலணா ( 25 பைசா ) காசும் தருவார். பாகற்காய் இலை உருண்டையை வாயில் போட்டு முழுங்கிவிட்டு சர்க்கரையை போட்டுக்கொள்வோம். பிறகு ஒரே ஓட்டம் . பெட்டிக்கடையில் நாலணாவிற்கு கல்கோனா, எலந்தவடை என வாங்கி கொண்டாடுவோம்.

3 மாதத்திற்கு ஒருமுறை இந்த வைத்தியம் தொடரும். இன்றிய நவீன மருந்துகளை விட பல மடங்கு சிறந்தது பாகற்காய் இலை.

2. தாய்ப்பால் குறைவாக சுரக்கும் தாய்மார்கள் , பாகற்காய் இலையை அரைத்து தொடர்ந்து பற்று போட்டுவந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும் .( பால் கொடுக்கும் போது கசப்பு சுவை போக நன்கு கழுவிவிடவும் )

3.நீரில் பாகற்காய் இலையை இட்டு 3 நிமிடம் நன்கு கொதிக்க வைக்கவும். கொதித்ததும் அத்துடன் 1 தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள் கலந்து வடிக்கட்டி சுவைக்கு தேன் சேர்த்து பருகவும். இந்த டீ இரத்த அழுத்தத்தை சீராக்கும். இரத்தத்தில் இருக்கும் அதிக கொழுப்பை குறைக்கும்.

4.பாகற்காயின் இலைகளை அரைத்து உடல் முழுவதும் பத்துப்போட்டால் சிரங்கு ஒழிந்துவிடும்.

5.பாகற்காய் இலை வறுவல்

__________________
தேவையானவை

பாகற்காய் இலை -1கப்
சின்ன வெங்காயம் -10
காய்ந்தமிளகாய் -2
கறிவேப்பிலை -சிறிது
உப்பு -தேவையான அளவு
தேங்காய் துறுவல் -1/4கப்
எண்ணை -1ஸ்பூன்
கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு -1/2ஸ்பூன்

செய்முறை

A.இலையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.
B.வெங்காயம்,மிளகாய் நறுக்கிவைக்கவும்.
C.வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு தாளித்து வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
D.பாகற்காய் இலை போட்டு நன்கு வதக்கி அடுப்பை சிம்மில் வைத்து வேகவிடவும்.
E.வெந்ததும் உப்பு போட்டு தேங்காய்துறுவல் போட்டு வதக்கி இறக்கவும்.
F.சிறிது கசப்புடன் இருக்கும். மாதம் ஒருமுறை சாப்பிட்டால் வயிற்றில் உள்ள பூச்சிகள் போகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக