ஈசன் - விமர்சனம்
மீண்டும் ஒரு நல்ல சினிமாவை தந்திருக்கிறார் சசிக்குமார். கதை தான் ஹீரோ, கதைக்காக மட்டுமே கதாபாத்திரங்கள் என்பதை வைத்தே எடுக்கப்பட்ட படம். நகரத்தின் வாழ்கையை இதுவரை சொல்லாத கோணத்தில் சொல்லியிருக்கிறார். சுப்ரமணியபுரத்தில் இருந்து மாறுபட்ட களமாக இருந்தாலும் அதே கோபம் இந்தக் கதையிலும் இருக்கிறது.
செழியன் (வைபவ்) அமைச்சர் தெய்வநாயகத்தின் (ஏ.எல்.அழகப்பன்) மகன். தன் அரசியல் செல்வாக்குகள் அத்தனையும் தன்னிடம் தக்கவைத்துக் கொள்ள அமைச்சரின் அடுத்த நம்பிக்கையாக இருப்பது அவரின் மகன் செழியன் தான். அமைச்சர் மகன் என்பதால் இவர் நண்பர் கூட்டம் போடாத ஆட்டம் இல்லை. நகரத்தின் இரவு வாழ்கையை ஏகத்துக்கும் நேசிப்பவர்கள்.
குடியும் கூத்தும்தான் இவர்கள் வாழ்க்கை. இதை தட்டிக் கேட்கிற போலிஸ் அதிகாரியாக சங்கைய்யா (சமுத்திரக்கனி). தட்டிக் கேட்டாலும் என்ன பிரயோஜனம். அமைச்சர் மகனாச்சே. கரை வேட்டிகளிடம் போராடி தோற்றுப் போகும் ஒரு காக்கிச் சட்டைக்காரன். இந்தக் குடிகாரப் பைய செழியனுக்கும் இன்னொரு குடிகார பொண்ணுக்கும் காதல் வருகிறது. ( நல்ல வேளை டூயட் எதுவும் இல்லை )
அட ச்சே... இது என்னடா கதை! சசிக்குமார் ஏமாத்திட்டாரே... டைட்டிலுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்!! கொடுமைடா சாமி. படத்தை யாரோ டைரக்ஷன் பண்ண, பெயரை சசிக்குமார்ன்னு மாத்தி போட்டுட்டாங்க போல இருக்கு என்று ரசிகர்கள் நினைக்ககூடும். இப்படி நினைத்துக் கொண்டிருக்கிற வேளையில் செழியனை யாரோ தலை மேல் நச்சுன்னு அடிக்க... (நம்ப தலையிலையும் தான்) யாருடா நீ என்று செழியன் கேட்தும் 'ஈசன்' என திரையில் டைட்டில் விழுகிறது! இப்போ தான் இடைவேளை...
இதற்கு பிறகு தான் கதையே. வாய்பேச முடியாத அபினயா. ஈசனூர் கிராமத்தில் இருந்து சென்னை வந்து ஃபேஷன் டெக்னாலகி படிக்கிறார். இவருக்கு நடந்த கொடுமை. அந்தக் கொடுமைக்கு காரணமாய் இருந்தவர்கள் அதைவிடக் கொடுமையாய் பழித்தீர்க்கப் படுகிறார்கள். இந்தப் பிளானை ஸ்கெச் போட்டு நடத்துகிறவர் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் அபினயாவின் தம்பி ஈசன்.
முதல் பாதி டோட்டல் போர். 'சுகவாசி' பாடலை கட் பண்ணியிருக்கலாம். ஆனால் இரண்டாவது பாதியில் சொல்ல வந்த விஷயத்தை போல்டா சொல்லியிருக்கிறார் சசிக்குமார். இவர்தான் ஹீரோ, இவர்தான் ஹீரோயின் என்ற விதியை உடைத்து கதைக்காக படம் எடுத்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் தியேட்டரில் விசில் பறக்கிறது.
படத்தில் பாராட்டப் பட வேண்டிய முதல் கேரக்டர் சமுத்திரக்கனி. வேட்டையாடு விளையாடு - கமல், சிங்கம் - சூர்யா, சாமி - விக்ரம் இந்த ஹீரோயிசங்களை ஓரம் தள்ளி விட்டு, இயல்பான நடிப்பில் அசத்தி இருக்கிறார். போலிஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமான பொருத்தம். ஈசனாக நடித்திருக்கும் துஷ்யந்துக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. மிரட்டல் நடிப்பு. அபிநயா இதயத்தை நெகிழவைக்கிறார்.
ஏ.எல்.அழகப்பனை இன்னும் கொஞ்சம் நடிக்க வைத்திருக்கலாம். இருந்தாலும் அரசியல்வாதிக்கு ஏற்ற தோற்றம். இவருக்கு அசிஸ்டெண்டாக நமோ நாராயணன் (நாடோடிகள் படத்தில் பில்டப்புக்காக பேனர் வைத்துக் கொள்வாரே, அவரே தான்) 'விரலை விடு வாந்தி வரும்' - சீரியஸ் டைமிலும் ஜாலி காமெடி.
ஜேம்ஸ் வசந்தன் கதைக்கு தேவையான இசையை கொடுத்திருக்கிறார். 'ஜில்லா விட்டு' சுண்டக் கஞ்சி பாடலுக்கு க்ளாப்ஸ். க்ளைமாக்ஸ் காட்சிக்கும் பின்னணி இசையின் பங்களிப்பு சூப்பர். தெளிவான காட்சிகளுக்கு முக்கிய காரணம் ஒளிப்பதிவாளர் கதிர். அலட்டல்கள் இல்லாமல் எது தேவையோ அதை கொடுத்திருக்கிறார்.
செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளி மாணவர்களை பார்க்கும் போது, சின்ன வயசுலேயே கொலை செய்தவர்கள் என்கிற நெகடிவ் பார்வைதான் வரும். ஆனால் அவர்கள் கடத்து வந்த நியாயமான வாழ்க்கையையும் உண்மையையும் கண்டுபிடித்து படமாக்கிய சசிக்குமாருக்கு ஒரு சல்யூட்!
ஈசன் - மீண்டும் ஒரு நியாயமான கோபம்!
நன்றி,
நக்கீரன்.COM
நன்றி,
நக்கீரன்.COM
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக