சனி, 20 ஆகஸ்ட், 2016

ஆதி பகவன் யார்

ஆதி பகவன் யார் ? எது ?

-ஆ.ஜனார்த்தனம்

திருக்குறளுக்கு இணையான நூல் உலகில் எதுவும் இல்லை . சாதி , மதம் , இனம் , மொழி , நாடு கடந்து உலக மக்கள் அனைவரின் வாழ்க்கைக்கும் வழிகாட்டியாக உள்ள நூல் ; வாழ்வியல் நூல்.
 குறள் ஒன்றேமுக்கால் அடியில் ஏழு சீர்களில் அமைந்துள்ளது . ஒவ்வொரு சீரும் ஒரு கடல் .

"அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி
 குறுகத் தரித்த குறள் "

என்ற ஒளவையாரின் கூற்று மிகைப்படுத்தப்பட்டது அல்ல. நூற்றுக்கு நூறு உண்மை. குறளின் உண்மையான பொருளைக் கண்டறிய முற்படுவது என்பது ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுப்பதைப் போன்றது.

இவ்வாறு இருக்க , ஒன்றே முக்கால் அடியில் உள்ள குறளுக்கு அதைவிடச் சுருக்கமாக ஓரிரு வரிகளில் உரை எழுதுவதும் ,புரியாத இடங்களில் மழுப்பிவிட்டு செல்வதும் வேதனைக்குரியது .ஓர் உரையைப் புரிந்துகொள்ள மற்றோர் உரை தேவை என்ற நிலை இருக்கக் கூடாது .

ஒவ்வொரு சொல்லுக்கும் தெளிவான பொருள் வேண்டும். குறளின் உண்மையான பொருளைக் கண்டறிய வேண்டும். இதற்கும் வள்ளுவரே வழிகாட்டுகிறார். " மெய்ப்பொருள் காண்பது அறிவு " என்கிறார் . அதற்கு நுட்பமான ஆய்வும் , பின் தெளிவான விளக்கமும் தேவை .

முதல் குறளை எடுத்துக் கொள்வோம்.

" அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி

    பகவன் முதற்றே உலகு "


[ அதிகாரம் 1; கடவுள் வாழ்த்து; குறள் - 1 ]

அருஞ் சொற்பொருள்


அகர - அகரம் ; 'அ' என்ற எழுத்து ; மொழியின் முதல் எழுத்து .
முதல - முதல் ; முதல் எழுத்தாக உள்ளது
எழுத்தெல்லாம் - எழுத்துக்கள் எல்லாம் ; எல்லா எழுத்துக்களும்
ஆதி - முதல்
பகவன் - கடவுள்
ஆதிபகவன் - முதற்கடவுள்

இதில் ஆதிபகவன் , உலகு ஆகிய சொற்கள் ஆய்வுக்குரியவை. மொழியின் முதல் எழுத்தை இறைவனுக்கு எடுத்துக்காட்டாக வள்ளுவர் குறிப்பிடுவதும் ஆய்வுக்குரியது .

 ஆதிபகவன்


ஆதிமனிதன் , விலங்குகளைப் போல் காடுகளில் அலைந்து திரிந்தான். உணவுக்காகவும், தன்னைவிடக் கொடிய விலங்குகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் போராடினான் . குகைகளிலும் மரப்பொந்துகளிலும் வாழ்ந்தான் . நிர்வாணமாகத் திரிந்தான் .

அவன் அறிவு வளர்ச்சி அடையத் தொடங்கிய பொழுது நிர்வாணமாக இருக்க நாணமடைந்தான். இலை தழைகளையும் , மரவுரிகளையும் ஆடைகளாக அணிந்து கொண்டான் .

அவன் அறிவு மேலும் வளர்ச்சி அடைந்தபொழுது இயற்கை நிகழ்வுகளைப் பற்றி சிந்தித்தான். இடி, மின்னல் , மழை , வெள்ளம் , புயல் , நிலநடுக்கம் ஆகியவை அவனை அசச்சுறுத்திக் கொண்டிருந்தன. ஞாயிறு , திங்கள் , விண்மீன்கள் , இரவுபகல் மாறி மாறி வருவது ஆகியவை அவனுக்கு வியப்பூட்டின .இவற்றையெல்லாம் இயக்கக கூடிய ஏதோ ஒன்று இருக்க வேண்டும் என்று நினைத்தான் .அந்த உணர்வு மற்றும் சிந்தனையின் விளைவாக உருவான கடவுளையே முதற்கடவுள் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

அதற்குப் பின்னர் காலப்போக்கில் பல்வேறு கடவுளர்கள் தோற்றுவிக்கப்பட்டனர் . அவர்களுக்குள் உயர்வு தாழ்வுகளும் கற்பிக்கப்பட்டன. உருவ வழிபாடு ஏற்பட்டது . உயிர்ப் பலிகளும் இடப்பட்டன.இவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு ஆதிமனிதன் உணர்ந்த அந்த முதற்கடவுளையே ஆதிபகவன் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

கடவுள் நம்பிக்கையை வள்ளுவர் வலியுறுத்துகிறார் .வாழ்வில் துன்புற்று , எல்லா நம்பிக்கைகளையும் இழந்து நிற்கும் ஒருவனுக்கு கடைசிப் புகலிடமாக இருப்பது கடவுள் நம்பிக்கை மட்டுமே. அந்த நம்பிக்கையே அவனை வாழ வைக்கிறது .எனவேதான் வள்ளுவர் இறைவனை உலகமக்கள் அனைவருக்கும் முதல்வன் , தலைவன் என்று கூறுகிறார்.

உலகு


'உலகு' என்ற சொல் மக்களை மட்டுமே குறிக்கும் . கல்லையும் , மண்ணையும் , மரம் செடி கொடிகளையும் , விலங்குகளையும் குறிக்காது .மரம் , செடி , கொடிகளுக்கும் , விலங்குகளுக்கும் கடவுளைப்பற்றிய உணர்வோ , சிந்தனையோ கிடையாது . மேலும் திருக்குறள் மக்களின் வாழ்வியல் நூல் என்பதால் 'உலகு' என்ற சொல் மக்களை மட்டுமே குறிக்கும் என்பது புலனாகிறது .

இறைவனுக்கு எடுத்துக்காட்டு

மொழியின் முதல் எழுத்தை இறைவனுக்கு எடுத்துக்காட்டாக வள்ளுவர் குறிப்பிடுவது சிந்தனைக்குரியது . மொழிதானே மனிதனின் அடையாளம் . மொழி இல்லையேல் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.

இவற்றையெல்லாம் உள்வாங்கிக்கொண்டு , வள்ளுவர் படைத்தளித்த முதல் குறளின் பொருளை சுருக்கமாகப் பின்வருமாறு கூறலாம்.

" அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
  பகவன் முதற்றே உலகு "

" எழுத்துக்கள் எல்லாம் 'அ' என்ற எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்டுள்ளன . அதுபோல இவ்வுலகில் வாழும் மக்கள் இறைவனைத் தங்கள் முதல்வனாகவும் , தலைவனாகவும் கொண்டுள்ளனர் . " 

 -ஆ.ஜனார்த்தனம் , ஆசிரியர் ( ஓய்வு )
சேலம் .
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக