திங்கள், 8 ஆகஸ்ட், 2016

என்ன செய்யும் ஈ

என்ன செய்யும் ஈ


அன்று பாலக்காடு வரைப் போக வேண்டி இருந்தது . காரில் லக்கேஜுகளையும் , குடும்பத்தையும் நிரப்பி காரைக் கிளப்ப நினைக்கையில் காரின் உள்ளே ஒரு ஈ எப்படியோ புகுந்து விட்டிருந்தது.

கண்ணாடியை இறக்கி வாயால் ஊதியும் , கையை வீசிப் பார்த்தும் வேலைக்கு ஆகவில்லை . வெளியே போக வில்லை . நேரம் ஆனதால் வண்டியை கிளப்பினேன். அப்பப்ப கண்ணாடி முன்னும் முகத்துக்கு முன்னும் ஈ வந்து வட்டம் போடும் போதெல்லாம் நான் நைஸாக கிளாஸை இறக்குவதும் , அது நைசாக உள்ளே சென்றுவிடுவதும் தொடர்ந்தது.

இளையராஜா 4 ஸ்பீக்கரிலும் இசையை வழியவிட்டு கொண்டு இருந்தாராகையால் சிறிது நேரத்தில் நான் ஈயை மறந்துவிட்டேன். வழியில் டீ குடிக்க நிறுத்திய போதும் அதைக் காணவில்லை.

பாலக்காட்டுக்குப் போய் எல்லோரும் இறங்கி , எல்லா லக்கேஜையும் இறக்கிவிட்டு மரத்தடியில் ஓரமாக காரை நிறுத்தி இறங்க முற்படும்போது 'ங்கோய்ங் ..' என முன்னால் வந்து பறந்தது .நீ இன்னுமா உள்ளே இருக்கிறாய் என கேட்டுவிட்டு சிறிது நேரம் கதவைத் திறந்து வைத்தேன் . ஒருவழியாக வெளியே பறந்தது.

மதிய உணவை முடித்துவிட்டு பலா மரத்தடியில் சேரைப் போட்டு அமர்ந்திருந்த வேளையில் அந்த ஈயின் நினைப்பு வந்தது. நான் பாட்டுக்கு அதை சேலத்தில் இருந்து பாலக்காட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டேன்.

இப்போ அந்த ஈ என்ன செய்யும்...!?

சேலத்தில் அதன் சொந்தகார ஈக்கள் தேடுமா ... இங்குள்ள ஈக்கள் அதை சேர்த்துக்கொள்ளுமா .. தமிழ்நாட்டு ஈக்கு கேரளா ஈ பாஷை புரியுமா...

இங்கே அதுக்கு ஜோடி கிடைக்குமா...
அது ஆண் ஈயா இல்லை பெண் ஈயா என வேறுத் தெரியவில்லை ....
எப்படியும் நம்ம ஊர் ஈயை விட கேரளா ஈ கொஞ்சம் சுத்தமாக வேறு இருக்கும்....
அவை சேர்த்துக் கொள்ளுமா ....
பிரெண்ட்ஸ் கெடைப்பாங்களா ...

அடடடா.. ஒரு ஈயோட வாழ்க்கைல விளையாண்டுட்டோமே ...!

என்ன செய்யும் ஈ ...!

- மோகன் , சேலம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக