ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

தேவை ஒரு சுறுசுறுப்பான முதல்வர்

 தேவை ஒரு சுறுசுறுப்பான முதல்வர்


இது அரசியல் பதிவுதான் . ஆனால் அனைவரும் படிக்க வேண்டிய அவசியமான பதிவு .

சுறுசுறுப்பாக மக்களோடு பழகும் ஒரு முதல்வர் தமிழகத்திற்கு கிடைக்க மாட்டாரா...

வயோதிகத்தில் கலைஞர்
நடக்க முடியாத பிரச்சனையில் ஜெயலலிதா 
தைராய்டு, டான்சில் , கல்லீரல் பிரச்சனைகளில் விஜயகாந்த்
ஏதோ பெரிய பிரச்சனைக்காக லண்டனில் சிகிச்சை பெற்றுவரும் ஸ்டாலின்
இருதய அறுவைசிகிச்சை செய்து ஓய்வில் உள்ள இளங்கோவன் 

இவர்களை தவிர்த்து பார்த்தால் அன்புமணி மட்டுமே ஆரோக்யமான நபராக இருக்கிறார். அவர் முதல்வர் வேட்பாளராக சொன்னாலும் இந்த தேர்தலில் அவர் முதல்வராகும் வாய்ப்பு ஒரு சதவீதம் கூட இல்லை. ஸ்டாலின் நமக்கு நாமே என எல்லா ஊரும் சுற்றி காட்டினாலும் அவை எல்லாமே மிகவும் பக்காவாக திட்டமிடப்பட்டு தினமும் ஒரு மணிநேரம் நடத்தப்பட்ட நிகழ்சிகள் . முதல்வர் ஆனால் அவரால் மக்களோடு இறங்கி பணிபுரிய முடியுமா என்பது கேள்விக்குறி . மேலும் ஸ்டாலினின் ஆரோக்கியம் குறித்து அழகிரி ஒருமுறை சொன்னதும் அதற்கு கலைஞர் வருந்தியதும் தெரிந்த விஷயம்.

வைகோ சுறுசுறுப்பாக மக்களோடு மக்களாக காலத்தில் நிற்ப்பவர்தான். ஆனால் அவரும் முதல்வர் போட்டியில் இல்லை. சகாயம் போன்றவர்கள் எல்லாம் வெறும் கனவு நாயகர்கள் மட்டுமே. அப்படியென்றால் யாருக்குமே வயதாகாது , நோய் வராது என சொல்லவில்லை . 8 கோடி மக்களின் தலைவர் அந்த மக்களுக்காக காலத்தில் நிற்கவேண்டும் என சொல்கிறேன்.

அப்துல் கலாம் அய்யா இறக்கும் நொடி வரை மக்களோடு இருந்தார். 88 வயது பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் இன்னமும் வாரம் ஒரு குக்கிராமத்திற்கு சென்று மக்களை சந்திக்கிறார். 70 வயது உம்மன் சாண்டி ரயிலில் மக்களோடு பயணிக்கிறார். சர்ச் வாசலில் தரையில் அமர்ந்து மக்களோடு பேசுகிறார்.70 வயது ரங்கசாமி பைக்கில் போகிறார். டீக்கடையில் நின்று டீ குடிக்கிறார். 60 வயதை கடந்த சந்திரபாபு நாயுடு பெருமழையின் போது சாலையில் இறங்கி போராடுகிறார். சாக்கடையில் இறங்குகிறார். அரவிந்த் கேஜ்ரிவாலை பற்றி சொல்ல தேவையில்லை .
தமிழகத்தை பொறுத்தவரை காமராஜரின் கால்கள் மட்டுமே தமிழகத்தின் குக்கிராமதிற்கும் சென்றது . அதன் பின் எம்ஜியார் வாகனத்தில் சென்றவாராவது மக்களை சந்தித்தார். அதன் பிறகான இந்த 30 ஆண்டு காலத்தில் தேர்தல் பிரசாரத்தின் போதும் , பொதுக் கூட்டங்களிலும் மட்டுமே முதல்வரை பார்க்க முடியும் என்று ஆனது.

இத்தனை லட்சம் உறுப்பினர்களை கொண்ட திமுகவிலும் , அதிமுகவிலும் ஒரு இளம் தலைவரை உருவாக்குவது முடியாத காரியமில்லை. செய்யவேண்டும். அதே நேரத்தில் இவர்களின் அனுபவம் பெரியது . எனவே பின்னால் இருந்து வழி நடத்தட்டும்.

எங்களுக்கு தேவை மக்களோடு இருக்க கூடிய ஒரு தலைவர் அவ்வளவுதான். கேரளாவைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக